மனிதன் கையில் முளைத்த முதல் ஆயுதம் கல்! பிறகு உலோகங்களில் ஆயுதம் செய்தான். நாகரிகம் வளர வளர... மனிதர்களின் மனதில் வன்மமும் பகையுணர்வும் வளர்ந்துகொண்டே வருகிறது. வாள், ஈட்டி, வில்லிலிருந்து துப்பாக்கிக்கு ஒரே பாய்ச்சலாக நகர்ந்தவன், அதன் வெவ்வேறு அவதாரங்களை கடந்த நான்கைந்து நூற்றாண்டுகளில் படைத்து விட்டான். அணுகுண்டு வரை பார்த்துவிட்டு, ஆளில்லா விமானங்களை அனுப்பி குண்டுவீசும் வரை முன்னேறிய மனித இனத்தின் அடுத்த ஆயுதம், கம்ப்யூட்டர் வைரஸ்! உட்கார்ந்த இடத்திலிருந்தே எதிரி நாட்டை நிலைகுலையச் செய்யலாம்; உளவும் பார்க்கலாம். இந்த வாரம் இந்த விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றன அமெரிக்காவும் இஸ்ரேலும்!
றீ ‘ஃபிளேம்’ என்ற வைரஸால் தங்கள் அணுசக்தி மையங்கள் பாதிக்கப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டிருக்கிறது. இது இஸ்ரேல் அனுப்பி வைத்த வைரஸ். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர் வைரஸ்களிலேயே அதி நவீனமானது இது. கிட்டத்தட்ட ஏவுகணை போன்றது. துல்லியமாக ஒரு கம்ப்யூட்டரில் ஊடுருவி, அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும், தன்னை ஏவியவர்களின் சிஸ்டத்துக்கு அனுப்பி வைத்துவிடும். அதன்பின், தான் புகுந்த கம்ப்யூட்டரை செயலிழக்க வைத்துவிடும். யுரேனியம் உற்பத்தி பிரிவில் இருக்கும் முக்கியமான கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் இப்படி தகவல்களைத் திருடி ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது இஸ்ரேல். அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே ஈரானின் அணுசக்தி மையங்களை குண்டுவீசித் தாக்கி அழித்தது இஸ்ரேல். இம்முறை பூமிக்கு அடியில் பாதுகாப்பான இடத்தில் ஈரான் அடுத்த முயற்சியைச் செய்ய, வைரஸ் தாக்குதலால் அவர்களை நிலைகுலையச் செய்திருக்கிறது இஸ்ரேல்.
றீ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல ‘ஸ்டக்ஸ்நெட்’ என்ற வைரஸ் ஈரான் அணுசக்தி மையங்களில் ஊடுருவியது. ‘ஒரு தேசத்தால் ஏவி விடப்பட்ட முதல் சைபர் அட்டாக்’ என கம்ப்யூட்டர் நிபுணர்களால் வர்ணிக்கப்படும் இதன் காரணகர்த்தா அமெரிக்கா. ‘‘ஈரானின் அணு ஆயுத முயற்சிகளை ஏவுகணைத் தாக்குதல் மூலம் நிறுத்துவோம்’’ என இஸ்ரேல் அறிவித்தது. இதனால் அங்கு பெரும் போர் எழும் அபாயம் இருந்தது. தன் செல்லப்பிள்ளையான இஸ்ரேலை அடக்கி வைத்துவிட்டு, அமெரிக்கா சந்தடியில்லாமல் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது. ஈரானின் அணு ஆயுத முயற்சிகளை சுமார் 2 ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் பணியை இது வெற்றிகரமாக செய்தது.
