கடக்கும் காலம்

ஆங்கில எழுத்து ‘வி’ போல கொஞ்சம் பெரிய சைஸில் வெட்டப்பட்ட சல்வாரின் மூலமாக அனாமிகாவின் முதுகை சைட்டடித்துக் கொண்டிருந்தான் மாலை நேர சூரியன். லேட்டாகி விட்டது. ஹைகோர்ட்டிலிருந்து ஙிமிரிணிக்கிக் கொண்டிருந்தாள். சைட்டடித்த சூரியனும் சூடாக இருந்ததால் சோலார் பேட்டரி பைக்கும் போதுமான ஒத்துழைப்பு கொடுத்தது. ஸ்கூலில் இருந்து ஸாராவும் ஷெல்வந்தும் 7 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். இன்னமும் 17 நிமிடங்கள் 32 நொடிகளில் ஸ்டேஷனை தொட்டுவிட்டால் இரவு 8.11லிருந்து 8.12க்குள் ஏதேனும் ஒரு நொடியில் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து விடலாம்.
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வெறும் பிரெட், பிஸ்கெட், சாலடுகளால்தான் உயிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். இன்று அவர்களுக்கு இட்லி தருவதாக மதர் பிராமிஸ் செய்திருந்தாள். என்ன செய்வது... இந்த மெக்கானிகல் யுகத்தில் ஒவ்வொரு நிமிடமும் நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டோ, தீர்மானிக்கப்பட்டோதான் இருக்கிறது. அதிலும் அனாமிகா போன்ற புகழ்பெற்ற ஸ்பெஷல் வக்கீல்களுக்கு ஒரு உத்தமனைப் பார்ப்பது எவ்வளவோ கடினமோ, அதே கடினம் ஓய்வு நேரத்தைப் பார்ப்பதும்!
மேற்கண்ட வரிகளை நீங்கள் படித்து முடித்த அதே நொடியில் ரயிலில் ஏறிவிட்டாள் அனாமிகா. தனக்காக மொபைல் மூலம் முன்பதிவு செய்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து, அமர்ந்து, தன் ஜீன்ஸ் தொடைகளை மேஜையாக்கி, மடிக்கணினியின் தூக்கத்தைக் கலைத்தாள். மனு கொடுக்க வந்த மக்களை மீறிச் சென்று காரில் ஏறும் கலெக்டர் போல மரங்களையும் வீடுகளையும் உதாசீனப்படுத்தி விட்டு விரைந்தது ரயில். ஜன்னலுக்கு வெளியே விழுப்புரங்களும் திண்டிவனங்களும் உளுந்தூர்பேட்டைகளும் கடந்து கொண்டிருந்தன. மதுரை ஜங்ஷன் என்று 15 மொழிகளில் போர்டு சிறு புள்ளியாய்த் தெரிய ஆரம்பித்தபோது கணினியை கருணைக்கொலை செய்தாள். சென்னையில் வாடகை அதிகமென மதுரையில் குடியிருப்பது கொஞ்சம் செலவைக் குறைக்கிறது. மெட்ரோ பஸ் மூன்றே நிமிடங்களில் அவளை வீட்டு வாசலருகே இறக்கி விட்டது. உள்ளே வாட்டர் சோபாவில் அமர்ந்து, ஜெர்ரியை டாம் துரத்துவதற்கு சாட்சிகளாகிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.
‘‘ஹாய் குட்டீஸ்...’’ ‘‘ஹாய் மம்மி!’’ - இது ஸாரா; ‘‘பசிக்குதும்மா’’ - இது ஷெல்வந்த். ‘‘ரெண்டு நிமிஷம்டா கண்ணா, 2 மினிட்ஸ்...’’ தன் செல்போனின் ஸ்கிரீனை சமையலறை அலமாரியின் ஸ்கேனருக்குக் காட்டினாள். திறந்துகொண்டது. உள்ளே இட்லி என்று ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலிலிருந்து 6 மிட்டாய்களும் தேங்காய் சட்னி / தண்ணீர் என்று ஒட்டியிருந்த பாட்டில்களிலிருந்து தலா 3 மிட்டாய்களும் எடுத்துக்கொண்டாள். குழந்தைகளை நம்பி அலமாரியை விட முடிவதில்லை, அதிகமாய் உண்டு பெருத்து விடுகிறார்கள். இளைக்க வைக்கவே பணம் அதிகம் செலவாகிறது இப்போது. குழந்தைகளிடம் நீட்டும் முன் ஏதோ சந்தேகம் வந்தவளாக மிட்டாய்களின் அட்டைக் கவரை பரிசோதித்தாள். ‘Expiry Date OCT 2097' என்று இருந்தது.
ஒன்றும் பயமில்லை, கெட்டுப்போக இன்னமும் 4 மாசம் இருக்கிறது. குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு, அடுத்தநாள் வழக்குக்காக, மனிதர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண் ரோபோவைப் பற்றிய கேஸ் கட்டை எடுத்து குறிப்பெழுதத் தொடங்கினாள்.
|