* டாப்ஸியை காதலிப்பது தொடர்பாக ஒரு பார்ட்டியில் நடிகர் மஹத்தை மோகன்பாபுவின் மகனும் நடிகருமான மனோஜ் மஞ்சு தாக்கிய விவகாரம் லேட்டஸ்ட் பரபரப்பு!
* இதேபோல ஒரு பார்ட்டியில் எஸ்.பி.சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை சோனா புகார் செய்தார்.
* நடிகை ப்ரியாமணி தொடர்பான பார்ட்டி நியூஸ்களுக்கும் குறைவில்லை.
- பாட்டிலும் பார்ட்டியும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சங்கள் ஆகிவிட்டன. எதற்கு நடக்கின்றன இப்படிப்பட்ட பார்ட்டிகள்?
டாப்ஸி பஞ்சாயத்துக்குக் காரணமான பார்ட்டியை நடத்தியது தொழிலதிபர் பிரமோத் ரானா. இவரது பங்களா சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் ரோட்டில் இருக்கிறது. முன்புறம், பின்புறம் என இரண்டு தனித்தனி பங்களாக்கள். நட்சத்திர ஹோட்டலைப் போல பங்களாவிற்குள் பெரிய பார்ட்டி ஹாலே இருக்கிறதாம். நவீன தொழில்நுட்பத்திலான சவுண்ட் சிஸ்டம் இருப்பதால், நள்ளிரவு கடந்ததும் அலறும் ஸ்பீக்கர்களின் ஓசை வெளியில் கேட்காது.
மும்பை சினிமா நட்சத்திரங்களிடையே புரையோடியுள்ள இந்த பார்ட்டி பழக்கம், இப்போது தமிழ் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பார்ட்டிகளும் அதனைத் தொடரும் பஞ்சாயத்துக்களும் சர்வசாதாரணமாகிவிட்டன. பல நட்சத்திரங்களின் வீடுகளில் பார்ட்டிகளுக்கென்றே தனி அறை இருக்கிறதாம். ஸ்டார் ஹோட்டல்கள், ஈ.சி.ஆரில் இருக்கும் ரிஸார்ட்ஸ்கள் என பார்ட்டி மையங்கள் நிறைய!
ஒரு நடிகரோ, நடிகையோ தங்களின் நட்பு வட்டங்களுக்கு பார்ட்டி கொடுப்பது தவிர, தொழிலதிபர்கள் வைக்கும் பார்ட்டியில் சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்வதும் இப்போது அதிகரித்துள்ளது. தொழிலதிபர்களின் பார்ட்டிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
பிறந்தநாள், வெட்டிங் பார்ட்டி என்றில்லாமல் சும்மாவாச்சும் ‘கெட் டு கெதர்’ என்ற பெயரில் பணத்தை ‘தண்ணீராக’ செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள் பலர். திரையில் வியந்து பார்க்கும் நட்சத்திரங்களை தங்களின் இடத்திற்கு வரவழைத்து குடும்பத்தினருடன் கைகுலுக்கி, புகைப்படம் எடுத்து இன்புறுவதற்காக இப்படி லட்சங்களை இரைக்கிறார்கள். ஒரு பார்ட்டியில் சர்வசாதாரணமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறதாம். வெளிநாட்டு மதுபானங்கள், விதவிதமான அசைவ உணவுகள் என பார்ட்டி மெனு பயங்கர காஸ்ட்லி. இதுதவிர அசர வைக்கும் பரிசுகளைத் தந்து அசத்துவதும் உண்டு.

‘‘இவையெல்லாம் சைவ பார்ட்டிகள் என்றால், ‘அசைவ’ பார்ட்டிகளும் இப்போது அதிகம் நடக்கிறது’’ என்கிறார், பெயர் சொல்ல விரும்பாத ஸ்டார் ஹோட்டல் நிர்வாகி ஒருவர். இதுபோன்ற பார்ட்டிகளில், பிசினஸ் டீலிங்கிற்காக நடிகைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்களாம் தொழிலதிபர்கள். பிசினஸ் மீட்டிங்கில் நடிகைக்கு என்ன வேலை என்கிற லாஜிக் உதைக்கலாம். அங்குதான் இருக்கிறது சாமர்த்தியம்! ஒருவருக்கு காண்டிராக்டோ, டீலர்ஷிப்போ, தொழில் முதலீடோ இன்னொரு தொழிலதிபரால் ஆக வேண்டி இருக்கிறது. பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது; அல்லது போட்டிக்கு யாராவது குறுக்கே நுழைகிறார்கள்.
