சுட்ட கதை சுடாத நீதி





தகிக்கும் வெயிலில் காலையிலிருந்து ஒரு பிளம்பரைத் தேடி அலுத்துப் போனான் அவன். கடைசியாகக் கிடைத்த ஒருவர் கேட்ட தொகை மயக்கம் வர வைப்பதாக இருந்தது. அவனைப் பொறுத்தவரை அது சின்ன பிரச்னை. பாத்ரூமிலிருந்து தண்ணீர் வெளியில் போகவில்லை. கால் கழுவுவதற்காக கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாலும், அது கழிவுநீர்க் கால்வாய்க்குப் போகாமல் வீட்டுக்குள் வந்தது. காலையிலிருந்து அவஸ்தையாக இருந்தது.

‘‘ஏதோ அடைப்பு இருக்கு. சும்மா கழற்றிப் பார்த்தால் போதும். அஞ்சு நிமிஷ வேலை. இதுக்குப் போய் இவ்வளவு கேட்கறீங்களே?’’ என்றான் அவன்.
‘‘எதையும் செஞ்சு பார்த்தாதான் கஷ்டம் தெரியும். அவ்வளவு சாதாரணம்னா நீங்களே சரி பண்ணிக்கோங்க’’ என்று சொல்லிவிட்டார் அவர்.

ஒரு வெறியோடு வீட்டுக்கு வந்தான். கையில் கிடைத்த உபகரணங்களை எல்லாம் எடுத்துப் போய், தடுப்பை அகற்றிவிட்டு பாத்ரூம் குழாயைப் பார்த்தான்; வீட்டுக்கு வெளியில் அதன் வெளிப்பக்கத்திலும் பார்த்தான். இரண்டு மணி நேர முயற்சிக்குப் பிறகு, ஒரு கம்பியை வளைத்து குழாய்க்குள் விட்டுப் பரிசோதித்தான். உள்ளேயிருந்து சிவப்பு நிற கரடி பொம்மை ஒன்று கம்பியில் மாட்டி வெளியில் வந்தது. தன் 3 வயது மகனின் விளையாட்டு பொம்மை அது என்பது புரிந்தது. விளையாட்டாக ஏதோ ஒரு குழாய்க்குள் போட்டிருப்பான் போல! அது சிக்கி, தண்ணீரைத் தடுத்திருக்கிறது.
பிரச்னையை சரிசெய்து விட்டதாக திருப்தி அடைந்தவன், எல்லா இணைப்புகளையும் சரிசெய்துவிட்டு பாத்ரூமுக்குள் தண்ணீர் ஊற்றிப் பார்த்தான். அப்போதும் தண்ணீர் வெளியேறவில்லை. திரும்பவும் எல்லாவற்றையும் முதலிலிருந்து கழற்றிப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு மிரட்சி தந்தது!

பக்கத்து வீட்டில் விளையாடப் போயிருந்த பையன் அப்போதுதான் திரும்பி வந்தான். நேராக அப்பாவிடம் வந்தவன், ‘‘சிவப்பு கரடி மட்டும்தான் வந்துச்சா? மொத்தம் ஆறு கரடி பொம்மைகளை குளிக்கட்டும்னு குழாய்க்குள்ள போட்டிருந்தேனே’’ என்றான்.