நிழல்கள் நடந்த பாதைகள்



காணாமல் போனவர்கள்

கடந்த ஜனவரி மாதம் எழுத்தாளர் பாமரனின் நூல் வெளியீட்டு விழா ஒன்றை ‘உயிர்மை’ நடத்தியது. ‘எழுதுவதெல்லாம் எழுத்தல்ல’ என்ற அந்த நூலின் அட்டைப் படத்தைப் போட்டு பரவலாக விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. அட்டையில், மண்பானை செய்யும் இடத்தில் ஒரு சிறுவன் உடம்பெல்லாம் சேறாக நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான்.

கூட்டம் நடப்பதற்கு முதல் நாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு போன். ‘‘நீங்கள் பாமரனின் புத்தகத்தில் அட்டையில் பயன்படுத்தியிருக்கும் சிறுவனின் புகைப்படம் உங்களுக்கு எங்கே கிடைத்தது?’’ என்று கேட்டார்கள். ‘‘என்ன விஷயம்’’ என்று கேட்டேன். ‘‘அந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் காணாமல் போய்விட்டான். தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கே இருக்கிறான்... சொல்லுங்கள்’’ என்றார் மறுமுனையில் பேசியவர். அந்தப் புகைப்படத்தினை பாமரன்தான் என்னிடம் தந்திருந்தார். பாமரன் கொஞ்சம் அடாவடியாகப் பேசுவாரே தவிர, குழந்தைக் கடத்தலில் எல்லாம் ஈடுபடுகிற அளவுக்கு துணிச்சலான ஆள் என்று எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும், ‘மாட்டிக்க மாட்டாரா’ என்ற நப்பாசையுடன் பாமரனின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து, ‘‘அவரிடம் விசாரியுங்கள்’’ என்றேன்.

பாமரனிடம் புகைப்படம் பற்றிக் கேட்டேன். ‘‘அது ஊச்சப்பன் என்ற புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் எடுத்த படம். இணையத்தில் கிடைத்தது’’ என்றார். தொடர்ந்து எனக்குத் தொலைபேசி அழைப்புகள். காணாமல் போன பையனின் அப்பா, ‘அந்த போட்டோ எங்கய்யா கிடைச்சது?’’ என்று உடைந்த குரலில் பேசினார். அந்தப் பையனின் உறவினர்களிடமிருந்து போன் கால்கள் வரத் தொடங்கின. எல்லோரிடமும் பொறுமையாக, அது சாயல் மட்டுமே என்று விளக்கினேன். நான் சொல்வதை அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்களா என்றுகூட சந்தேகமாக இருந்தது. ஒரு பெரிய இருட்டில் எதையோ ஒன்றை சிறிய வெளிச்சமாகப் பற்றிக் கொள்ளும் அந்தப் பரிதவிப்பு என் மனதை கனக்கச் செய்தது. பிறகு நானும் பாமரனும் எப்போது சந்தித்துக்கொண்டாலும், காணாமல் போன பையன் எங்கே இருப்பான் என்று பேசத் தொடங்கிவிடுவோம்.

காணாமல் போனவர்கள் நிரந்தரமாக நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் முடிவற்ற ஒரு கனவாக மாறிவிடுகிறார்கள். மரணத்தைவிட எத்தனையோ மடங்கு கொடுமையானது, ஒருவர் காணாமல் போவது. அவர் பதிலற்ற ஒரு கேள்வியாக நம் மனதை நிரப்பிக் கொண்டே இருக்கிறார். உங்களைவிட்டு ஒருவர் காணாமல் போகும்போது, ஒவ்வொரு கதவு தட்டும் ஓசையிலும் நீங்கள் பதற்றமடைகிறீர்கள். ஒவ்வொரு காலடி ஓசையிலும் உங்கள் மனம் அதிரத் தொடங்குகிறது. கூட்டமான இடங்களில் நீங்கள் ஒவ்வொரு முகமாகத் தேடுகிறீர்கள். சாயலுள்ள யாரோ ஒருவரை நோக்கி பதட்டத்துடன் அருகில் சென்று மனமுடைந்து திரும்புகிறீர்கள். சாலைகளைக் கடக்கும் மனிதர்களை அலுக்காமல் உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள். ‘எங்காவது இருக்கத்தானே வேண்டும்’ என்று திரும்பத் திரும்ப உங்களுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.