உடனே அவர் ஒரு பார்ட்டி வைக்கிறார். அதற்கு அந்தத் தொழிலதிபரையும் அழைக்கிறார். நடிகைகளையும் பணம் கொடுத்து பார்ட்டிக்கு வரவழைக்கிறார். ‘‘இவங்க என் க்ளோஸ் ஃபிரண்ட்’’ என அறிமுகப்படுத்தி, நடிகையுடன் கைகுலுக்க வைக்கிறார். அதன் பிறகு அந்த தொழிலதிபருக்கு கம்பெனி கொடுப்பார் நடிகை. பார்ட்டி போதையும் நடிகையின் நெருக்கமும் கிறக்கம் தர, பிசினஸ் டீலிங் வெற்றிகரமாக முடியும்.
சில நடிகைகளுக்கு இப்படிப்பட்ட பார்ட்டிகளில் வேறு மாதிரி தூண்டில் போடுகிறார்களாம் சில தொழிலதிபர்கள். ‘‘நான் தொடர்ச்சியா பத்து படம் தயாரிக்கப் போறேன். எல்லா படத்திலும் நீங்கதான் ஹீரோயின்... பிடிங்க அட்வான்ஸை’’ என்று ஒரு பெரும் தொகையை கொடுப்பார்கள். அந்த தொழிலதிபர் புருடா விடுகிறார் என்பது சம்பந்தப்பட்ட நடிகைக்கும் தெரியும். இருந்தாலும் பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொள்வார். அந்தப் பணத்துக்கு வேறு மாதிரியாக ‘கணக்கு’ தீர்த்துக் கொள்கிறார்கள் தொழிலதிபர்கள்.
சினிமாவில் அதிக வாய்ப்பு இல்லாவிட்டாலும், இப்படி நெருக்கம் பிடித்து வளமாக வாழும் நடிகைகள் பலர். இவர்கள் சினிமாவில் சம்பாதித்ததைவிட தங்கள் சினேகத்தின் தயவால் சம்பாதித்ததுதான் அதிகமாம். ‘சொக்கத் தங்கமான’ அந்த சர்ச்சை நடிகை நடித்ததில், ரிலீஸானதை விட நின்றுபோன படங்களே அதிகம். மலேசியா சென்ற நடிகை, ஒரு வருடம் கழித்து மீண்டும் கோடம்பாக்கம் வந்தார். திடீரென தொழிலதிபர் கம் கவர்ச்சி நடிகை என்ற அவதாரம் எடுத்தார். ஒரு கட்டத்தில் சொந்த தயாரிப்பு, பெரிய மனிதர்களுடன் டைஅப் என டோட்டலாக மாறிப்போன அந்த நடிகையின் வளர்ச்சிக்குப் பின்னணியில் ஒரு வெளிநாட்டுத் தொழிலதிபர் லாக் ஆகிக் கிடப்பதாகச் சொல்லப்படுகிறது. நடிகை அவரை வளைத்துப் பிடித்தது ஒரு பார்ட்டியில்தான்.
‘சைவ பார்ட்டி’, ‘அசைவ பார்ட்டி’ வித்தியாசம் தெரியாமல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி சிலர் நடக்க நினைக்கும்போதுதான் கை கலப்பு ஏற்படுகிறது. ‘என்ன... கைய புடிச்சி இழுத்தியா?’ என்ற காமெடி, நட்சத்திர பார்ட்டிகளில் இப்போது சீரியஸான பஞ்சாயத்தாகிவிட்டது. தொழிலதிபர் பிரமோத் கொடுத்த பார்ட்டியில் தகராறு நடந்ததற்குக் காரணம் என போலீஸ் வட்டாரங்கள் சொல்வது, ‘யாரோ ஒரு நடிகையுடன் நடனமாடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறே’ என்பதுதான்! அந்த ‘யாரோ’ யார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஏனென்றால், ‘‘சம்பவம் நடந்த அன்று நான் கர்னூலில் ஷூட்டிங்கில் இருந்தேன்’’ என்று மறுத்திருக்கிறார் டாப்ஸி. உண்மை அந்த ஏ.சி. அறைக்குள்ளேயே உறைந்து கிடக்கிறது.
- ஜேம்ஸ் பாண்டு
படம்: ஆர்.சந்திரசேகர்