- இப்போது குட்டு வெளிப்பட... அமெரிக்கா தர்மசங்கடத்தில் தவிக்கிறது. அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் நிருபர் டேவிட் சாங்கர் எழுதியிருக்கும் 'Obama's Secret Wars and Surprising Use of American Power' என்ற புத்தகம் கடந்த வாரம் வெளியானது. பல திடுக்கிடும் தகவல்களை அது அம்பலப்படுத்தி இருக்கிறது. கம்ப்யூட்டர் வைரஸ்களைப் பரப்பி எதிரி நாடுகளின் ஆயுத முயற்சிகளையும் உளவு வேலைகளையும் முறியடிக்க ஜார்ஜ் புஷ் காலத்திலிருந்தே அங்கு முயற்சிகள் நடக்கின்றன. ‘அமெரிக்காவின் கணினிக் கட்டமைப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய அமெரிக்க சொத்து’ என்று தான் ஆட்சிக்கு வந்தபின் அறிவித்தார் ஒபாமா. அதன் தொடர்ச்சியாக 2010 மே மாதம் யு.எஸ் சைபர்காம் என்ற பெயரில் புதிய பாதுகாப்புப் படையே துவங்கப்பட்டது. அமெரிக்க கணினி கட்டமைப்பை எதிரிகளின் வைரஸ்களிடமிருந்து காப்பதும், பதில் தாக்குதல் நடத்துவதும்தான் இந்தப் படையின் பணியாகச் சொல்லப்பட்டது. ஆனால், தாக்குதல் வரை காத்திருக்காமல் ரகசியமாக பல உளவாளி வைரஸ்களை அன்று முதலே அவர்கள் உருவாக்கத் தொடங்கிவிட்டனர். இந்த ப்ராஜெக்ட்டை ‘ஒலிம்பிக் கேம்ஸ்’ என்று சங்கேத மொழியில் அவர்கள் அழைத்தனர்.
இவர்களின் முதல் தயாரிப்பு, ஸ்டக்ஸ்நெட் வைரஸ். இன்டர்நெட் வழியாக அனுப்பினால் ஆன்ட்டி-வைரஸ் சாஃப்ட்வேர் நிபுணர்களின் பார்வையில் சிக்கி விடும் என்பதால், உளவாளிகள் மூலம் ஈரானுக்கு இதை அனுப்பி வைத்தார்கள். ஈரான் அணுசக்தி மையத்தில் பராமரிப்புப் பணிகள் செய்துவந்த ஒரு தனியார் நிறுவன ஊழியர் மூலம் இது உள்ளே போனது. அங்கே கம்ப்யூட்டர்களை இது செயலிழக்கச் செய்யும்வரை யாருக்கும் விஷயம் தெரியவில்லை. அங்கிருந்து யாரோ ஒருவரின் லேப்டாப்பில் நுழைந்து வெளியுலகுக்கு இது அறிமுகமான பிறகுதான், இந்த வைரஸ் தாக்குதலை ஈரான் உணர்ந்தது.
அப்படி வெளியில் வந்த வைரஸில் இஸ்ரேல் அரசு சில பல மாற்றங்கள் செய்து, சூடான், சிரியா, லெபனான் என தங்கள் விரோதி நாடுகளுக்குப் பரப்பி விட்டது. இலக்கு தவறி அப்பாவிகளை அழிக்கும் ஏவுகணை போல இந்த வைரஸ் உலக நாடுகளின் பல கம்ப்யூட்டர்களை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்டக்ஸ்நெட் ஜகஜாலக் கில்லாடி வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். இதே போல இந்தியாவைக் குறி வைக்கும் எத்தனை வைரஸ் உளவாளிகளோடு நாம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோமோ... இந்திய தொழில்நுட்பத் துறைக்கே வெளிச்சம்!
உண்மை அம்பலமான பிறகும், ‘எங்கள் தயாரிப்புதான் இந்த வைரஸ்’ என்று ஒப்புக்கொள்ள அமெரிக்கா தயக்கம் காட்டுகிறது. உலகம் முழுக்க இப்படி கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்கிப் பரப்பிவிடும் விஷமிகள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். ஒரு தேசமே இதைச் செய்கிறது என்றால், தனிப்பட்ட முறையில் அவர்கள் செய்வதும் நியாயம் என்று ஆகிவிடுமே! அந்த பயம்தான் காரணம். எல்லா ஆயுதங்களும் ஏந்தியவரையும் என்றாவது ஒருநாள் தாக்கி விடுகிறது!
- கோகுலவாச நவநீதன்