கடந்த இதழ்களில் யு.பி.எஸ்.சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை அலசினோம். ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்க பல ஆலோசனைகளையும் நுணுக்கங்களையும் வழங்கினோம். நம்மில் பலருக்கும் ஐ.ஏ.எஸ் தேர்வைப் பற்றித்தான் தெரிகிறதே தவிர, யு.பி.எஸ்.சி என்னும் மத்திய அரசு தேர்வாணையம் வருடம்தோறும் நடத்தும் மேலும் 12 தேர்வுகளைப் பற்றித் தெரிவதில்லை. தெரிந்தவர்களும் ஐ.ஏ.எஸ் தேர்வைப் போல மற்றவற்றில் கவனம் செலுத்துவதில்லை. ‘‘மற்ற தேர்வுகளும், அதனால் கிடைக்கப் பெறும் பணிகளும் கூட மிகவும் மதிப்பு வாய்ந்ததுதான்’’ என்கிற ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் இயக்குனர் சங்கர், அவற்றில் சிலவற்றை இங்கே விவரிக்கிறார்...
‘‘யு.பி.எஸ்.சி. வருடத்துக்கு ஒருமுறை வனத்துறை அதிகாரிகளுக்கான தேர்வு நடத்துகிறது. இதை ஐ.எஃப்.எஸ்... அதாவது, இண்டியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் என்பார்கள். ஆண்டுக்கு சுமார் 85 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்தப் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. காலியிடங்கள் குறைவு என்றாலும் இது நாட்டின் அதி முக்கிய பதவி.

இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு பொதுவாக ஏப்ரல் மாத வாக்கில் வெளியாகும். ஜூலை மாதத்தில் தேர்வுகள் இருக்கும். கல்வித் தகுதி டிகிரிதான். ஆனால், இந்த டிகிரி கலைப் பாடங்களிலோ மருத்துவத் துறையிலோ இருக்கக் கூடாது. அறிவியல், பொறியியல் போன்றவற்றில் பெற்ற டிகிரியே செல்லுபடியாகும்.
இதில் இரண்டு கட்ட தேர்வு மட்டுமே! ஒன்று, மெயின் எனும் முதன்மைத் தேர்வு... அதில் தேறியதும் நேர்முகத் தேர்வு. முதன்மைத் தேர்வில் மொத்தம் ஆறு தாள்கள். எல்லாமே டிஸ்கிரிப்டிவ் எனப்படும் விரிவாக எழுதும் தாள்கள். ஆறு தாள்களில் ஒன்று பொது ஆங்கிலம். இரண்டாவது தாள் பொது அறிவு. நாம் தேர்ந்தெடுக்கும் இரண்டு விருப்பப் பாடங்களிலிருந்து ஒரு பாடத்துக்கு இரண்டு தாள்கள் வீதம் மீதமிருக்கும் நான்கு தாள்கள் தரப்படும். ஒவ்வொரு தாளுக்கும் எழுதும் நேரம் மூன்று மணிநேரம். ஆங்கிலம், பொது அறிவுக்கு தலா முந்நூறு மதிப்பெண் என்றால், விருப்பப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் இருநூறு மதிப்பெண்கள். ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்.
பொது ஆங்கிலத் தாளில் அதிக மதிப்பெண்களைத் தரும் நீண்ட கட்டுரைப் பகுதி ஒன்று இருக்கும். அடுத்து காம்ப்ரிஹென்ஷன். ஒரு பத்தியைக் கொடுத்து அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பிறகு ஆங்கில இலக்கணம் தொடர்பான கேள்விகள். இறுதியாக கடிதம் எழுதும் பகுதி. இந்தத் தாளில் வெற்றி பெறுவது மிகவும் சுலபமே.
அடுத்து, பொது அறிவு. இந்திய அரசியலமைப்பு, இந்திய சட்ட அமைப்பு, இந்திய வரலாறு மற்றும் இந்தியப் புவியியல்... இதுதான் இந்தத் தேர்வுக்கான பாடத் திட்டம். இந்தத் தாளில் வென்றால்தான் மற்ற தாள்களைத் திருத்துவார்கள். சிறுசிறு கேள்விகளே அதிகம் இருக்கும் என்பதால் வெல்வதும் சுலபம்தான்.
