அட!





மருமகள் மாதவி வீட்டிற்கு வந்ததிலிருந்து அவள் நடவடிக்கைகளைப் பார்த்து சுந்தரி அசந்து போனாள். சுந்தரிக்கு பிடித்ததையே சமைக்கிறாள்; சுந்தரி சொன்னதையே செய்கிறாள். சாப்பாடு மட்டுமின்றி மருந்து, மாத்திரைகளையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொடுத்து பணிவு காட்டுகிறாள். சொந்தத் தாயைப் போல அத்தனை அன்பாக கவனித்துக் கொள்வதும், எந்த வேலையும் செய்ய விடாமல் தன்னைத் தலையில் வைத்துத் தாங்குவதும்... சுந்தரிக்கு பெருமை பிடிபடவில்லை!
தன்னை சந்திக்க வரும் உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்து ஃப்ளாட்காரர்களிடமெல்லாம் இதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள் சுந்தரி.

மாதவியைப் பார்க்க அவளின் நெருங்கிய தோழி ராஷ்மி வந்தாள்.
‘‘ஏய், நீ மாமியாரை மயக்கிட்டியாம்ல... தொகுதிப் பக்கம் ஒரே பேச்சா இருக்கு..?’’ என்றாள் அவள்.
‘‘நீ வேற... நான் மாமியாரைக் கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்கேன்டி’’ என்றாள் மாதவி.

‘‘என்னடி சொல்ற?’’
‘‘பின்ன! எந்த ஒரு பொண்ணுக்கும் மாமியாரானதும், மருமகளை உருட்டி மிரட்டி வேலை வாங்கணும்னு உள்ளூர ஒரு ஆசை இருக்கவே செய்யும். நான் அதுக்கு இடம் கொடுக்காம பண்ணிட்டேனா... கூடிய சீக்கிரமே என் மாமியாருக்கு என்னை அதட்டி கொடுமைப்படுத்த முடியலையேங்கற கவலையில மைண்ட் அப்செட் ஆயிடும் பாரு. அதைவிட பெரிய தண்டனை என்ன இருக்கு?’’ என்று சிரித்தாள் மாதவி.