வியக்க வைக்கும் ரஜினி!

‘சிருஷ்டி’ என்பது கடவுளின் செயல் இல்லை; அது ஒரு துகளின் வேலை என்பது நிரூபணமாகிவிட்டால், ‘நித்தமும்’ வசிய வார்த்தைகளால் வாய்ஜாலம் செய்துகொண்டிருக்கும் ஹைடெக் சாமியார்களுக்கு அதிர்ச்சிதான் போங்கள்! - கவியகம் காஜூஸ், கோவை-26.
மனதில் பட்டதை அப்படியே சொல்வதற்கும், ஒருவரை எடுத்தெறிந்து பேசுவதற்கும் நூலிழை வித்தியாசம்தான். நா நயம் மிக்கவர்களால் மட்டுமே அதை லாவகமாகக் கையாள முடியும் என்பதை ‘திருப்புமுனை’யில் சுகி.சிவம் நிரூபித்துவிட்டார்! - மணி.வசந்த புன்னகை, கரூர்.
கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் உளவு விமானங்கள் மூலம் உலகையே படம்பிடிக்கப் போவது அறிந்து அதிர்ந்தோம். விஞ்ஞான வளர்ச்சியை வரவேற்க வேண்டும்தான்... அதற்காக அந்தரத்திலிருந்து நம் அந்தரங்கத்தைக் களவாட அனுமதிக்க முடியுமா! - வி.ராமு, சென்னை-109.
அரசு போக்குவரத்துக் கழக ஊர்திகளின் லட்சணத்தை விளக்கி, ஊதுகிற சங்கை ஊதிவைத்து விட்டீர்கள். அது செவிடன் காதில் ஊதிய கதையாகப் போய்விடக் கூடாதே என்பதுதான் எங்களின் பிரார்த்தனை! - தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி. தமிழ் சினிமாவில் அம்மா வேடத்துக்குக் கூட கதாநாயகி அளவுக்கு சம்பளம் கேட்கிறார்களா? தங்கர் பச்சான் சொன்ன தகவல் அதிர்ச்சியையே தந்தது. அவர் இயக்கும் ‘அம்மாவின் கைப்பேசி’யும் அதில் ஈடுபாட்டுடன் நடிக்க வந்திருக்கும் ரேவதியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்! - வி.சி.கீதா, பெங்களூரு.
இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவை மருந்துக் கம்பெனிகள்தான். நோயாளி என்னும் எரியும் வீட்டிலிருந்து கொள்ளை கொள்ளையாக பிடுங்கிக் கொழுக்கும் இவர்களுக்கு எதிராக மத்திய அரசு துரிதமான துணிச்சலான நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். - வி.நிம்மி, சென்னை.
இரண்டாம் உலகப் போர் விமான வெடிப்புகளில் காணாமல் போனவர்களைப் பற்றி இன்று ஆராயக் கிளம்பியிருக்கும் அமெரிக்கரை ‘விநோத ரஸ மஞ்சரி’ மூலம் அறிந்தேன். நாமும்தான் சுபாஷ் சந்திர போஸை இழந்தோம்... ‘சொல்லப்படுகிறது’, ‘நம்பப்படுகிறது’ என்றே அவர் வரலாற்றை முடித்துக் கொண்டோமே! - டி.வி.ரமா, செங்கை.
சூப்பர் ஸ்டார் ரஜினி படித்த காரணத்தால், பாழடைந்து கிடக்கும் ஒரு பள்ளி சூப்பர் பள்ளிக்கூடம் ஆவது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், அந்தச் சிறிய பள்ளியில் படித்து இத்தனை உயரத்துக்குப் போயிருக்கிறாரே என்று அப்போதும் ரஜினியையே வியக்கத் தோன்றியது. - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
|