நல்லா இருக்கே!





அன்று எனது மோட்டார் சைக்கிள் பழுதாகிப் போனதால், நண்பரிடம் லிப்ட் கேட்டு அவர் ஸ்கூட்டர் பின்னால் தொற்றிக் கொண்டேன். அவரது அலுவலகம், டவுனிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வில்லியனூரில். எனது அலுவலகம் இருப்பது, வழியிலுள்ள ரெட்டியார் பாளையத்தில்!

நண்பர் வண்டியை சீராக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். நெல்லித்தோப்பு திருப்பத்தில் இவர் இன்னும் நிதானித்துத் திரும்பும்போது, பக்கவாட்டுப் பாதையிலிருந்து தாறுமாறாக ஒரு புல்லட் வேகமாக வந்து குறுக்கே புகுந்தது. நண்பர் சடன் ப்ரேக் போட்டு, புல்லட்காரனைப் பார்த்து, ‘‘நம்பர் ஒன்’’ என்றார். அந்த நபர் ஏதும் விளங்காது விழித்தபடி மீண்டும் வண்டியை முடுக்கினார். நானும் புரியாது குழம்பினேன்.

பெரியார் நகரை சமீபித்தபோது அது நடந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர்காரர் இன்டிகேட்டர் போடாமல், கையாலும் சைகை காட்டாமல் திடீரென வலதுபுறம் திரும்பினார். கிட்டத்தட்ட எங்களை இடித்திருப்பார். இப்போதும் சாமர்த்தியமாக பிரேக் போட்டு நிறுத்திய நண்பர், ஸ்கூட்டர்காரரைப் பார்த்து ‘‘நம்பர் டூ’’ என்றார். அந்த நபர் கவலையே படாமல் சிரித்தபடி சென்றார்.
கொஞ்ச தூரம் கடந்திருப்போம். முன்னால் போன பஸ்ஸை முந்திக் கொண்டு செல்ல முயன்ற ஒரு யமாஹா பார்ட்டி, அதற்கு வாய்ப்பில்லாததால் வேகம் குறைத்து ஒதுங்கினார். கிட்டத்தட்ட எங்கள் வண்டியை உராய்வது போல் அவர் வரவே, தார்ச்சாலையிலிருந்து மண்சாலைக்கு இறங்கி சமாளித்தார் நண்பர். இந்த முறை சற்று உரக்கவே, ‘‘நம்பர் த்ரீ’’ என்றார்.

பவழக்காரன் சாவடியை நெருங்கும்போது, பின்னால் ஓயாமல் ஹாரன் அடித்தபடி ஒரு பஸ் துரத்தியது. எங்களுக்கு முன்னால் போன மொபெட் காரர், அந்த பஸ்ஸுக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கி, எங்கள் ஸ்கூட்டருக்கு நேர் எதிரே பாதை மாறி வந்தார். இடித்திருக்க வேண்டியது! நண்பர் பிரேக் போட்டு சமாளித்து, அந்த நபரை கோபப் பார்வை பார்த்து, ‘‘நம்பர் ஃபோர்’’ என்றார்.  பொறுமையிழந்த நான் நண்பரைக் கேட்டேன். ‘‘என்ன ஒவ்வொரு தடவையும் ஒன், டூ, த்ரீன்னு நம்பர் சொல்றீங்க?’’

‘‘அதுவா... இன்னைக்கு வண்டி எடுத்ததுல இருந்து எதிர்த்தாப்புல சந்திச்ச முட்டாள்களோட எண்ணிக்கை. எப்படி வண்டி ஓட்டி வர்றானுங்க பார்த்தீங்கல்ல? இவனுகளை கோவிச்சுக்கவும் முடியாது; திட்டவும் முடியாது. ஆனா, நம்ம டென்ஷனும் குறையணுமே! அதான் ஒன், டூ, த்ரீ சொல்றேன். ‘ஒன்’னுன்னா, ‘இடியட் நம்பர் ஒன்’... ‘டூ’ன்னா, இடியட் நம்பர் டூ!’’
‘‘அப்படியா... இது நல்லா இருக்கே!’’

என்னோடு பேசிக்கொண்டே வந்ததால் சற்றே கவனக் குறைவாகப் போனவர், ரெட்டியார்பாளையம் நெருங்குகையில் எதிரில் வந்த ஹோண்டாவை இடிக்காத குறையாக வண்டியை நிறுத்தினார்.

அந்த ஆள் இவரைத் தாக்காத குறையாக முறைத்துவிட்டு, சற்றே பார்வையைத் திருப்பி, ‘‘நம்பர் சிக்ஸ்’’ என்று உரக்கச் சொல்லிட்டு அகன்றார்.

அசடு வழிந்த நண்பர் முகத்தைப் பார்க்காதது போல், நான் இறங்கிக் கொண்டேன்.