டாஸ்மாக் இல்லாமலே $18,000 கோடி வருமானம் ஈட்டலாம்!





தமிழினம் பெருமிதப்படும்படியாக ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்தியாவிலேயே மது விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டும் நம்பர் 1 மாநிலம் தமிழகம்தான். கடந்த நிதியாண்டில் ரூ.18,000 கோடி வருமானம். வரும் நிதியாண்டில் இதை ரூ. 21 ஆயிரம் கோடியாக உயர்த்த அதி தீவிரமாக திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘குடி’மக்களின் தரத்தை உயர்த்த எலைட், 24 மணி நேர கடைகள் என அணிவகுக்கின்றன.

இந்தியாவில் வேறெங்கும் நிகழாத இந்த அவமானத்தை, ‘இலவசப் பொருட்கள் வழங்குவதற்கான நிதியாதாரம்’ என்று நியாயப்படுத்துகிறது அரசு. ஆனால், ‘‘ஒவ்வொரு குடிமகனும் டாஸ்மாக்கில் இழக்கும் தொகையோடு ஒப்பிட்டால், அரசு வழங்கும் இலவசங்கள் துளியளவுதான். மதுக்கடைகள் இல்லாமலே ரூ.18 ஆயிரம் கோடி வருமானத்தை எளிதாக ஈட்ட முடியும்...’’ என்கிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் ‘தமிழருவி’ மணியன். இதுதொடர்பாக ஒரு திட்ட அறிக்கையையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

‘‘இந்திய அரசியல் சட்டப் பிரிவு 47, மதுவிலக்கை அமல் படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. ஆனால் குஜராத்தை தவிர வேறெங்கும் இந்த விதி பின்பற்றப்படவில்லை. மக்களின் உடல்நலத்தையும், மன வளத்தையும் பேணிக் காக்காத அரசுகளே இன்றைய அவலம்’’ என்கிறார் தமிழருவி.

‘‘1983ல் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. 2003ல் தற்போதைய முதல்வர் மதுவிலக்குச் சட்டத்தைத் திருத்தி, மதுக்கடைகள் நடத்தும் ஏகபோக உரிமையை டாஸ்மாக்கிடம் வழங்கி மோசமான ஒரு முன்னுதாரணத்தைத் தொடங்கி வைத்தார். டாஸ்மாக்கைத் தொடங்கிய தருணத்தில் அதன் ஆண்டு வருவாய் ரூ.183 கோடி. இன்று ரூ.18,081 கோடி. 20 ஆண்டுகளில் 200 மடங்கு உயர்வு. மது வருவாயில் இந்தியாவிலேயே நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம். இதற்காக முதலில் வெட்கப்பட வேண்டும்.

பள்ளிப்பிள்ளைகள்கூட இன்று மதுவுக்கு அடிமையாகியுள்ளார்கள். மது அருந்தினால் சமூக அந்தஸ்து உயரும் என்ற எண்ணம் இளம்தலைமுறைக்கு உருவாகியுள்ளது. இப்போது ‘எலைட்’ பார் என்ற பெயரில் வெளிநாட்டு மதுவகைகளுக்கான கடைகளையும் திறக்கப் போகிறார்கள். தமிழக மக்கள் 7 கோடி பேரையும் குடியில் ஆழ்த்துவதுதான் அரசின் இலக்கு போலிருக்கிறது.

டாஸ்மாக்கை மூடிவிட்டால் சமூக நலத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது? மானியங்களுக்கான நிதியாதாரத்தை எங்கிருந்து திரட்டுவது என்று கேள்வி எழலாம். அதற்கு ஏராளமான வழிகள் உண்டு.

உதாரணத்துக்கு, 2008-11 நிதியாண்டுகளில் மருத்துவ ரீதியாக விற்கப்படும் மதுவின் மீதான வரிகள் மூலம் குஜராத் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.54.90 கோடி. அதே காலத்தில் தமிழக அரசுக்கு மதுவால் கிடைத்த சராசரி வரி வருவாய் ரூ.12,415 கோடி. ஆனால், குஜராத் மாநிலத்தின் (ஜிஎஸ்டிபி) மொத்த உற்பத்தி வரி வருவாய் 7.6 சதம். தமிழகத்தில் மது வருவாய் தவிர்த்து வரி வருவாய் 6.15 சதம். மது விற்பனை செய்யாமலே தமிழகத்தை விட குஜராத் அதிக வருவாயை ஈட்டுகிறது. வரி வருவாய்களில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தினால், மது வருவாயை விட கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

விற்பனை வரியை திட்டமிட்டு வசூலிப்பதன் மூலம், டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டலாம். பிற மாநிலங்களை விட தொழில், பணி உற்பத்திப் பங்களிப்பை கூடுதலாகப் பெற்றிருக்கும் தமிழகம், வரி வருவாய் விகிதத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும்.



அடுத்து முத்திரை வரி. நகரப்புறங்களில் நிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டு விலைக்கும், சந்தை விலைக்கும் சம்பந்தமே இல்லை. சென்னையில் 1 கோடி விலைபோகும் 1000 சதுர அடி அடுக்ககம் 30 லட்ச ரூபாய்க்குத்தான் பதிவு செய்யப்படுகிறது. வழிகாட்டி விலையை சரியாகத் தீர்மானிப்பதன் மூலம் இப்போது இருப்பதை விட 3 மடங்கு முத்திரை வரியை ஈட்டலாம்.