அடுத்து ஆப்ஷனல் என்ற விருப்பப் பாடங்கள். இதில் ஒவ்வொன்றையும் பகுதி ஒன்று, பகுதி இரண்டு என்று தனித்தனியாகப் பிரித்திருப்பார்கள். ஒவ்வொரு பகுதியிலும் நான்கு வீதம் மொத்தம் எட்டு கேள்விகள். இவற்றில் ஐந்துக்கு பதிலளித்தால் போதும். இறுதியாக நேர்முகத் தேர்வு. இதற்கு முந்நூறு மதிப்பெண்கள். இதில் ஜெயித்தால், அடுத்து நீங்கள்தான் வனத்துறை அதிகாரி.

யு.பி.எஸ்.சி நடத்தும் இன்னொரு மதிப்பு வாய்ந்த தேர்வு, சி.பி.எஃப் எனப்படும் சென்ட்ரல் போலீஸ் ஃபோர்ஸ். அதாவது மத்திய காவல் படை. இந்தப் பதவியை அசிஸ்டென்ட் கமாண்டன்ட் என்றும் அழைக்கலாம். இது நம்ம ஊர் டி.எஸ்.பி. ரேங்குக்கு சமமானது. இந்தத் தேர்வு மூலம் குறைந்தது ஐநூறுக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொதுவாக ஜூலை மாதங்களில் இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்குக் கல்வித் தகுதி ஏதேனும் டிகிரிதான். இதன் எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள். ஒன்று ஜெனரல் எபிலிட்டி எனப்படும் பொது திறனறிவு. இது ‘ஒரு சொல்’ வகையிலானது. இரண்டாவது ஜெனரல் ஸ்டடீஸ் எனும் பொதுப் படிப்பு. இது விரிவாக பதில் எழுதும் பகுதி.
பொது திறனறிவுத் தாளில் நூற்றி இருபத்தைந்து கேள்விகள். ஒரு கேள்விக்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 250 மதிப்பெண்கள். இந்தத் தாளின் பாடத்திட்டங்களாக லாஜிக்கல் ரீசனிங் எனப்படும் தர்க்க அறிவு, அளவுகளைக் கணிக்கும் கணித அறிவு, டேட்டா இன்டர்பிரடேஷன் என்ற புள்ளி விவரங்களைக் கணக்கிடுதல் என்பவையும், பொது அறிவியல் தலைப்பில் தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, சுற்றுச்சூழல் போன்றவற்றிலும், கரன்ட் அஃபயர்ஸ் என்பதில் தேசிய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் என்பவையும் இடம்பெறும். இவை தவிர, இந்திய அரசியல்-பொருளாதாரம், இந்திய மற்றும் உலக புவியியல் குறித்த கேள்விகளும் இருக்கும்.
ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும் இரண்டாம் தாள், இரண்டு பகுதி களாக இருக்கும். முதலாவதில் கட்டுரை வடிவ கேள்விகள். இதற்கு எண்பது மதிப்பெண்கள். இரண்டாவதில் ஆங்கில அறிவை சோதிக்கும் காம்ப்ரிஹென்ஷன். கட்டுரைப் பகுதிக்கு மாநில மொழியில் பதில் எழுதலாம். கட்டுரைக்கான பாடத்திட்டமாக நவீன இந்திய வரலாறு, இந்தியப் புவியியல், பொருளாதாரம், மனித உரிமை போன்றவை உள்ளன. காம்ப்ரிஹென்ஷனில் ஆங்கில இலக்கணம், மொழி, கம்யூனிகேஷன் ஸ்கில் போன்றவற்றில் கேள்விகள் இருக்கும்.
எழுத்துத் தேர்வுக்குப் பிறகு உடல் தகுதித் தேர்வு நடைபெறும். அடுத்தது மருத்துவ சோதனை. இறுதியாக நேர்முகத் தேர்வு. இதிலும் ஜெயித்தால் கையில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்தான்.
இந்தத் தேர்வில் ஜெயிக்கும் நபர்கள் பல்வேறு பிரிவுகளில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். உதாரணமாக பி.எஸ்.எஃப். எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை, சி.ஆர்.பி.எஃப். என்ற சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ், சி.ஐ.எஸ்.எஃப். எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை போன்றவற்றில் பணியமர்த்தப்படலாம்’’ என்றார் சங்கர்.
மேற்சொன்ன இரண்டு வேலைகளுமே பாதுகாப்பு தொடர்பானவை. தில் இருந்தால் அள்ளி விடலாம் இந்த வேலைகளை!
- டி.ரஞ்சித்