கமலோவியர்!





‘தோல்வியே வெற்றியின் முதல் படி’ என்பதற்கு மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்வே ஆதாரம். மாணவ, மாணவிகள் சின்னச் சின்ன தோல்விகளுக்காக துவளும் இந்தத் தருணத்தில் அவரின் திருப்புமுனை செம டைமிங்!
- கே.ஆர்.சந்தானகிருஷ்ணன், நீலகிரி.

‘பெட்ரோல் மழை பெய்ய மனுஷப்பயலுக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம்’ என்று ஆல்தோட்ட பூபதி சொல்லியிருப்பது ரொம்ப கரெக்ட். அதனால பெட்ரோல் மழை பெய்யுதோ இல்லையோ... அடிக்கடி அவுட்டிங் போகணும், வாரா வாரம் ஷாப்பிங் போகணும்னெல்லாம் தவளை கேக்காது. பெட்ரோலும் செலவாகாது!
- வி.சரஸ்வதி ஏழுமலை, புதுச்சேரி.

‘கமலோவியர்’ ஸ்ரீதரின் கை வண்ணம் அசர வைக்கிறது. கமல்ஹாசனின் அத்தனை கெட்டப்களையும் ஒரு சேர குரூப் போட்டோவில் பார்த்ததும் ஆச்சரியத்தில் ஆடிப் போனேன். கமலே பாராட்டுகிறார் என்றால் சும்மாவா?
- ‘மீசை’மூர்த்தி, மஞ்சக்குப்பம்.

‘செயற்கை இதயம் ரெடி’ கட்டுரை, அற்புதம். வருங்காலத்தில் மனிதனுக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வரலாம் போலிருக்கிறது. அது சரி, இந்த செயற்கை இதயத்திலாவது கருணை, பாசம் இதெல்லாம் இருக்குமா? இல்லை, இந்தக் கால இயற்கை இதயம் மாதிரிதானா?
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.

பெட்ரோல் விலை உயர்வு எதனால் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ‘எத்தனால்’ பெட்ரோலைப் பற்றி பேச்செடுத்திருக்கும் உங்களுக்கு ஒரு சபாஷ். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தில் பாதியை வாயில் போட்டுக் கொள்ளும் ஆயில் நிறுவனங்களை மீறி எத்தனால் பயன்பாட்டுக்கு வருவது சந்தேகமே!
- இரா.வளையாபதி, கரூர்.

எழுத்தாளனின் மனம் விசாலமானதாக இருக்க வேண்டும், மனதில் பட்டதை பட்டென போட்டு உடைக்க வேண்டும்... அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன், ஜெயகாந்தனுக்குப் பிறகு முன்னணியில் இருப்பது வரவேற்கத்தக்கது!
- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

‘நிழல்கள் நடந்த பாதை’யில் இந்த வாரக் கவிதை நின்று, நிதானித்து ரசிக்கச் செய்தது. கட்டுரையில் வெளியாகிருந்த ஒவ்வொரு வரிகளும் உறுதியான நிஜம்!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி வாகை சூடியவர்கள், வாழ்விலும் வெல்ல பயனுள்ள கல்வி வழிகாட்டியாக அமைந்தது தங்களின் இரு வாரத் தொடர்.
- எஸ்.அருணகிரி, தஞ்சாவூர்.