மதுவை நேரடியாக விற்கும் அரசு, அதைத் தவிர்த்து மணலை நேரடியாக விற்கலாம். 1 யூனிட் ஆற்று மணலுக்கு அரசு நிர்ணயித்த விலை ரூ.315. அதை வாங்கி, வெளியில் 2460 ரூபாய்க்கு விற்கிறார்கள். 1 யூனிட் மணலுக்கு 2145 ரூபாய் லாபம். அரசே மணல் விற்பனையை ஏற்று நடத்துவதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். மணல் விற்பனையும் முறைப்படுத்தப்படும்...’’ என்கிற மணியன், ‘‘இலவசத் திட்டங்கள் மூலம் அரசு ஏழ்மையை அகற்ற முயல்வது ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் சேகரிப்பதைப் போன்றது’’ என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

‘‘2011-12ல் டாஸ்மாக் வருமானமே ரூ.18 ஆயிரம் கோடி என்றால், டாஸ்மாக்கின் மொத்த விற்பனை சுமார் ரூ.40 ஆயிரம் கோடி. இந்த 40 ஆயிரம் கோடி ரூபாயும் மக்கள் கையில் இருந்தால் அவர்கள் ஏன் இலவசத்தை எதிர்பார்க்கப் போகிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு விலையில்லா அரிசியும், அத்தியாவசிய உணவுப் பொருட்களும் வழங்குவது நியாயம். ஆனால் இதர இலவசங்கள் தேவையற்றது. இவற்றை விட மது விலக்கால் மக்களுக்கு ஏற்படும் பலன்கள் அதிகம்.

இலவசத் திட்டங்களுக்கு மது வருவாய் தேவை என உருவாக்கப்படும் பிம்பமே பொய்யானது. மத்திய அரசு அரிசிக்கு நிர்ணயித்துள்ள அதிகபட்ச விலை ரூ.8.30. இந்த விலையை வைத்துப் பார்த்தால் கூட ஒரு குடும்பத்துக்கு மாதம் 20 கிலோ வீதம் 5 ஆண்டுகள் வழங்கப்படும் அரிசிக்கு அரசு செலவழிக்கும் தொகை வெறும் 9,960 ரூபாய்தான். ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 2,700 ரூபாய். மிக்சி 800 ரூபாய். கிரைண்டர் 1,500 ரூபாய். மின்விசிறி 500 ரூபாய். மொத்தம் 15,460 ரூபாய்.

ஆனால் குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு ஏழை, ஒவ்வொரு நாளும் ஒரு குவாட்டர் பிராந்தி வாங்கினால், 5 ஆண்டுகளில் அவன் டாஸ்மாக்குக்குக் கொடுக்கும் தொகை 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய். இது எவ்வளவு பெரிய அநீதி. தாலிக்கு தங்கம், லேப்டாப், ஆடு, மாடெல்லாம் கொடுத்தாலும் கூட இழக்கும் பணத்துக்கு ஈடாகாது. நிதி மேலாண்மையில் நடக்கும் தவறுகளும், தேவையற்ற செலவுகளும், வீண் விரயங்களும் சரி செய்யப்பட்டாலே சாராய வருவாய் இல்லாமல் சாதனை படைக்கலாம்’’ என்கிறார் தமிழருவி மணியன்.
இது அரசுக்குப் புரியவேண்டும்.
- வெ.நீலகண்டன்



குடிபோதையால் ஏற்படும் விபத்து காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். லட்சக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளார்கள். 1970க்கு முன்பு மதுவிலக்கு அமலில் இருந்த காலங்களில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக ஆண்டுக்கு 500 பேர். மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் வந்துவிடும் என்று சப்பைக்கட்டு கட்டுபவர்கள் 10 ஆயிரத்துக்கும், 500க்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும்.

13 வயது குடியர்கள்!

15ஆண்டுகளுக்கு முன்பு, சராசரியாக 25 வயதுக்கு மேற்பட்டவர்களே மதுவுக்கு அறிமுகமானார்கள். தற்போது 13 வயதிலேயே மது அறிமுகமாகி விடுகிறது. ‘‘13 முதல் 21 வயது வரை உடல் உறுப்புகள் வேகமான வளர்ச்சியை எட்டுகின்றன. அந்த வயதில் மது அருந்துவது உறுப்புகளைச் சிதைத்து நிரந்தர நோயாளியாக மாற்றிவிடும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். ‘13 வயதில் குடிக்கத் தொடங்கும் 10ல் 4 பேர் 25 வயதில் இறக்க நேரிடும்’ என்கிறது இன்னொரு ஆய்வு.

உடனடி தேவை

*  ஒரேநாளில் மதுவிலக்கைக் கொண்டு வரமுடியாது. முதற்கட்டமாக ஒருநாளைக்கு 5 மணி நேரம் மட்டும் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும்.

*  பார்களைத் தடை செய்ய வேண்டும். பாரிலும், பொது இடங்களிலும் குடிப்பவர்களை தண்டிக்க வேண்டும். வீட்டுக்கு வாங்கிச்சென்றே குடிக்கும் நிலையை ஏற்படுத்தினால் பலர் குடிப்பதை நிறுத்துவார்கள். குறிப்பாக சிறுவர்கள்.

*  குடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும். எலைட் பார் திட்டத்தைக் கைவிட வேண்டும்.