திருப்புமுனை : த.செ.ஞானவேல்





‘‘பேச்சைவிட செயலே சிறந்தது என்பார்கள்; அது உண்மையும்கூட! ஆனால், பேச்சு என்பதே ஒரு செயல். ஒருவனுக்கு தேசப்பற்று இருந்தால் அவன் மட்டுமே போராடுவான்; பேச்சுத் திறமை உள்ள ஒருவரின் தேசப்பற்று, லட்சக்கணக்கான மக்களை நாட்டுக்காகப் போராட வைக்கும். ஒற்றைத் துதிக்கையால் காட்டு மரத்தை வேரோடு பிடுங்கி எறிகிற யானையின் பலமுடைய பேச்சாளனின் சொற்கள், சுயநலத்தோடு இருக்கும்போது சில்லரைக் காசுகளுக்காக வீதிகளில் துதிக்கையைத் தூக்கி ஆசீர்வதிக்கிற யானையைப் போல பிச்சையெடுக்கின்றன...’’ - தராசின் முள்ளைப் போல கூர்மையான வார்த்தைகளையே தேர்ந்தெடுக்கிறார் சொல்வேந்தர் சுகி.சிவம். வெயிலும் மழையும் ஒன்றாக இருக்கும் அபூர்வ பொழுது களை நினைவுபடுத்துகிறது அவரின் பேச்சு.

‘‘பேச்சுக்
கலையின் வலிமை எத்தகையது என்பதை உணர தமிழ்நாடு சிறந்த உதாரணம். பேச்சுக்கலையை ஆயுதமாக்கி ஆட்சியைக் கைப்பற்றியது திராவிட அரசியல். ‘கடவுள் உண்டு’ என்பவர்களும் பேச்சுக்கலையின் மூலமே கருத்துகளைப் பரப்பினர்; ‘கடவுள் இல்லை’ என்றவர்களும் பேச்சுக்கலை மூலமே மக்களைத் திரட்டினர். தமிழ்நாட்டில் ஒரு பேச்சாளன், இந்த இரண்டு துருவங்களில் ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும். ஒன்று மக்கள் அரசியல்; இன்னொன்று மத அரசியல். இரண்டு தரப்பிலும் உள்ள நிறைகளை ஏற்று, குறைகளை மறுத்த மூன்றாம் நிலைப்பாடு ஒன்று இருந்தது. ஆன்மிகப் பெரியாராக இருந்தாலும், தமிழாலும், சமூக நீதியாலும் தந்தை பெரியாரோடு இணைந்து பணியாற்றினார் குன்றக்குடி அடிகளார். எனக்கும் அந்த மூன்றாம் நிலைப்பாடே பொருத்தமாக இருந்தது. ‘என்னை இயக்கும் மாபெரும் சக்தி ஒன்று இருக்கிறது’ என்கிற ஆன்மிகத் தேடலே என்னுடைய வாழ்வின் நோக்கம். அதேவேளை, ஜாதியின் பெயரால், மதங்களின் பெயரால் நிகழ்த்துகிற ஏற்றத் தாழ்வுகளை, அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனக்கு இளைய ஆதீனமாக விருப்பம் இருக்கிறதா என்று அடிகளார் கேட்டார். எனக்கு துறவு வாழ்க்கை ஒத்து வராது என்று மறுத்தேன். ‘சமூக மாற்றம் பற்றி பேசுகிற உங்களால், சைவ வேளாளர் அல்லாமல் ஒரு தாழ்த்தப்பட்டவரை ஆதீனத்தின் தலைவராக ஆக்க முடியுமா?’ என்று அவரிடம் கேட்டேன். ‘எனக்கு அதில் பரிபூரண விருப்பம். ஆனால், எனக்குப் பிறகு ஆதீனத்தை மற்றவர்கள் புறக்கணித்து விடுவார்கள்’ என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினார் அடிகளார்.



மனதிற்கு சரி என்று பட்டதை செய்யாமல் இருக்கவோ, சொல்லாமல் இருக்கவோ முடியாத இயல்புடைய  ஒருவனால், ஏற்கனவே உள்ள எந்த நிறுவன அமைப்புகளுக்குள்ளும் பொருந்திப் போகமுடியாது. நான் அந்த ரகம். விவேகானந்தர் தன்னுடைய கருத்துக்களைப் பரப்புகிற பல நிறுவனங்களை உருவாக்கினார். ஆனால் அந்த நிறுவனங்கள் ஒரு விவேகானந்தரைக்கூட இதுவரை உருவாக்கியதில்லை. நான் நிறுவனங்களின் அரசியலுக்குள் தொலைந்து விடாமல், மக்களிடையே விவேகானந்தர்களைத் தேடும் முயற்சியில் இறங்கினேன்.  

