மனைவி கொடுமை செய்தால்... ஆண்களும் கேட்கலாம் விவாகரத்து!





மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ‘அந்த வரம் சாபமாகிற சமயத்தில், மனைவியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை’ என்று சுளீரெனச் சொல்லியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். ‘மனைவியால் டார்ச்சருக்கு ஆளாகிற கணவனுக்கும் விவாகரத்து பெற உரிமை இருக்கிறது’ என்கிற அதன் சமீபத்திய தீர்ப்பு, ‘அதட்டல்’ ஆத்துக்காரிகளை அடக்கி வாசிக்க வைக்குமா? அல்லது, திருமணம் என்ற முள்வேலிக்குள் சிக்கி வதைபடும் அப்பாவிப் பெண்களுக்கு இன்னொரு ஆபத்தாக முடியுமா? 

அப்பாவி ஆண்களுக்கு விடுதலை வாங்கித் தந்த, ‘முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகள் வழக்கு’ குறித்து அந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் வில்சனிடம் பேசினோம்.
‘‘கல்யாணம் பண்ணும்போது பல பொருத்தம் பார்க்குறோம். ஆனா கல்யாணத்துக்குப் பிறகு ரெண்டு பேர் மனசும் ஒத்துப் போகுமான்னு நினைக்கத் தோணுதா? அங்கதான் தப்பு நடக்குது. இந்தக் காலத்துல மனசு ஒத்துப் போகாட்டி, அட்ஜஸ்ட் பண்ணி வாழ்க்கையைக் கழிக்கறது குறைஞ்ச சதவீதம் பேர்தான். அந்தக் கொஞ்ச பேரும் ஆண்களாத் தான் இருக்க முடியும். பெண்களைப் பொறுத்தவரை, கணவனைப் பிடிக்கலைன்னா நேரடியா சொல்றதில்லை. ‘அவர் நடவடிக்கை சரியில்லை’, ‘அவர் குடும்பம் என்னைக் கொடுமைப்படுத்துது’, ‘வரதட்சணை கேக்கறாங்க’... இப்படி எதையாச்சும் சொல்லிட்டே இருப்பாங்க. இதுக்கெல்லாம் பரிகாரம் பண்ணிட்டே இருந்தாலும் அவங்க புகார் நிக்காது. ஏன்னா, அந்த நேரத்துல அவங்க ரெண்டு மனசா இருப்பாங்க. கணவனை டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணா சமூகம் என்ன சொல்லுமோன்னு தயக்கம். அதுக்காக கணவனைப் புரிஞ்சு நடந்துக்கற தன்மையும் இருக்காது.

எங்கிட்ட முதல்ல இதே டைப்ல ஒரு ஜோடி வந்தாங்க. அந்தப் பையன் அநியாயத்துக்கு சாதுவா இருந்தார். மனைவியை எந்த நிலையிலும் ஏத்துக்க தயாரா இருந்தார். அதனால பெண்ணோட பெற்றோரைக் கூப்பிட்டு, ‘பெண்ணுக்குக் கவுன்சலிங் கொடுத்துப் பாருங்க; சரியா வரலாம்’னு அனுப்பி வச்சேன். இப்ப மனசு மாறி நல்லபடியா வாழறாங்கன்னு நினைக்கறேன். 
இந்த வழக்குல ‘என்னை இவகிட்ட இருந்து விடுவிச்சா போதும்’னு நின்னார் கணவர். ஆரம்பத்துல கணவர் மேல புகார் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பி வச்ச மனைவி, பிறகு அவர்கூட வாழணும்னு சொன்னாங்க. அதைக்கூட மனப்பூர்வமா சொன்னாங்களான்னு தெரியலை. ஏன்னா, அந்தப் பொண்ணுக்கு சுயமா முடிவு எடுக்கவும் தெரியல. பொண்ணை இயக்கறவங்களும் தப்பான அட்வைஸ் தந்திருக்காங்க’’ என்கிறார் வில்சன்.

‘கணவனை தெய்வமாகத் தொழுகிற நாட்டில், கொடுமைப்படுத்துகிற மனைவிகளா?’ மேரேஜ் கவுன்சலிங் சென்டர் நடத்தும் சு.சிதம்பரம் தன்னிடம் வந்த தம்பதிகள் குறித்துச் சொல்கிறார்...

