திருப்புமுனை : த.செ.ஞானவேல்




‘அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே’ என்று பொறிக்கப்பட்டுள்ள ‘ரமணீயம்’ அலுவலகம் ஜெகநாதனுக்கு கோயில். தென்சென்னையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் பலவற்றில் ஒளிரும் ‘ரமணீயம்’ என்ற பெயரை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் சின்னமாக்கியிருக்கிறார் ஜெகன். ‘‘வேலை பார்க்கிற இடத்தை கோயிலா மதிக்கிறது நல்லது. எந்த மதமா இருந்தாலும், தப்பு பண்ணாம ஒவ்வொருத்தரும் மனுஷனா இருக்க முயற்சி பண்ற இடம் கோயில்தான். சென்னையில ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நாங்க கட்டின வீடுகள் அட்ரஸா மாறி இருக்கு. ஆனா, எதுவுமே இல்லாம இருந்தவனுக்கு கடவுள் கொடுத்த அட்ரஸ் ‘ரமணீயம்’. அவர் கொடுத்த வேலையை பயபக்தியோடு ஒழுங்கா செய்யணும் இல்லையா?’’ என்று கேட்டு சிரிக்கிறார்.

‘‘மயிலாடுதுறை பக்கத்துல ஆசாரமான குடும்பத்துல பொறந்தவர் அப்பா வெங்கடரமணி ஐயர். சென்னையில் இருந்த தன் குருநாதர் வேணுகோபால சுவாமிகள் காலடியில் வந்து செட்டில் ஆயிட்டார். எனக்கு ஜெகநாதன்னு பேரு வெச்சதும் குருநாதர்தான். அஞ்சு வயசு வரைக்கும் அவர் காலடியில இருந்து வளர்ந்தது என் பாக்கியம்.    அம்மாதான் கொஞ்சம் சிரமம் அனுபவிச்சாங்க. வசதியான குடும்பத்தில் பொறந்தவங்க. வேலைக்குப் போகாத கணவர், வளர்ற வயசுல இருக்கிற நாலு பிள்ளைகள், அறிமுகம் இல்லாத சென்னை வாழ்க்கைன்னு எல்லாமே அவங்களுக்கு சவாலா இருந்துச்சு. பொறந்த வீட்ல போட்ட நகைகளை வித்தும், அடகு வச்சும் பசங்க தலையெடுக்கிற வரைக்கும் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டாங்க. அடகுக் கடையும், வட்டிக் கடையும் எங்க வாழ்க்கையோட அங்கமாவே மாறிடுச்சுன்னு சொல்லலாம்.


திருவான்மியூர் கோயிலைச் சுத்தித்தான் வாழ்க்கை. மருந்தீஸ்வரரை வணங்கிட்டுதான் எந்த காரியத்தையும் தொடங்குறது வழக்கம். ‘அவர் பார்த்துக்குவாரு’ என்கிற நம்பிக்கை இதுவரை ஒருமுறைகூட தப்பானது இல்லை. எனக்கு பி.காம் படிக்க ஆசை. நல்ல மார்க் எடுத்திருந்தேன். 2 ஆயிரம் ரூபாய் டொனேஷன் இருந்தாதான் படிக்கமுடியும்னு சொல்லிட்டாங்க. 200 ரூபாய் கட்டுறதுக்கே கடன் வாங்க வேண்டிய நிலையில, என்னை பி.ஏ. எகனாமிக்ஸ் சேர்த்து விட்டுட்டாங்க. என்னால அதை ஏத்துக்கவே முடியலை. காலேஜ்ல நடந்த ஒரு விழாவுல, ‘மாணவர்கள் எல்லாம் என் பிள்ளைகள்’னு பேசினார் கல்லூரி முதல்வர். மருந்தீஸ்வரர்கிட்ட வேண்டிக்கிட்டு, நேரா அவர் முன்னால போய் நின்னேன். ‘உங்க பையனுக்கு நல்ல மார்க் இருந்தும், பணம் இல்லேங்கிறதுக்காக வேற படிப்பு படிக்கச் சொல்வீங்களா’ன்னு அழுதுக்கிட்டே கேட்டேன். காலேஜ் ஆரம்பிச்சு 4 மாசம் முடிஞ்சிடுச்சு. முதல் செமஸ்டர் தேர்வு வரப்போற நேரத்துல ஒரு பையன் இப்படி வந்து கேட்டது அவரை பாதிச்சிடுச்சு போல. நிர்வாகத்துகிட்ட பேசி, பி.காம் படிக்க  ஸ்பெஷல் அனுமதி வாங்கித் தந்தார். ‘மனசார நம்பினால், அது கண்டிப்பா நடக்கும்’ என்கிற நம்பிக்கை மனசுல ஆழமா விழுந்த முதல் நிகழ்வு இது.

