ஆர்யாவுக்கும் ஹன்சிகாவுக்கும் ஏற்கனவே காதல்...





இந்தி ‘டெல்லி பெல்லி’ தமிழுக்கு வருகிறது என்றதுமே, ஒரிஜினல் படத்தைப் பார்த்த எல்லோருக்குமே எழுந்த ஒரே கேள்வி... முன்னதில் இருந்த ஆபாசக் காட்சிகளும், வசனங்களும் தமிழிலும் விவாதத்துக்கு உள்ளாகுமா என்பதுதான். தமிழில் ‘சேட்டை’ என்றும் தலைப்பு இருக்க, நம் கேள்விக்கு பதில் சொன்னார் படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன்.

‘‘உங்க கேள்வி நியாயமானதுதான். ஆனா இந்தியில வல்காரிட்டி தூக்கலா இருந்ததால, அது மட்டுமே பிரதானமா பேசப்பட்டு படத்துல இருந்த ஜீவன் பெரும்பாலும் கவனத்துக்குள்ளாகாம போயிடுச்சு. ஆனா அந்த ஜீவன்தான் படத்தோட வெற்றிக்கு மூல காரணமாச்சு. சாதிக்கணும்னு நினைக்கிற பத்திரிகையாளனோட வாழ்க்கை நிகழ்வுகளும், அதை எழுத்தாக்கி எப்படி ஜெயிச்சான்ங்கிறதும்தான் படத்தோட மூலக்கதை. அந்த ஜீவனை அப்படியே எடுத்துக்கிட்ட நாங்க, மேற்படி வல்காரிட்டி விஷயங்களை கவனமா தவிர்த்துட்டோம்.

இங்கே ஆபாசமில்லாம இருக்கணும்னுதான் தொண்ணூற்றெட்டு சதவீதம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க. அவங்களை ஏமாற்ற நாங்க விரும்பலை. ஒரு குடும்பமா படம் பார்க்க வரும்போது ‘ஐயய்யோ இந்தப் படத்துக்கு நாம இவங்களோட வந்துட்டமே’ன்னு இளைஞர்களோ, பெரியவங்களோ நெளிய வேண்டிய நெருக்கடியை நாங்க பார்வையாளர்களுக்குக் கொடுக்கலை.

‘கண்டேன் காதலை’ படத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தப்ப கூட, பாதிக்கு மேல என் கற்பனைல உருவான காட்சிகளைத் தான் வச்சிருந்தேன். சந்தானத்தோட ‘மொக்கராசு’ கேரக்டரெல்லாம் தமிழ்ல புதுசு. இந்த ‘டெல்லி பெல்லி’ ரீமேக்லயும் அப்படித்தான். பாதிக்கு மேல ஒரிஜினலா யோசிச்சிருக்கோம். ஒரிஜினலை என்னோட சேர்ந்து மேலும் மெருகேத்துனதுல இந்தப்பட புரட்யூசர் ‘யு டி.வி’ தனஞ்செயனுக்கும், வசனங்களை எழுதிய ஜான் மகேந்திரனுக்கும் பங்கிருக்கு.


இந்தப் படத்துக்கான நடிகர்களை கவனமா தேர்ந்தெடுத்ததுலயே படத்தோட நேர்த்தி கூடுதலா மாறிடுச்சு. இளம் பத்திரிகையாளரா ஆர்யா வர்றார். ‘நான் கடவுள்’, ‘வேட்டை’ல எல்லாம் அதிரிபுதிரியா பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் செய்த அவருக்கு, ஒரு மாறுதலா அவருக்கே உரிய இளமை அழகோட அமைஞ்ச கேரக்டர் இது. ரிப்போர்ட்டரா வர்றதால என்னோட ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தனோட பெயரை அவருக்கு வச்சு, மத்தவங்க சுருக்கமா ஜே.கேன்னு கூப்பிடற மாதிரி செய்திருக்கேன். அவரும் இந்தப் படத்துக்கு விசேஷ கவனம் எடுத்து முழு ஒத்துழைப்போட நடிச்சுக்கிட்டு இருக்கார்.


அவருக்கு ஜோடியா வர்ற ஹன்சிகாவுக்கு படத்துல முக்கிய பங்கிருக்கு. பார்த்ததும் துரத்திப் போய் காதலிக்கிற வழக்கமான ட்ரீட்மென்டா இல்லாம, ஏற்கனவே இருக்கிற ‘ஹாஃப்வே லவ்’வா இதுல காதல் வருது. ஆர்யா வேலை பார்க்கிற பத்திரிகையில ‘கிசுகிசு’ எழுதற ‘நடுப்பக்க நக்கி’யா சந்தானம் வர்றார். ‘வெங்கட்ன்னு பெயர் வச்சு ‘வெங்கி’ன்னு சுருக்கிக்கறதில்லையா... அப்படி நாகராஜை நறுக்கி ‘நக்கி’ன்னு வச்சுக்கிட்டேன்’னுவார். தன் கேரக்டர்ல கவனமெடுத்து அவரே எழுதியிருக்கிற பல வசனங்கள் படத்துக்கு பெரிய பலமா அமைஞ்சிருக்கு. கார்ட்டூனிஸ்ட்டா வர்ற பிரேம்ஜி, சைகையிலயே சிரிக்க வைப்பார். ஆங்கிலப் பத்திரிகை நிருபரா இதுவரை பார்க்காத பொலிவோட
அஞ்சலி நடிச்சிருக்காங்க.

ஒரிஜினல்ல பாட்டு இல்லை. ஆனா இங்கே பட்டையைக் கிளப்ப எஸ்.தமன் இருக்கிறதால, நாலு பாட்டு வச்சிருக்கோம். ஒளிப்பதிவுக்கு பி.ஜி.முத்தையா என்னோட தோள் கொடுத்திருக்கார். வால்தனமான இளமை ஸ்கிரிப்ட்னு புரிய வைக்கிறதுக்காக வொர்க்கிங் டைட்டிலா ‘சேட்டை’ன்னு வச்சிருக்கோம். பட ரிலீசுக்குள்ள இந்த டைட்டில் இன்னும் பளிச்சுன்னு மாற சாத்தியம் இருக்கு..!’’
- வேணுஜி