‘‘கல்யாணம் முடிஞ்ச கையோட பிரச்னைன்னு வர்ற தம்பதிகள்ல பலருக்கு முக்கியப் பிரச்னை தாம்பத்யம் சம்பந்தப்பட்டதாத்தான் இருக்கு. அதை வெளிப்படையா பேச ரெண்டு தரப்புலயுமே தயக்கம். அதனால காரணம்னு, வேற எதையாச்சும் சொல்றாங்க. முத்தம் பரிமாறிக் கொள்றதுல பிரச்னைன்னு போன மாசம் ஒரு தம்பதி வந்துட்டாங்க. பெண்களைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு டைப்தான். தாம்பத்ய வாழ்க்கை நல்லபடியா அமையாத பட்சத்துல ஒரு டைப் பெண்கள் சகிச்சிட்டுப் போயிடுறாங்க. அடுத்த டைப் பொண்ணுங்க, அந்த வாழ்க்கையில இருந்து விடுபட நினைக்கிறாங்க. இந்த ரெண்டாவது டைப் பெண்கள்தான் ‘பிடிக்காத கணவனோட கை பட்டாலே குத்தம்’னு சொல்றவங்க.

ஈரோடு பக்கமிருந்து ஒருத்தர் போன மாசம் வந்திருந்தார். சமீபத்துல கல்யாணம் பண்ணுனவர். ‘வெட்கத்தை விட்டுச் சொல்றேன்; என்னை சில சமயம் வீட்டைப் பூட்டிட்டு மிதிக்கிறா. இது என் வீட்டுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு பயந்தே தனிக் குடித்தனம் போனேன். அதனால என் வீட்டுலயும் கெட்ட பேரு. இனிமேலும் பொறுத்துக்க முடியாது. என்ன செட்டில்மென்ட் வேணாலும் பண்றேன்; விவாகரத்து வாங்க முடியுமா சொல்லுங்க’ன்னார். அந்தப் பொண்ணுகிட்ட பேசுனப்ப, தாம்பத்யத்துல இருக்கற குறைபாடுதான் அடிப்படைக் காரணம்னு தெரிஞ்சது. முடிஞ்சவரை கவுன்சலிங் தந்து அனுப்புனோம். மொத்தத்துல, எவ்வளவு சொல்லியும் மனைவிக்கு கணவனைப் பிடிக்கலைன்னா, ரெண்டு பேரையும் பிரிச்சு விடறதுதான் நல்லது’’ என்கிறார் சிதம்பரம்.


‘கணவன்மார்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இப்படியொரு தீர்ப்பு, அப்பாவி மனைவிகளை மிரட்டப் பயன்படுத்தப்படாதா?’ வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் கேட்டோம்.

‘‘எந்த சட்டத்துலயுமே ரெண்டு அம்சங்களும் இருக்கே. ஆனா சாதுவான பொண்டாட்டியை ‘அடிக்கிறாள்’னு குத்தம் சொல்ல முடியுமா? நிரூபிக்கறது கஷ்டம். இன்னொரு விதத்துல, கட்டிட்டு வந்த பிறகு சீர், செனத்தின்னு எதையாச்சும் கேட்டா தாராளமா ‘முடியாது’ன்னு சொல்றதுக்கு இந்தத் தீர்ப்பு வழி பண்ணியிருக்கு. விடாம கேட்டு நச்சரிச்சா ‘உதை விழும்’னு கூட எச்சரிக்கலாம். ‘மனைவி அடிக்கிறாள்’னு கோர்ட்டுக்குப் போனா, ‘எதுக்கு அடிச்சா’ன்னு அங்க சொல்ல வேண்டியிருக்குமே’’ என்கிறார் இவர்.

இந்த விவகாரம் குறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் உ.வாசுகியிடம் கேட்டபோது, ‘‘இது வினோதமான செய்தியாத்தான் இருக்கு. வினோதங்கள் எப்பவுமே அரிதாத்தான் நிகழும். ஆனா அன்றாடம் கண்முன் நிகழ்கிற கொடுமைகளுக்கெல்லாம் நாம இன்னும் தீர்வு காணலை. அங்க கஷ்டப்படுறாங்க ஆயிரக்கணக்கான பெண்கள்’’ என்கிறார்.
அப்பாவி ஆண்களே... அவர்களுக்காகவும் வேண்டுங்கள்!
- அய்யனார் ராஜன்