சிங்கம் ஆகிறார் பிரகாஷ்ராஜ்...





விஜய்யை உயரத்துக்கு ஏற்றிய ‘பிரியமுடன்’, ‘யூத்’ படங்களின் இயக்குநர் வின்சென்ட் செல்வாவுக்கு தமிழ் இயக்குநர்களில் முக்கியமான இடம் உண்டு. சினிமாவைக் கல்வியாகக் கற்றவர்; சென்னை திரைப்படக் கல்லூரியின் தங்கப் பதக்க மாணவர். அப்போதே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டுச் சந்தித்த அதே கல்லூரியின் முன்னாள் மாணவரான பிரகாஷ்ராஜ், ‘‘என்ன பாடுபட்டாவது தமிழ் சினிமால டைரக்டராகாம விட்டுடாதீங்க...’’ என்று வாழ்த்தி, நட்பு பாராட்டியிருக்கிறார்.



‘‘ஆனா தமிழ் சினிமாவில டைரக்டராகி என்னோட ஏழாவது படத்துலதான் அவரை இயக்க முடிஞ்சிருக்கு...’’ என்று சிரிக்கும் வின்சென்ட் செல்வா, இப்போது ஆர்.பி.ஸ்டூடியோஸுக்காக இயக்கியிருக்கும் படம் ‘துள்ளி விளையாடு’. இந்தப்படத்தில் அறிமுகமாகும் யுவராஜுடன் முக்கிய வேடத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

‘‘படத்துக்கு உயிர்நாடியே அவர்தான். நாங்க இந்தப் படத்துக்காக அவரை சந்திச்சப்ப தமிழ், தெலுங்கு, இந்தின்னு படு பிஸியா இருந்தார். ஆனா நான்தான் டைரக்டர்ங்கிறதையும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளர் பூபதிங்கிறதையும் கேள்விப்பட்டு எங்களுக்காக நடிக்க ஒத்துக்கிட்டார். ஏன்னா, நான் இன்ஸ்டிடியூட்ல மேற்படி கோல்ட் மெடல் வாங்கிய படத்துக்கு பூபதிதான் கேமரா பிடிச்சார். பிறகு பிரகாஷ்ராஜ் நடிச்ச ‘அந்தப்புரம்’ படத்துக்கும் பூபதிதான் கேமராமேன். இந்தக் காரணங்களால எங்கமேல நம்பிக்கை வச்சு டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணி நடிச்சார். அவருக்காக நான் உருவாக்கியிருந்த கேரக்டரைசேஷனும் அதுக்கு ஒரு காரணம்...’’ என்ற செல்வா தொடர்ந்தார்.



‘‘படத்தோட லைன், சீக்கிரமா பணக்காரர்களாகத் துடிக்கிற மூணு இளைஞர்களைப் பற்றியது. அதுல யுவராஜோட பரோட்டா சூரியும், சென்ராயனும் நடிச்சிருக்காங்க. வஞ்சிர மீனுக்கு வலைவீசிக் காத்திருக்கற இவங்க கைல எதிர்பாராம ஒரு திமிங்கலமே வந்து சிக்குது. திக்குமுக்காடிப் போயிடறவங்க பிரகாஷ்ராஜோட துரத்தலுக்கும் இலக்காகறாங்க. ஏரியா தாதாவா இருக்கிற ஜெயப்பிரகாஷோட வளர்ப்பு வாரிசா வர்றவர்தான் பிரகாஷ்ராஜ். அவர் கூப்பிட்டு ஒருத்தரை சாப்பிடச் சொன்னாலே அவங்க சப்தநாடியும் ஒடுங்கிடுவாங்க. ஏன்னா, சாப்பாடு போட்டு பின்னியெடுத்திடுவார் அவர். படத்துல அவர் பேரு ‘சிங்கம்’. அத்தனை கோபமும் உக்கிரமும் இருந்தாலும், அதெல்லாம் வெளியே தெரியாம ஜாலியா ராஜ் கபூர் படங்களோட இசையை ரசிச்சுக்கிட்டு ஒரு மியூசிக்கல் வில்லனாதான் வளைய வருவார்.

ரெண்டு நிமிஷத்துக்கு அவரே விளக்கற அவரோட காதல் ஃபிளாஷ்பேக் ஒண்ணு படத்துல வருது. அதை அனுபவிச்சு நடிச்சவர், அதைப்பத்தி தன் சினிமா நண்பர்கள்கிட்டயெல்லாம் சொல்லிச் சொல்லி ரசிச்சார். ஆரஞ்சு ஜிப்பா, பச்சை வேட்டி, ரேபான் கூலர்னு படு கலர்ஃபுல்லா இதுல நடிக்கிற அவரோட காஸ்டியூமைப் பார்த்துட்டு அவர் இந்தியில நடிக்கிற ‘தபாங் ரெண்டாவது பார்ட்’லயும் அதே காஸ்டியூமை செலக்ட் பண்ணிட்டாங்க. அவரோட பல காட்சிகளை ஜெய்சால்மர்ல எடுத்தோம். அப்ப பக்கத்துல பாகிஸ்தான் பார்டருக்குப் போய் ஜீப் சவாரி பண்ணி சந்தோஷப்பட்டார். ‘சிங்கம்’ இந்திப் படத்தால அவர் நார்த்லயும் பிரபலமாகிட, அங்கே அவரைப் பார்த்ததுமே அவர் கேரக்டரான



‘கனிபாய்’ பேரைச் சொல்லி அவர் கால்ல விழுந்தாங்க. அவரோட ஒத்துழைப்பைப் பார்த்து அவருக்கு ஒரு ஐட்டம் நம்பர் பாட்டு வச்சுட்டேன். 

படத்துல யுவராஜ் ஜோடியா தீப்தி நடிச்சிருக்காங்க. ஸ்ரீகாந்த் தேவா இசைல நாலு பாடல்களும் நாலு வெரைட்டில இருக்கும். அதுல ‘சலாம் பாபு’ங்கிற பாடலுக்கு மிஷ்கினை பாடவச்சு எடுத்தேன். காமெடி அட்வென்ச்சரா நகர்ற படத்தை ரெண்டரை மணி நேரம் சிரிச்சு ரசிக்க முடியும்...’’
- வேணுஜி