வந்தாச்சு

இசை: மன்னாரு
கதையின் நாயகனாக அப்புக்குட்டி நடித்திருக்கும் படத்திற்கு உதயன் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்களையும் கதையின் போக்கிலேயே அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு எஸ்.பி.ஷைலஜா, கிருஷ்ணராஜ் பாடியிருக்கும் ‘ஊரையெல்லாம் காவல் காக்கும் அய்யனாரு சாமி...’ பாடல் எண்பதுகளில் கேட்டு ரசித்த ராஜாவின் மெலடி மெட்டாய் இதயம் ஈர்க்கிறது. ஜே.தம்பிராமையா எழுதி வேல்முருகன் பாடியுள்ள ‘இங்கு எதுவுமே சரியில்ல...’ பாடல் வரிகள் போகிற போக்கில் மிகச்சாதாரணமாக தத்துவ முத்துக்களை உதிர்க்கின்றன. இன்றும் கிராமப்புறங்களில் புழக்கத்தில் இருக்கும் ‘டப்பா டப்பா வீரப்பா எப்படா கல்யாணம்...’ என்ற சிலேடை வார்த்தைகளையே கதம்பமாக்கிய பாடலில் வ.கருப்பனின் வரிகளும், உதயனின் மண்வாசனை வீசும் இசையும் திருவிழா ஆட்டத்தை கண்முன் நிறுத்துகின்றன.
புத்தகம்: கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்- இரா.பஞ்சவர்ணம்
மலையும், மலை சார்ந்ததுமான குறிஞ்சி நில மக்களின் அகவாழ்க்கை ஒழுக்கம் பற்றிப் பேசுவது குறிஞ்சிப்பாட்டு. இப்பாடல்களை இயற்றிய கபிலரின் தாவரவியல் அறிவைப் போற்றிக் கொண்டாடும் நூல் இது. குறிஞ்சி நிலத்தில் விளையும் 102 பூக்கள், 112 தாவரங்களை தனது பாடல்களில் பதிவு செய்துள்ளார் கபிலர். அப்பாடல்களை ஆய்வுசெய்து, எளிய தமிழில் பொருள் கூறி, பிற இலக்கியங்களில் அவை என்னென்ன பெயர்களில் இடம்பெற்றுள்ளன என்று விளக்கி, அறிவியல் பெயர், தாவரவியல் தகவல்களையும் பகுத்துத் தந்து வியக்க வைக்கிறார் பஞ்சவர்ணம். நூலின் இறுதியில் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. கடும் தேடலும், உழைப்பும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் இழையோடுகிறது. பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவரான நூலாசிரியர், தமிழுக்கும் தாவரவியலுக்கும் செய்த போற்றத் தகுந்த கொடை இந்த நூல்.
(288 பக்கங்கள், விலை: ரூ.300/-, வெளியீடு: பஞ்சவர்ணம் பதிப்பகம், காமராஜர் தெரு, பண்ருட்டி- 607106 பேச: 99653 62201.)
இதழ்: அம்ருதா
நவீன இலக்கியத்துக்கான களமாக வெளிவரும் மாத இதழ். வரம்புக்குள் சிக்காத விக்ரமாதித்யனின் வாழ்வியல் கவிதைகள், உயிரோட்டம் ததும்பும் வைத்தீஸ்வரனின் சின்னக் கவி ரஸங்கள் இரண்டுமே ரசனை. தமிழ்க்குடிகள், இஸ்லாமியர்கள் மீதான இலங்கை அரசின் வன்முறைகளை உரத்துப் பேசும் தேசிய சமூகத்துக்கு, இலங்கை பழங்குடிகள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் இளைய அப்துல்லாஹ். அண்மைச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கிய இளம் வீரர்கள் பற்றி அபிலாஷ் எழுதிய கட்டுரையும் கவனிக்க வைக்கிறது. சர்வதேச அரசியல், தேசிய விவகாரங்கள் பற்றிய ஆழமான படைப்புகளுக்கு இடையே சுவற்றில் பல்லி எப்படி ஒட்டுகிறது என்ற நடைமுறை விஞ்ஞானக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது ரசிக்க வைக்கிறது.
(ஆசிரியர்: பிரபுதிலக், தனியிதழ்: ரூ.20/-, ஆண்டுச் சந்தா: 240/-, முகவரி: எண் 12, கோவிந்த் ராயல் நெஸ்ட் அடுக்ககம், 2வது குறுக்குத் தெரு, 3வது மெயின்ரோடு, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை-35, பேச: 94440 70000.)
|