அண்ணா போன்ற அரசியல் தலைவர்களின் பேச்சும், அடிகளார் போன்ற ஆன்மிகப் பெரியவர்களின் பேச்சும் சமூகத்தில் மிக அதிகமான தாக்கத்தை உருவாக்கிய காலம். அப்போது ‘மாணவர் அரசியல்’ இல்லாத கல்லூரிகளே இல்லை எனலாம். கல்லூரி மாணவர் தலைவர் தேர்தலில் ஜெயிப்பது அரசியல் பிரவேசத்தின் முதல் படி. சென்னை விவேகானந்தா கல்லூரியின் மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டேன். பணம் எதுவும் செலவழிக்காமல், ‘என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் கடமை’ என்பது போல இரண்டு கைகளை கூப்பி வாக்கு சேகரித்தேன். 32 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியே மிஞ்சியது. வெற்றி பெற்றிருந்தால் என் பாதை திசை மாறி இருக்கக்கூடும். ஒரு தோல்வி வாழ்வின் திருப்புமுனையானது. வெற்றி பெற்ற நண்பனை பல ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து, பதவிகளை எதிர்பார்த்து எதுவும் கிடைக்காமல், நிரந்தரமாக எந்த வேலையும் இல்லாமல், சோர்வுற்று இருந்தார். ‘தேர்தல்ல ஜெயிச்ச நான் வாழ்க்கையில தோத்துட்டேன். நீ காலேஜ் எலெக்ஷன்ல தோத்து, வாழ்க்கையில் ஜெயிச்சிட்டே’ என்று சொன்னபோது அவர் கண்கள் கலங்கின.

அரசியல் எனக்கு ஒத்து வராது என்பதை இன்னொரு தேர்தலும் உணர்த்தியது. விவேகானந்தா கல்லூரி முடித்து, சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். பட்டிமன்றங்கள் பேசுவதில் கிடைத்த பணத்திலேயே கல்லூரிக் கட்டணம் என்னால் கட்ட முடிந்தது; என் தேவைகளும் பூர்த்தியானது. சட்டக்கல்லூரியில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் மாணவர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தின. கட்சி சார்பில்லாத ஒரு மாணவர் அமைப்பை உருவாக்க முனைந்தேன். ‘கட்சி சார்பற்ற மாணவர் இயக்கம்’ தொடங்கி, களத்தில் இறங்கினோம். இன்னொரு நண்பனை முன்னிறுத்தி, என் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தேன். மாற்றத்தைக் கொண்டுவரும் முனைப்பில் எல்லோரும் வேலை பார்த்ததால் பலனும் கிடைத்தது. ‘காணாமல் போய் விடுவோம்’ என்று மற்றவர்கள் நினைத்த எங்கள் அமைப்பு இரண்டாம் இடத்திற்கு வந்தது. பெரிய கட்சிகளின் ஆதரவு இருந்த மாணவர்கள் பின்னடைவை சந்தித்தார்கள்.

மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் என்று நிரூபித்தபிறகு, என்னால் முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் வழக்கமான கட்சிகளிடம் சரணடைந்தனர். நடவடிக்கைகளிலும் மாற்றம் தெரிந்தது. ‘அரசியல் நமக்கு ஆகாது’ என்கிற உறுதியான முடிவை அப்போது எடுத்தேன். வாழ்வில் நான் எடுத்த சிறந்த முடிவு அது. அதேபோல வழக்கறிஞராக வாழ்வை ஓட்டவும் விருப்பம் இல்லை. முழுநேரப் பேச்சாளனாக இருக்கவே மனம் விரும்பியது. அந்த முடிவு என்னுடைய வாழ்வின் அடுத்த திருப்புமுனை. பெரிய பெரிய பேச்சாளர்கள்கூட பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக, வழக்கறிஞர்களாக வேலை செய்துகொண்டு பகுதிநேரமாகவே பேசி வந்தனர். முழு நேரமும் பேச்சை நம்பியவர்களுக்கு, வறுமை உற்ற தோழனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பலர் முன்னுதாரணமாக கண்ணெதிரில் வாழ்ந்தார்கள்.



ஆனால், எந்த இடத்திலும் வளைந்து கொடுக்காமலும், வாய்ப்பு கேட்டு பல் இளிக்காமலும் இருப்பதற்கு வறுமை என்னை நெருங்காமல் இருப்பதே காரணம். பசி ஒரு மனிதனைத் தாழ்த்தி விடும். ஆசையினால் தரம் தாழ்ந்துபோவதைப்போல, வறுமையால் தாழ்ந்து போவது பெரிய குற்றமும் இல்லை. ஆனால் அது இரக்கத்திற்குரியது. ‘அடுத்த முறை வாய்ப்பு கிடைக்க வேண்டுமே’ என்று எப்போதும் யாரையும் தகுதிக்கு மீறி பாராட்டியதில்லை. சில மேடைகளில் விழா அமைப்பாளர்கள் அவர்கள் விரும்பாத கருத்துக்களைப் பேசக்கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். ‘ஒருவன் பதவியை இழந்தாலும், மரியாதை இல்லை. மனைவியை இழந்தாலும் மரியாதை இல்லை. இந்த இரண்டையும் இழந்தாலும், ராமன் தன்னை இழக்கவில்லை. அதனால் போற்றப்பட்டான்’ என்று வாழ்வியல் பேச முடிந்த என்னால், ‘ராமன் தவறே செய்யாத பரம்பொருள்’ என்று பேச முடியாது.