அது ஒரு ஆறாத் துயரம். நம் வாழ்க்கையை விட்டுப் போனவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்புவதைவிட ஒரு சித்ரவதை வேறு ஒன்றும் இல்லை. இறந்தவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திவிடுகிறோம். ஆனால் காணாமல் போனவர்களைப் பற்றிய நமது பேச்சு வளர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த உலகத்தின் எந்தக் குரூரமான கைகளில் அவர்கள் இருப்பார்கள் என மனம் சிதறிப்போகிறோம். அவர்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஒரு விசித்திரமான இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர்கள் திரும்பி வருவது பற்றிய செய்திகளைப் படிக்கும்போதெல்லாம், அது மறுபிறவி பற்றிய செய்தியைப் படிப்பதுபோல இருக்கிறது. அவர்கள் திரும்ப முடியாத ஒரு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். வசந்தபாலன் இந்தத் துயரத்தை ‘வெயில்’ படத்தில் அற்புதமாகக் காட்டினார்.



மனிதர்கள் காணாமல் போவது என்பது இன்று ஒரு சமூகப் பிரச்னை; அரசியல் பிரச்னை. காணாமல் போவதில் பெண்களும் குழந்தைகளும்தான் முதன்மையாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 7,656 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். மனிதக் கடத்தல் என்பது தேசிய அளவில் பெரும் வலைப்பின்னலாக வளர்ந்து வருகிறது. பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளையும், விபசாரத்திற்காக பெண்களையும் கடத்துவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

சாதிக் கொடுமைகளுக்கும், குடும்ப வன்முறைக்கும், மனிதர்கள் காணாமல் போவதில் முக்கிய பங்கு இருக்கிறது. வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகளும் பெண்களும் பெரும்பாலும் வீட்டில் உள்ள வன்முறை, மன அழுத்தத்தாலேயே இந்த முடிவை எடுக்கிறார்கள். மனிதர்களை தற்கொலைக்கும் ஓடிப்போவதற்கும் தயார் செய்யும் பயிற்சி முகாமாகவே பெரும்பாலான வீடுகள் இருக்கின்றன. காதல் போன்ற பிரச்னைகளில் சாதி, மத வெறியின் மூர்க்கம் பலரையும் ஓடிப்போக வைக்கிறது. பொருளாதாரப் பிரச்னைகளால் கணிச மானோர் ஓடிப்போகிறார்கள்.

மனிதர்கள் காணாமல் போவதற்கு ஒரு அரசியல் முகமும் இருக்கிறது. போர்க்காலங்களிலும் அரசின் ஒடுக்குமுறை நிலவும் பகுதிகளிலும் காணாமல் போவது ஒரு இயல்பான விஷயமாக மாறிவிட்டது. ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் சதுக்கங்களில் கூடி நிற்கும் அன்னையர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். இலங்கையில் போரின்போது காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு மௌனம் தான் இதுவரை பதிலாக இருக்கிறது. இந்தியாவில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் காணாமல் போவது பரவலாக நிகழ்ந்து வருகிறது. காஷ்மீரிலும், மாவோயிஸ்ட் பிரச்னை நிலவும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஏராளமானோர் காணாமல் போயிருக்கின்றனர். அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும்; அல்லது சித்ரவதை முகாம்களில் இருக்க வேண்டும். ஒருவரை விசாரணையின் முன்பு கொண்டு வந்து நிறுத்து வதைவிட, வெளிப்படையாகக் கொல்வதைவிட, காணாமல் போகச் செய்வது சுலபமானது. யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை; எதற்கும் பொறுப்பாக வேண்டியதில்லை.

