கவிதைக்காரர்கள் வீதி





தொலைந்தது
திருவிழாவில்
தொலைந்துபோன குழந்தைகள்
இன்னமும் தேடுகின்றன
தொலைந்து போன
திருவிழாக்களை!
- நா.கி.பிரசாத், கோவை.

குழந்தை வரம்
கடவுளைக்
கடவுளிடமே
வரமாகக் கேட்கிறோம்.
- கா.சிவபாலன், கட்டுமாவடி.

தேடல்
எங்கே அவர்கள்
என்று கேட்டபடி
வியாபாரியிடமிருந்து
பிரிந்து
குழந்தைகளைத் தேடி
ஓடுகின்றன
கடற்கரையில் பலூன்கள்
- அக்னிபுத்ரன், சென்னை.

கவலை
பெய்யும் மழை
பிடிக்கவில்லை
குழந்தையின் கவலை
மூழ்கும் கப்பல்
- மா.கண்ணன், ராஜபாளையம்.

மனசு
ஜெயிப்பதற்கு
மனமே வருவதில்லை
குழந்தைகளுடன்
விளையாடும்பொழுது!
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

ரகசியம்
ஏதோ ஒரு ரகசியத்தை
என் காதில்
சொல்லிவிட்ட சந்தோஷம்
குழந்தைக்கு
ஒன்றும் புரியாத
அவஸ்தை எனக்கு!
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.