கனிவு, பொறுமை, அக்கறைக்கு அடையாளமான செவிலியர்களுக்கு இது சோதனைக்காலம் போல. நாளிதழ்களில் பக்கத்துக்குப் பக்கம் போராட்டச் செய்திகள். கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை, சென்னை அப்போலோ, ஃபோர்டிஸ் மலர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், விஜயா மருத்துவமனை என நர்ஸ்களின் போராட்டம் நீள்கிறது. இயங்க முடியாமல் ஸ்தம்பித்த சில மருத்துவமனைகள் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றிவிட, சில மருத்துவமனைகளில் மட்டும் பிரச்னை நீள்கிறது.
நர்ஸ்களுக்கு அப்படி என்னதான் பிரச்னை..?
‘‘தனியார் மருத்துவமனைகள்ல நோயாளிகளோட உறவினர்களைக் கூட உள்ளே விடமாட்டாங்க. டாக்டர்களை விட அதிக பொறுப்பு எங்களுக்குத்தான். மலம், சிறுநீர், வாந்தின்னு அவங்களோட தேவைகளை நிர்வகிச்சு, மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருந்து, மாத்திரைகள் கொடுத்து உறவுகளுக்கும் மேலா பராமரிக்கிறது நாங்கதான். நோயாளிகள் கூடவே பயணிக்கிற வாழ்க்கை. இதை யாரும் வேலையா நினைக்கிறதில்லை; சேவை! ஆனா எங்க வாழ்க்கையை முழுமையா தொலைச்சுட்டு எப்படி வேலை செய்ய முடியும்? மருத்துவமனைகள் எங்களைக் கொஞ்சம் கொஞ்சமா பிழியறாங்க. சிகிச்சைக்காக பல ஆயிரங்களைக் கட்டணமா வாங்கிட்டு, நேரங் காலம் பாக்காம வேலை செய்யற எங்களுக்கு சொற்ப சம்பளம் கொடுக்கறாங்க. இதை வச்சுக்கிட்டு எப்படி வாழ்க்கை நடத்தமுடியும். எங்களை பெத்து, வளர்த்து கஷ்டப்பட்டு படிக்க வச்சவங்களுக்கு என்ன கொடுக்க முடியும்?’’ - ஆவேசமாகப் பேசுகிறார் விஜயா மருத்துவமனை செவிலியர் பாதுகாப்பு சங்கத் தலைவர் பிரவீன்குமார்.
ஒரு காலத்தில் நர்சிங் படிப்பு மீது யாருக்கும் நாட்டம் இருந்ததில்லை. மருத்துவம் கார்ப்பரேட்மயமான பிறகு உலகெங்கும் நர்ஸ்களுக்கான தேவை அதிகரித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகளில் இந்திய நர்ஸ்களுக்கு கைநிறைய சம்பளத்தோடு வேலை கிடைத்தது. அதன்பிறகே நர்சிங் படிப்புகள் முக்கியத்துவம் பெற்றன. மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள் நர்சிங் படித்தனர். நர்ஸ் என்றாலே பெண்கள்தான் என்ற மரபைக் கட்டுடைத்து ஏராளமான ஆண்களும் இப்படிப்புகளில் சேர்ந்தார்கள். அரசு மருத்துவமனைகளில் நியமனங்கள் குறைந்துவிட்டாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் குறைவில்லை. தமிழகத்தில் முளைத்த கார்ப்பரேட் மருத்துவமனைகளும் இருகரம் கூப்பி வரவேற்றன. ஆனால் தங்களை கொத்தடிமைகளாக நடத்தி வஞ்சிப்பதாக கொந்தளிக்கிறார்கள் நர்ஸ்கள்.