பலவந்தங்களற்று நிர்ப்பந்தங்களற்று ஒருவன் காணாமல் போவதும் சாத்தியம்தான். தான் வாழ்க்கையில் உருவாக்கிய அத்தனை விஷயங்களையும் உதறி, வேறொரு இடத்தில் தன்னை புதிதாகத் தொடங்குவதற்காகவும் ஒருவன் காணாமல் போகக்கூடும். நான் அதை எப்போதும் ரகசியமாகக் கனவு காண்கிறேன்.

புகழ்பெற்ற மாயாஜாலக் கலைஞர் பி.சி.சர்க்காரிடம் ஒரு முறை, ‘‘உங்களுக்கு மரண பயம் உண்டா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘நான் சாக மாட்டேன். மறைந்து விடுவேன்’’ என்றார்.

ஆட்டோ அபாயம்
சென்னையில் ஆட்டோ கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது பற்றி மறுபடி பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையில் கொசுக்களையும் ஆட்டோக் களையும் கட்டுப்படுத்துவது கற்பனையில்கூட நடவாத ஒன்று. தமிழகம் முழுக்க ஆட்டோக்களைப் பயன்படுத்தும் மத்தியதர மக்களை ஆட்டோக்காரர்கள் படுத்தும் பாட்டிற்கு அளவே இல்லை. நீங்கள் வழக்கமாக ஆட்டோ பயன்படுத்துபவர் என்றால், அதற்குப் பதில் ஒரு கார் வாங்கி, அதற்கு பெட்ரோல் போட்டு டிரைவரும் வைத்துக்கொண்டால் ஆட்டோ செலவைவிட லாபகரமாக இருப்பதை உணர்வீர்கள். கால் டாக்சிகள் ஆட்டோக்களை விட மலிவாக இருப்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

தமிழகத்தின் ஆட்டோ கட்டணங்கள் மிகப்பெரிய மோசடி. பெட்ரோல் விலை உயர்வுக்கும் இவர்கள் சொல்லும் கட்டணங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எளிய கணக்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் எந்த வேலை செய்பவரும் இவ்வளவு நியாய விரோதமாக பொதுமக்களை நிர்ப்பந்திக்க முடியாது.

அடிப்படை கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும் இவர்களை வழிக்குக் கொண்டுவருவது கடினம். மீட்டர் போட மாட்டார்கள். மீட்டர் இருந்தாலும் அது கோல்மால் செய்யப்பட்டிருக்கும். காவல்துறையின் மூலம் இவர்களை வழிக்குக் கொண்டுவர நினைப்பது வீண். ஏனெனில் பெரும்பாலான ஆட்டோக்கள் போலீஸ்காரர்களின் பினாமிகள்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதும் தனியார் ஆட்டோக்களை படிப்படியாகக் குறைப்பதும்தான் இதற்கு ஒரே தீர்வு. கடவுளைக் கண்டேன் போன வாரம் முழுக்க ‘கடவுளைக் கண்டுபிடித்துவிட்டார்கள்’ என்று உலகமெல்லாம் ஒரே பரபரப்பு. எனக்கு இந்த பரபரப்பின்மீது எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஏதோ துகள், வெடிப்பு என்று மண்டை காய வைக்கிறார்கள்.  இந்தியர்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியே அல்ல; நாம் இதுவரை எவ்வளவு கடவுள்களைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று யோசித்தால் மயக்கமே வரும். ‘கடவுளைக் கண்டேன்’ என்ற ஸ்டேட்மென்ட்டை நம் நாட்டில் பிரதம மந்திரியிலிருந்து மூட்டை தூக்குபவர் வரை சொல்லாத ஆள் கிடையாது. கடவுளின் வீடியோக்கள், அவர்கள் மீதான  கிரிமினல் வழக்குகள், கடவுள்களின் பிரஸ்மீட் எல்லாம் பரவலாக நடந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், ஏதோ உடைந்த சில்லை கையில் வைத்துக்கொண்டு ‘கடவுள்... கடவுள்...’ என்று கூச்சலிடும் வெள்ளைக்காரனைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
(இன்னும் நடக்கலாம்...)