ஆல் ஈஸ் வெல்





முன்னாள் அமைச்சர் ஜானகிராம் வீட்டிற்குள் நுழைந்தது சி.பி.ஐ. டீம்.
‘‘சார்... உங்க வீட்டை சோதனை போட வந்திருக்கோம்... உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சிடுங்க. கொஞ்ச நேரம் ஒத்துழைப்பு கொடுங்க!’’
‘‘உங்க கடமையை நீங்க செய்ங்க... ஆல் ஈஸ் வெல்!’’
பல மணி நேரம் வீடு அலசப்பட்டது. எதுவுமே சிக்கவில்லை.

‘‘சாரி சார்!’’
‘‘என்ன சார்... உங்க கடமையை நீங்க செஞ்சீங்க. ஆனா ஒண்ணு சார், பதவியில இருந்தபோது பத்துக் காசு வருமானத்துக்கு அதிகமா சேர்க்கல. மக்களுக்கு நல்லதுதான் செஞ்சிருக்கேன். இது என் அரசியல் எதிரிகளோட சதின்னு நினைக்கிறேன். ஆல் ஈஸ் வெல்!’’
வெளியில் வந்த சி.பி.ஐ. அதிகாரி முகிலனுக்கு பொறி தட்டியது. தன் சக அதிகாரியை அழைத்து காதில் கிசுகிசுத்தார்.

அடுத்த நாள் பேப்பரில்...
முன்னாள் அமைச்சர் ஜானகிராம் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பத்திரங்கள்
சிக்கியதாக செய்தி.

‘‘எங்கள் சோதனையில் எதுவுமே சிக்கவில்லை. ஜானகிராம் அடிக்கடி, ‘ஆல் ஈஸ் வெல்’ என்று சொன்னது உறுத்தலாகப் பட்டது. வீட்டின் பின்புறம் கிணறு இருக்கிறதா என்று பார்த்தோம். இருந்தது. அதில் சோதனையிட்டபோது பணம், நகைகள், டாகுமென்ட்கள் எல்லாம் பாலிதீன் கவர்களில் அடைக்கப்பட்டு உள்ளே கிடந்தது. ஆல் ஈஸ் வெல்!’’ என்று பேட்டி கொடுத்திருந்தார் முகிலன்.