‘‘டிப்ளமோவுக்கு ரூ.3 லட்சம், டிகிரிக்கு ரூ.5 லட்சம் செலவாகுது. நிறைய பேர் லோன் வாங்கித்தான் படிக்கிறோம். டிப்ளமோ முடிச்சவங்களுக்கு 7500 ரூபாயும், டிகிரி முடிச்சவங்களுக்கு 8,500 ரூபாயும் தொடக்க சம்பளமாக் கொடுக்கிறாங்க. பத்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாக்கூட 12 ஆயிரத்தைத் தாண்டுறதில்லை. ஆனா, ஒவ்வொரு பேஷன்ட்கிட்டயும் நர்ஸ் பீஸ்னு ஒரு தொகை வாங்குறாங்க. அதுக்கும் எங்க சம்பளத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
‘சரி, வேற வேலைக்குப் போகலாம்’னா அதுவும் முடியாது. வேலையில சேந்ததுமே எல்லா சான்றிதழ்களையும் வாங்கி வச்சுக்குவாங்க. ‘குறிப்பிட்ட காலம் இங்கே வேலை செய்யணும், இடையில வேலையை விட்டுப்போனா இவ்வளவு தொகை கொடுத்துட்டுத்தான் போகணும்’னு எழுதி வாங்கிடுவாங்க. எங்க வேலைக்கு நேரம், காலமெல்லாம் கிடையாது. ரெண்டு, மூணு மணி நேரம் கூட கூடுதலா ஆகும். வேலைக்கு வரும்போது கால் மணி நேரம் தாமதமானா சம்பளத்தைப் பிடிக்கிறவங்க, கூடுதலா வேலை செஞ்சா ஓவர்டைம் தர்றதில்லை.

நோயாளிக்கு ஊசி போடும்போது 1 மி.லி. அதிகமாப் போனாக்கூட ஆபத்து. ஐ.சி.யூவில ஒவ்வொரு நிமிஷமும் கோல்டன் மினிட்ஸ். தெளிவான மனநிலையோட வேலை செய்யணும். ஆனா, நர்ஸ்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தோடதான் வேலை செய்யறாங்க. பெரும்பாலான மருத்துவமனைகளோட நிலை இதுதான். கனவுகளோட இந்த வேலைக்கு வந்தவங்க, இந்த சம்பளத்தை வச்சுக்கிட்டு திருமணம் கூட செஞ்சுக்க முடியாம தவிக்கிறாங்க’’ என்று குமுறுகிறார் பிரவீன்குமார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துப் போராடி வரும் தமிழக மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ‘‘இந்தியாவில் நர்ஸ்களுக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. தற்போது 12 லட்சம் நர்ஸ்கள் இருக்கிறார்கள். ஆனால் 24 லட்சம் பேர் தேவை. ஒருபக்கம் பற்றாக்குறை இருக்கிறது; இன்னொரு பக்கம் வேலையின்மையும் இருக்கிறது. எமர்ஜென்ஸி வார்டுகளில் ஒரு நோயாளிக்கு 1 நர்ஸ் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான வார்டுகளில் மூணு படுக்கைக்கு 1 நர்ஸ், பொது வார்டுகளில் 5 படுக்கைக்கு 1 நர்ஸ். ஆனால் அரசு மருத்துவமனைகளில் 40 நோயாளிகளுக்கு 1 நர்ஸ்தான் இருக்கிறார். தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களையும் அரசு மருத்துவ மனையில் நியமிக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு, அரசாணை இருக்கிறது. ஆனால் நடவடிக்கை இல்லை. அதனால்தான் இவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியிருக்கிறது. அங்கு மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது நோயாளிகள்தான். இதேநிலை நீடித்தால் நர்சிங் படிக்க யாரும் வரமாட்டார்கள். மருத்துவமனைகள் இருக்கும். நர்ஸ்கள் இருக்கமாட்டார்கள். கேரளாவில் டாக்டர் பலராமன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, ‘நர்ஸ்களுக்கு தொடக்க சம்பளமே ரூ.12,900’ என்று நிர்ணயித்துள்ளது அரசு. அதைப்போல தமிழக அரசும் ஒரு கமிட்டியை அமைத்து, சம்பளம், பணி நேரம், பணிச்சூழலை நிர்ணயிக்க வேண்டும்’’ என்கிறார் ரவீந்திரநாத்.
கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை தனியாரிடம் கொடுத்து கை கழுவ முயற்சிக்கும் அரசாங்கம், நோயாளிகளுக்கு தாயும் தந்தையுமாக இருந்து பராமரிக்கும் தனியார் மருத்துவமனை செவிலியர்களின் மன உளைச்சலைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்