அடுத்தது என்னுடைய காதல். 10 வருஷம் காதலிச்சு, மனசுக்குப் பிடிச்சவங்களையே கல்யாணம் பண்ணேன். ‘எல்லாம் தெய்வத்தின் செயல்’னு நம்புறவன் நான். ‘கடவுள் என்பது மாயை’ன்னு சொல்ற கம்யூனிஸ்ட் குடும்பத்துல பிறந்து வளர்ந்தவங்க என் மனைவி. வேற வேற கருத்துகள் இருந்தாலும், அன்பு குறையாம இருக்கிறதுதான் உண்மையான காதல். திருமணம் முடிஞ்சி 25 வருஷம் ஆச்சு. காதலிச்ச 10 வருஷத்தையும் சேர்த்து, 35 வருஷமா அன்பு குறையாம இப்பவும் காதலிக்க முடியுது. ‘வாழ்க்கை பூரா இந்தப் பொண்ணுகூடதான் வாழணும்’னு நினைச்சேன். கடவுள் கிட்ட இருந்து அதை நடத்தி வச்சார். பி.காம் முடிச்சதும் இன்சூரன்ஸ் கம்பெனியில் அரசு வேலை. முதல் தேதி கைக்கு சம்பளம் வந்துடும். ஆனா, தினம் அரைமணி நேரம்கூட வேலை இருக்காது. வேலையே இல்லாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது கஷ்டமா இருந்துச்சு.

மனசுக்குப் பிடிச்ச பொண்ணு, அரசாங்க வேலை, சொந்தமா ஒரு புல்லட்... இதுக்கு மேல வாழ்க்கையில வேற என்ன வேணும்? ‘இது பத்தாது. கல்யாணத்துக்குள்ள வேற ஏதாவது உருப்படியா பண்ணுங்க’ன்னு முதல் விதையை விதைத்தார் என் மனைவி கீதா. ‘டெவலப்மென்ட் ஆபீஸர்’ என்கிற வேலையில் ஊர் ஊராக அலைந்து திரிந்து வாடிக்கையாளர்களிடம் பிரீமியம் தொகை வசூல் செய்யணும். விரும்பி அந்த வேலையை எடுத்துக் கொண்டேன். வேலூரில் மண்டல தலைமை அலுவலகம், காஞ்சிபுரத்தில் மாவட்ட அலுவலகம், மாமல்லபுரத்தில் வங்கிக் கணக்கு, என் வீடு சென்னையில்! இந்த நான்கு ஊர்களுக்கும் புல்லட்டில் போய் வந்து கொண்டிருந்தேன். உழைப்பு என்னவென்று புரிய வைத்த அனுபவம் அது. வேலூர் வெயிலில் காய்ந்து, காஞ்சிபுரம் மழையில் தொப்பலாக நனைந்து, சென்னை வருவதற்குள் போட்டிருந்த துணி உலர்ந்துவிடும்.


இன்சூரன்ஸ் பிரீமியம் வாங்கும்போது, வாடிக்கையாளர்களுடன் நல்ல நட்பு உருவாகும். சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. வீடு தேடுவதிலும், அதற்கான முயற்சியிலும் என் வாடிக்கையாளர்கள் பலர் இருப்பதைப் பார்த்தேன். சொந்தமாக தொழில் செய்கிற எண்ணமுள்ள நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டி விற்பனை செய்யலாம் என்கிற முடிவு எடுத்தோம். எல்லாரும் அலுவலகத்தில் ஒண்ணேகால் லட்ச ரூபாய் லோன் போட்டு, தொழிலை பகுதிநேரமாகச் செய்ய முடிவெடுத்தோம். திருவான்மியூரில் ஒரு இடம் விலைக்கு வந்தது. என்னிடம் சேமிப்பாக இருந்த இருபதாயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்து இடத்தை விலை பேசினேன்.

சொல்லி வைத்தது போல மூன்று நண்பர்களும் வேறு வேறு காரணம் சொல்லி விலகினர். காரணம் இல்லாமல் கடவுள் சோதிக்கமாட்டார் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது. அந்த இடத்தை வாங்கினால் மட்டுமே என்னுடைய இருபதாயிரம் கிடைக்கும். 25 ஆண்டுகளுக்கு முன்னால் இருபதாயிரம் பணம், பல வருட சேமிப்பு. ஒரு லோடு செங்கல் என்ன விலை, மணல் எங்கே வாங்குவது, வீடு கட்ட அனுமதி எப்படி வாங்குவது, பத்திரம் எப்படி இருக்கும் என்பது போன்ற அடிப்படைத் தகவல்கள்கூட தெரியாமல் துணிந்து இறங்கினேன். முதல் தலைமுறையாக தொழில் தொடங்குபவர்களுக்கு துணிச்சல்தான் முதல் துணை. யோசித்து முடிவு செய்வதென்றால், எந்த முடிவையும் எடுக்க முடியாது. அறிவால் செயல்படுவதைவிட, மனசு சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டால்தான் அடுத்த அடி வைக்க முடியும்.