ஆஸ்திக சமாஜத்தில் பேசினாலும், ‘தந்தை பெரியார்’ என்றே மரியாதையாக அழைத்திருக்கிறேன். சமூக மாற்றத்தில் அவருடைய பங்களிப்பை மறைத்துப் பேசியது இல்லை. கடவுள் நம்பிக்கை குறித்த அவரது எந்தக் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைக் கடுமையாக எதிர்த்திருக்கிறேன். ஆனால், இந்த மக்களின் உரிமைகளுக்காக அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்ததைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. இதற்காக இரண்டு தரப்பிலும் என் மீது விமர்சனம் வந்திருக்கிறது. எந்தப் பக்கமும் இல்லாமல் போகிறவனுக்கு ஆபத்து இன்னும் அதிகம். அதற்காக, மனசாட்சிக்கு விரோதமாக மேடையேறிப் பேசமுடியாது. ‘நித்யானந்தா ஆதீனப் பொறுப்பில் இருக்கக்கூடாது’ என மேடையில் ஏறிப் பேசினால், ‘குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிற ஜெயேந்திரருக்கும் அந்த நியதி பொருந்தும்’ என்று வலியுறுத்துவதுதான் பேச்சு தர்மம். 

சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் இருந்தால், நம் வாயிலிருந்து வருகிற வார்த்தைகளில் ஜீவன் குறைந்து விடும். ‘ஜாதி இல்லை’ என்று சொல்லிவிட்டு என் வீட்டிற்குள் ஜாதியை வைத்துக் கொள்ள முடியாது. என் இரண்டு மகள்களுக்கும் வேறு ஜாதியில்தான் திருமணம்  முடித்தோம். ஒன்று காதல் திருமணம்; மற்றொன்று, ‘ஜாதி தடை இல்லை’ என்று விளம்பரம் கொடுத்து பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் வாழ முடிகிற திருப்திதான் என்னைத் தொடர்ந்து இயங்க ஊக்கப்படுத்துகிறது.

சாராசரி மனிதர்களின் மனம் விழிப்படைய பேச்சின் மூலம் ஏதாவது செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது பேச்சுப் பயணம். நிலைத்த உண்மைகளைப் பேசும்போது மக்கள் வரவேற்கவே செய்கிறார்கள். திருச்சியில் ஒரு நிகழ்ச்சி. மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொள்கிறார். நான் சிறப்புப் பேச்சாளர். ‘சுகி.சிவம் அவர்களின் பேச்சு, நான் மிகவும் சோர்வுற்று இருந்த நேரத்தில் நம்பிக்கை தந்து தூக்கி நிறுத்தியது. என் கண்ணீரைத் துடைத்தது. அதற்கு நன்றி சொல்லவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்’ என்று அவர் சொன்னார். ‘கணவனைப் பிரிவதா, வேண்டாமா?’ என்கிற குழப்பத்தில் இருந்த நேரத்தில், ஒரு இல்லத்தரசிக்கு முடிவு எடுக்க என் பேச்சு உதவியதாக நெகிழ்ந்து கூறினார். இப்படிப் பலரின் நெகிழ்ச்சிகள்தான் என் பேச்சுக்கு இன்னும் அர்த்தம் சேர்க்கின்றன. ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிவிட்டு, பந்தி யில் சாப்பிட உட்கார்ந்தேன். ஒரு பெரியவர் அருகில் வந்தார். ‘உறவுகள் பத்தி அருமையா சொன்னீங்க. பிரசாதம் வேணும்னு சாமிகிட்டே கியூவுல நிக்கிறானுங்க. எல்லா உறவும் அந்த சாமி கொடுத்த பிரசாதம்னு எவனுக்கும் புரியலை’ என சொல்லிவிட்டுப் போனார். எங்கோ அவர் பட்ட காயத்திற்கு என் பேச்சு ஆறுதல் தரும் மருந்தாக இருந்திருக்கிறது. பேச்சின் பயன் இதுவன்றி வேறென்ன?’’

- கேள்விகளையே பதிலாக்குகிறார் சுகி.சிவம். கருமுட்டையின் உள்ளிருந்து பிறக்கிற ஒரு புத்தம்புது உயிர் போல வெளிப்படுகிறது அவரின் கருத்து. உள்ளத்தின் உள்ளிருந்து பிறந்து வருகிற வார்த்தைகளில் ஈரமும், காரமும் சேர்ந்தே வெளிப்படுகின்றன.
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்