தடையறத் தாக்க சினிமா விமர்சனம்





வாழ்வின் மதிப்பை உணர்ந்து அதை விட்டுக் கொடுக்க விரும்பாத ஒரு இளைஞனின் போராட்டக் கதை. அதை ஆக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. வாடகைக் கார்களை சொந்தமாக வைத்து ஓட்டும் அருண்விஜய், காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைக்கும் இளைஞன் வேடத்தில் அற்புதமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்.

‘‘உங்க பெண்ணை நல்லா வச்சுக் காப்பாத்துவேன். என்னைப் பிடிச்சிருந்தா கட்டி வையுங்க. இல்லாட்டி உங்களுக்குப் பிடிச்ச யாருக்காவது கட்டி வைங்க. நானும் வேற பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிறேன்...’’ என்று மம்தாவைப் பெண் கேட்கும் இடத்திலும், கிளம்பும்போது மம்தாவிடம் ‘‘உங்கப்பா ராயப்பேட்டைக்குப் போகணும்னார். நானே கார்ல டிராப் பண்ணிடறேன். பாதி ரேட் கொடுத்தா போதும்...’’ என்று கேட்குமிடத்திலும் யதார்த்தத்தை பிரதிபலித்து ரசிக்க வைத்திருக்கிறார். ஆக்ரோஷத்தில் கூட அளவுக்கு மிகாமல் நடித்திருக்கும் அவருக்கு இது ‘பாண்டவர் பூமி’க்குப் பின் சொல்லிக்கொள்ளத்தக்க படமாக அமைந்திருக்கிறது.

‘‘உனக்கு வேணும்னா என்னை ரேப் பண்ணிக்க. என்னால அப்படியெல்லாம் பண்ண முடியாது. ஏன்னா நாங்க ஆசாரமான குடும்பம்...’’ என்று திருமணம் நிச்சயமான நிலையில் அருண்விஜய்யுடன் 'கி'  காந்திக்க நினைக்கும் மம்தாவுக்கும் தமிழில் இதுவரை கிடைக்காத அழகான பாத்திரம். அருணுடன் ஊடலான நிலையில் அவரிடமிருந்து போன் வராதா என்று ஏங்குவதிலும் பின்பு போன் வந்தும் எடுக்காத ஈகோவிலும் ரசிக்க வைக்கிறார். பாடல்களில் கின்டர்கார்டன் குழந்தைகள் அணியும் உடைகளில் வந்து கிறங்கடிக்கவும் செய்கிறார்.

மெயின் வில்லன் மகாவாக வருபவர் (பெயர் ‘காந்தி’யாம்) ஆரம்பக் காட்சியில் பயமுறுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்யாமல் கோமாவில் விழுகிறார். அவரது எடுப்புத் தம்பியாக வரும் வம்சியும், அவருக்கு அடுத்த நிலையில் வரும் அருள்தாஸும் அதிகமாக மிரட்டுகிறார்கள். அதிலும் அருணின் நண்பன் மனைவி ரம்யாவை மிரட்டும் கறிக்கடை காட்சியில் அருள்தாஸும், சுத்தியலாலேயே அருணின் நண்பனைக் கொல்லும் காட்சியில் வம்சியும் அதிகமாக பயமுறுத்துகிறார்கள்.

படம் முழுதும் ஏகப்பட்ட பில்டப்புகள் சொல்லப்படும் அழகுக்கு ராக்குல் ப்ரீத்சிங் பொருத்தமாகத்தான் இருக்கிறார். அவரது ஃபிளாஷ்பேக்கும் முடிவும் அந்தோ பரிதாபம். அதிகம் படிப்பறிவில்லாத நண்பர்கள் குரூப்பில் ‘‘ஸாரி’’க்கு ஸ்பெல்லிங் கேட்கும் அருண்விஜய்யிடம் முழித்து, பின் ‘‘ஸாரிடா...’’ என்கிற முருகதாஸும், ‘‘உண்மையைச் சொல்லலேன்னா எந்தப் பொம்பளைக்கும் பயன்படாம உன்னை ஆக்கிடுவேன்...’’ என்று மிரட்டும் ரவுடியிடம் ‘‘இது வரைக்கும்கூட அப்படித்தாங்க இருக்கேன்...’’ என்கிற லோகநாதனும் ரசிக்க வைக்கிறார்கள்.



இளமை ததும்பும் காதல் காட்சிகளிலும், அனல் பறக்க விடும் ஆக்ஷன் காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. வம்சியின் ஆசையைத் தணித்துவிட்டு குட்டி நடிகை உடை மாற்றும்போது டிவியில் பெண்ணின் பெருமையைச் சொல்லும் ‘குத்துவிளக்கு’ சீரியல் போய்க்கொண்டிருப்பது செம குறும்பு. ஒன்பது ரவுடிகளின் உடலை டிஸ்போஸ் செய்யும் அருண்விஜய், இந்தியா முழுக்க செய்தியில் அடிபட்ட ராக்குல் ப்ரீத்சிங்கின் உடலை என்ன செய்திருப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒளிப்பதிவில் அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறார் சுகுமார். எஸ்.தமனின் இசையில் ‘கேளாமலே...’ காதுகளில் இனிமையாகப் பாய்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசுவும், எடிட்டிங்கில் ப்ரவீன் எல்.ஸ்ரீகாந்தும் கவனிக்கத்தக்கவர்கள்.
- குங்குமம்
விமர்சனக்குழு