நான் ஈ : சினிமா விமர்சனம்





‘பேனைப் பெருமாளாக்குவது’ என்பார்களே, அப்படி ஒரு ‘ஈயை ஈஸ்வரனாக்கி’யிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ராமநாராயணன் காலத்திலிருந்து சொல்லப்பட்டு வரும் பழிவாங்கும் கதைதான். அவர் படத்தில் பாம்பு, குரங்கு, யானை உள்ளிட்ட மிருகங்களுடன் ஷாம்லியும் நடித்த வேடங்களில் அவருக்கே வராத சிந்தனையாக இதில் ஈ. அதில் கவனம் ஈர்க்க கிராஃபிக்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் தூள் கிளப்பியிருக்கிறார் இயக்குநர்.

பார்க்கிற அழகான பெண்களையெல்லாம் பெண்டாள நினைக்கும் வில்லன் சுதீப், சமந்தாவின் மீது கண் வைக்கிறார். அதற்குக் குறுக்கே நிற்கும் சமந்தாவின் காதலன் நானியைப் போட்டுத் தள்ளி விட, அடுத்து ஈயாகப் பிறப்பெடுக்கும் நானி, சுதீப்பை பழிதீர்த்து தன் காதலியை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது கதை. இதற்கு லாஜிக் பிடிக்க, தூக்கம் வராத குழந்தைக்கு ஒரு தந்தை இந்தக் கதையை சொல்வதாக டைட்டிலில் ‘வாய்ஸ் ஓவர்’ செய்திருப்பது புத்திசாலித்தனம். 

வில்லன் என்றாலும் நடிகர்களில் அதிகம் கவர்வது சுதீப்தான். பெண்களைப் பார்க்கும் மோகப் பார்வையாகட்டும், எதையும் சாதித்துக் காட்டும் சவடால் ஆகட்டும், ‘‘அனிமல்ஸ் நம்மைப் பழிவாங்குமா..?’’ என்று சுற்றி வளைத்துத் தயக்கத்துடன் கேட்பதிலாகட்டும், அது உறுதிப்பட்ட நிலையில் ஆங்காரம் தளர்ந்து காமெடிக்குள்ளாவதிலாகட்டும், கடைசியில் ஈயை நேருக்கு நேர் வரச்சொல்லும் பரிதாபத்திலாகட்டும்... பிரித்து மேய்ந்திருக்கிறார் மனிதர்.

காதல், சோகம் எல்லாவற்றையும் தன் உடல் அளவுக்கே அடக்கமாக வெளிப்படுத்தும் சமந்தா, கதைக்குப் பொருத்தமாக மைக்ரோ ஆர்ட்டிஸ்டாக வருவது பலம். நானியை உள்ளூரக் காதலித்தாலும், அதை வெளிக்காட்டாமல் அவரை நாய்க்குட்டி போல் தன் பின்னால் அலைய விடும் இளமைக் குறும்பை ரசிக்கலாம். கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும் ‘நான் ஈ’யாக மாறும் நானி தன் வெள்ளந்தித்தனத்தால் நம் மனத்தில் இடம்பிடிக்கிறார்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஈ. அது முட்டையிலிருந்து வெளிவரும் காட்சியில், ‘புதிய மனிதா பூமிக்கு வா’ பாடல் மட்டும்தான் இசைக்கவில்லை. அத்தனை பில்ட் அப். வில்லனை முதல் பார்வையில் தெரிந்துகொண்டு கோபத்தில் மோதித் தோற்பதிலும், காதலியின் லாக்கெட்டில் அமர்ந்து காதல் பாராட்டுவதிலும், கடைசியில் தன்னையே எரித்துக்கொண்டு வில்லனைக் கொல்ல முனைவதிலும் அவ்வளவு உணர்ச்சிகள். வில்லனை நேருக்கு நேர் நின்று முறைத்து, வில்லன் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டாலும் பின்னால் விரைந்து வரும் மினிஸ்டரின் காரில் ஏறி விரைந்து, ‘ஐ வில் கில் யு’ என்று எழுதி எச்சரித்து, துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டுக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்து... இப்படி ஈயின் ஒவ்வொரு அசைவிலும் சூப்பர் ஸ்டார்தனம். கடைசியில் லாரன்ஸ், விஜய் ஸ்டைலில் ஒரு ஆட்டம் போடுவதுடன், கைகளைத் தட்டி ‘ஜிந்த்தாக்கா ஜிந்த்தா ஜிந்த்தா...’ என்று தாளம் போடுவது ‘ஏ டூ இஸட்’ கிளாஸ்.

இயக்குநரின் முயற்சிக்கு மரகதமணியின் இசையும், கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் மட்டுமல்லாமல், கிரேஸி மோகனின் வசனங்களும் பலம். இன்றைய சினிமா வியாபாரத்தில் காமெடியன் சந்தானத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், அவரைக் கூட இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டும் பயன்படுத்தியிருப்பதில் இயக்குநர் ஈ மீது வைத்த நம்பிக்கை புரிகிறது.

‘ஹிட்’ அடிக்க வேண்டிய ஈயை வைத்துக்கொண்டு ‘சூப்பர் ஹிட்’ அடித்திருக்கிறார் ராஜமௌலி..!
- குங்குமம் விமர்சனக்குழு