எதிர்பார்ப்புக்கு மேல் பலன் கிடைத்தது. அஸ்திவாரம் போட்டதுமே எல்லா வீடுகளும் விற்றுவிட்டன. அதில் ஒரு வீடு லாபமாகக் கிடைத்தது. வாழ்நாளெல்லாம் அரசு வேலை செய்தால்தான் சென்னையில் சொந்தமாக ஒரு ப்ளாட் வாங்க முடியும். ஆறு மாதத்தில் எனக்கு ஒரு வீடு சொந்தமாக இருந்தது. ‘நாலு பேராக செய்யவேண்டாம். நீ தனியாளாகவே செய்’ என்பது கடவுள் கட்டளையாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ‘ரமணீயம்’ என்கிற பெயரை அப்பா கொடுத்தார். அதையே நிறுவனத்தின் பெயராக வைத்தேன்.    

அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழுநேரம் நிறுவனத்தில் கவனம் செலுத்தியது மிக முக்கியமான முடிவு. ஏற்ற இறக்கங்களோடு முன்னேறிய பாதையில், ‘கலெக்ஷனுக்கும் லாபத்திற்கும்’ வித்தியாசம் புரிவதற்குள் பல இழப்புகளைச் சந்தித்தேன். சிவில் எஞ்சினியரிங் படித்துவிட்டோ, ஆர்க்கிடெக்ட் முடித்துவிட்டோ இந்தத் தொழிலுக்கு நான் வரவில்லை. முழுக்க முழுக்க அறியாமையில் வந்தேன் என்று சொன்னாலும் பொருந்தும். விவரம் தெரிந்து அலசி ஆராய்ந்திருந்தால், ‘இவ்வளவு பெரிய முதலீடு செய்கிற தொழில் ஒத்து வராது’ என்று பயந்து நிச்சயமாக ஒதுங்கி இருப்பேன். ‘எப்படி ஏமாற்ற வேண்டும் என்று தெரியாத’ என் அறியாமை எனக்குப் பெரிய பலமாக இருந்தது. குறுக்கு வழிகளை மனம் யோசித்ததே இல்லை. கடவுளின் அனுக்கிரகமும் ஊழியர்களின் அர்ப்பணிப்பும் எங்களை தொடர்ந்து வளர்த்துவிட்டன. என் நிறுவனத்தில் முதல் ஊழியன் நான். ஆலமரம் போல கிளைவிரித்து விழுதுகளை பரப்பி வளர வேண்டும் என்கிற சிந்தனை இயல்பாக வந்தது. நான் வளரும்போது, என்னோடு வேலை பார்ப்பவர்களும் சேர்ந்து வளர்ந்தார்கள்.

கடவுள் சிந்தனை இருந்ததால், தப்பு செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக நடந்து கொள்கிறேன். அதற்குரிய நல்ல பலன்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பெரிய பெரிய பில்டர்ஸ் சென்னையில் இருக்கிறார்கள். எல்லாரும் வீடு கட்டுவார்கள்; விற்பனை செய்வார்கள். அதன்பிறகு அந்தக் கட்டிடத்துக்கும் அவர்களுக்கும் உறவு இருக்காது. ‘ரமணீயம்’ நிறுவனம் கட்டுகிற வீடுகளில், நாங்கள் பராமரிப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம். நாங்கள் ஏற்கனவே கட்டியிருக்கும் வீடுகளின் மாதாந்திர பராமரிப்புகளைக் கவனிக்க மட்டும் 600 ஊழியர்கள் இருக்கிறார்கள். கட்டி முடித்த பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அந்தக் கட்டிடத்திற்கும் எங்களுக்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்.

கடந்த 25 ஆண்டுகளில் எந்தவிதமான விளம்பரமும் செய்தது இல்லை. வீடு வாங்கிய ஒருவர் இன்னொருவரைப் பரிந்துரை செய்வார். அவர் இன்னொருவருக்கு எங்களை அறிமுகம் செய்து வைப்பார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு வாங்கியவர்கள், எங்கள் கட்டிடத்தில் ஏதேனும் குறை இருப்பதாக இப்போது வந்து சொன்னாலும், முகம் வாடாமல் போய் சரி செய்து கொடுத்துவிட்டு வருவோம். சட்டப்படி அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. மனசாட்சிப்படி செய்து தர வேண்டும் என்பது என் தீர்மானம்.

ஒரு வீடு என்பது வெறும் செங்கல், சிமென்ட், மரம், வாசல், ஜன்னல் மட்டும் இல்லை. ஆயுள் முழுக்க சம்பாதித்த பணத்தைப் போட்டு வாங்கும் வீடுகளில், அங்கு வசிக்கப் போகிற குடும்பங்களின் சந்தோஷம், பாதுகாப்பு, நிம்மதி எல்லாமே அடங்கி இருக்கிறது. ‘ஒழுங்கா பண்ணுடா ஜெகன்’ என்று கடவுள் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 25 வருஷம் தாண்டிய பிறகும், முதல் புராஜெக்ட்டை எப்படி செய்தோமோ... அதே பயத்தோடும் பொறுப்போடும் செய்து கொண்டிருக்கிறோம்’’ என்கிற ஜெகநாதனைப் பார்த்து புன்னகை செய்கிறார் மனைவி கீதா. ஒரு பக்கம் மருந்தீஸ்வரரும் இன்னொரு பக்கம் அவருடைய தந்தையும் ஆசீர்வதிக்கிறார்கள். 
(திருப்பங்கள் தொடரும்...)