உலகை வெல்லும் தெற்கு!





தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் படங்களைத் தயாரிக்கும் தென்னிந்தியத் திரையுலகம்தான், ஒரு ஆண்டில் ரிலீஸ் ஆகும் மொத்தப் படங்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேலான படங்களைத் தயாரிக்கிறது. ஆனாலும் தென்னிந்தியத் திரையுலகிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதற்கு பாதை அமைத்துக் கொடுக்கும் முதல் முயற்சிதான், ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ விழா. சுருக்கமாக ‘சிமா’ (SIIMA  South Indian International Movie Awards). இம் மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் துபாய் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறுகிறது இந்த விருது விழா. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தென்னிந்திய சினிமா விருது விழா ஒன்று உலகளாவிய மேடையில் நிகழ்கிறது. தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை தரும் அடுத்த தலைமுறை திரைக் கலைஞர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி முதல் நாள் நடைபெறுகிறது. அடுத்த நாள், தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி! சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், சிறந்த படம், அறிமுக நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், பாடகி, வில்லன், துணை நடிகர், ஒளிப்பதிவாளர் என நான்கு மொழிகளிலும் தலா 15 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருது பெறும் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பது ரசிகர்களாகிய நீங்கள்தான்; அது மட்டுமில்லை... இந்த விழாவில் பங்கேற்க துபாய் செல்லும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு!
நடுவர் குழுவால் இறுதி செய்யப்பட்ட ஒரு பட்டியலின்படி, ஒவ்வொரு விருதுக்கும் தலா ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்தப் பட்டியல் www.siima.in என்ற இணையதளத்தில் உள்ளது. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை இதிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இணையதளத்திற்குச் சென்று ‘நாமினீஸ்’ என்ற இடத்தில் க்ளிக் செய்தால், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும். இதில் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயரை மார்க் செய்த பிறகு ‘ஸ்ஷீtமீ’ என்ற இடத்தில் க்ளிக் செய்தால் உங்களின் ஓட்டு பதிவாகிவிடும்.

ரசிகர்களிடமிருந்து அதிக ஓட்டுகளைப் பெறும் கலைஞர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். நீங்கள் வாக்களிக்கும் பக்கத்திலேயே உங்களின் பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற விபரங்களைப் பதிவு செய்துவிட்டால், வாக்களிக்கும் ரசிகர்களிலிருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டு விருது விழாவில் நேரடியாகப் பங்கேற்க துபாய்க்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ‘சூரியன் எஃப்.எம்.’ ரசிகர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும். அதோடு அசத்தலான பரிசுகளும் வழங்கப்படும்.

திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகைகள் சமீரா ரெட்டி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சார்மி, ப்ரியாமணி, தீக்ஷா சேத், ஸ்ரேயா, ஆன்ட்ரியா ஆகியோர் நடனமாடுகின்றனர். சர்வதேச மாடல்களின் ஃபேஷன் ஷோ, பின்னணி பாடகர், பாடகிகள் வழங்கும் இசை நிகழ்ச்சி என ரசிகர்களின் விழிகளுக்கும் செவிகளுக்கும் காத்திருக்கிறது ஒரு மெகா விருந்து. விழா நிகழ்ச்சிகளை நடிகர் மாதவன், பார்வதி ஓமணகுட்டன், லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் தொகுத்தளிக்கின்றனர். இவ்விழா மூலம் வரும் வருவாயிலிருந்து ஏழ்மை நிலையிலிருக்கும் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகள் 25 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ஓட்டு போட நீங்கள் ரெடியா?