மொட்டைக் கடிதம்

ராகவன் முகம் கழுவிக் கொள்ள குளியலறைக்குச் சென்றதும், அவன் பையிலிருந்து தற்செயலாக நழுவி விழுந்த கடிதத்தை எடுத்துப் படித்தாள் ராதா. ‘நண்பரே, உங்கள் மனைவி ராதாவை பதிவிரதை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவள் படிக்கும்போதே தன் உள்ளத்தையும் உடலையும் ஒருவனிடம் பறிகொடுத்தவள். இப்போதும் நீங்கள் இல்லாத சமயம் அந்தத் தொடர்பு தொடர்கிறது.’ படித்த ராதாவிற்கு உடல் வியர்த்தது. அவள் மீது வீண் பழி சுமத்தி இந்த மொட்டைக் கடிதத்தை எழுதியவன் யாராக இருக்கக் கூடும்? கணவன் வரும் ஓசை கேட்கவே கடிதத்தை முன்பு போலவே கீழே போட்டுவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். கைகள் நடுங்க அவனுக்காக அவள் காபி கொண்டுவந்தபோது அந்தக் கடிதத்தை ராகவன் சுக்குநூறாகக் கிழித்துக் கொண்டிருந்தான். ‘‘என்ன பேப்பர்ங்க அது... இப்படி துண்டு துண்டா கிழிக்கறீங்க?’’ - அறியாதது போல் அவள் கேட்டாள்.
‘‘முக்கியமான வேலைகள் எல்லாம் மறந்து போகாம இருக்க குறிச்சு வச்சிருந்தேன். இன்னைக்கு எல்லா வேலையும் முடிஞ்சுது. இனி, இது தேவையில்ல’’ என்றான். ராதா கலங்கி விட்டாள். காபியை அவன் முன்னே டேபிளில் வைத்தவள் அழுது கொண்டே அவன் முகம் பார்த்தாள். ‘‘என்கிட்ட மறைக்காதீங்க. நான் அதைப் படிச்சுட்டேன். என்னைப் பத்தி தப்புத் தப்பா எவனோ உங்களுக்கு எழுதின மொட்டைக் கடுதாசி...’’ - அதற்குமேல் பேச முடியாமல் அழுத ராதாவை தட்டிக் கொடுத்தான் ராகவன்.
‘‘இதெல்லாம் கட்டுக்கதைன்னு எனக்குத் தெரியும். யாரோ வியாபார எதிரிங்க... குடும்ப அமைதியைக் கெடுக்க இப்படியெல்லாம் செய்யறாங்க. முன்னாடியும் இப்படி நிறைய லெட்டர்ஸ் வந்திருக்கு. நான் வீட்டுக்கு கொண்டு வராமலேயே கிழிச்சுப் போட்டுருவேன். இன்னிக்குத்தான் ஞாபகமறதியா கொண்டு வந்துட்டேன். நீ பத்தரைமாத்துத் தங்கம்னு எனக்குத் தெரியாதா?’’ அன்பு மிகுதியால் அவனை இறுக்கக் கட்டிக்கொண்டாள் ராதா. ‘என்னைப் பற்றி சிறிதும் சந்தேகப்படாமல் அவதூறாக வந்த கடிதங்களை எல்லாம் இவர் கிழித்துப் போட்டிருக்கிறார். ஆனால் இவரைப் பற்றி எனக்கு இன்று வந்த கடிதத்தை உண்மை என்று நம்பி சண்டை போடக் காத்திருந்தோமே’ என்று அவள் உள்ளுக்குள் நொந்துகொண்டாள்.
அதே நேரம், ராகவனின் மனம் குத்தாட்டம் போட்டது. முன்னாள் காதலியோடு தான் ஊர் சுற்றியதைப் பற்றி மொட்டைக் கடிதம் எழுதுவதாக நேற்றுதான் ஒரு முன்னாள் நண்பன் - இந்நாள் எதிரி - மிரட்டினான். இனி, அப்படி ஒரு கடிதம் வந்தாலும் இவள் நம்பப் போவதில்லை. தானே தயாரித்த இந்த மொட்டைக் கடித ஐடியா இத்தனை கச்சிதமாக வொர்க் அவுட் ஆனதை நினைத்து, அவன் தன்னையே மெச்சிக் கொண்டான்.
|