நிழகள் நடந்த பாதை





எங்கே செல்லும்
இந்த நட்பின் பாதை?
சமீபத்தில் பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபட்ட ஒரு செய்தியால் சற்றே மிரண்டு போனேன். ‘ஃபேஸ்புக் நட்பினால் கற்பை இழந்த பெண்கள்’ என்பதுதான் செய்தி. நான் ஃபேஸ்புக்கில் அதிகமாகப் புழங்குகிற ஆள் என்பதால் ஏதோ எல்லோரும் என்னை ஒரு ‘ரேப்பிஸ்ட்’ போல பார்க்கும் உணர்வு. பொதுவாக ஃபேஸ்புக் ‘சாட்’டில் பச்சை விளக்கு எரிந்தால் ‘ஹாய்’ சொல்லும் சகோதரிகள், அந்த செய்தி பரவிய நாட்களில் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கை உணர்ச்சியுடன் மௌனமாக இருப்பதுபோலத் தோன்றியது.

கடந்த இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த அருமையான நண்பர்கள் பலரும் ஃபேஸ்புக் மூலம் கிடைத்தவர்களே! அவர்கள் சட்டை தயாரிப்பவர்களாக இருந்தால் எனக்கு சட்டைகளும், நாட்டு மருந்து தயாரிப்பவர்களாக இருந்தால் மருந்துகளும், விவசாயிகளாக இருந்தால் மாங்காய், தேங்காய்களும் அனுப்பி வருகிறார்கள். இவ்வளவு உபயோகமான சமூக இணையத்தளங்களை ஏதோ சமூக செக்ஸ் குற்றங்களுக்கான ஒரு இடம்போல சித்தரிப்பது உண்மையிலேயே வருத்தமாக இருந்தது.

அந்த செய்தியின்படி, சில பெண்கள் சில ஆண்களுடன் ஃபேஸ்புக் வழியாக அறிமுகமாகிறார்கள். அவர்களுக்குள் அந்த உறவு வளர்ந்து வளர்ந்து... பாலியல் உறவிலும், பிறகு நம்பிக்கை மோசடியிலும் முடிகிறது. அந்தப் பெண்கள் ஃபேஸ்புக்கில் இல்லாவிட்டால்கூட இந்த சமூகத்தில் இதெல்லாம் அவர்களுக்கு வேறு விதங்களில் நடக்கவே நடக்காதா? கல்வி நிலையங்கள், பணியிடங்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தினமும் பயணம் செய்யும் பஸ், ரயிலில் அறிமுகமாகிறவர்கள் என எத்தனையோ வழிகளில் ஒவ்வொரு நாளும் நாம் அன்னியர்களோடு புதுப் புது உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவை முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளும் உறவுகள். அவற்றில் சில எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை மோசடியில் முடியலாம்; அல்லது வாழ்வின் மிக முக்கியமான உறவாகவும் அது மாறலாம்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே உருவாகும் உறவுகளும் அப்படித்தான். ஃபேஸ்புக் வழியே வரும் நபர்கள் பற்றி நாம் எதையும் அறிய முடிவதில்லை என்பதால் ஆபத்துகள் அதிகம் என்கிறார்கள். நாம் நேரடியாகப் பழகும் மனிதர்களைப் பற்றிக்கூட எதையுமே அறிய முடியாது என்பதைத்தான் நமது வாழ்க்கை அனுபவங்கள் திரும்பத் திரும்ப கற்றுத் தருகின்றன. குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் எந்த இடத்திலும், எந்த ரூபத்திலும், எந்த வழியாகவும் நமது வாழ்க்கையில் நுழையக்கூடும். ‘நீங்கள் சமூக இணையத்தளங்களைப் பயன் படுத்துவது ஆபத்தானது’ என்று சொல்வது வேடிக்கை. யாரோ மூலிகை பயிரிடுகிற ஆள், ‘ஒரு லட்சம் கொடு... இரண்டு லட்சம் தருகிறேன்’ என்று சொன்னால் யோசிக்காமல் வீட்டில் இருப்பதையெல்லாம் கொடுக்கிற ஆட்கள் நாம்.

சமூக வலைத்தளங்கள் கடந்த பத்தாண்டுகளில் சமூக உறவுகளில் நடந்த மிகப்பெரிய புரட்சி. மனிதர்கள் உரையாடுவதற்கும் உறவாடுவதற்கும் இருந்த எண்ணற்ற சமூக, கலாசாரத் தடைகளை அவை உடைத்தெறிந்து விட்டன. நவீன யுகம் மனிதர்கள்மேல் சுமத்திய கடும் தனிமையுணர்ச்சியின் மேல் அது பெரும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. எனது அலுவலகத்தில் எனது பக்கத்து இருக்கையில் வேலை செய்துகொண்டிருப்பவனிடம் பேசுவதற்கு என்னிடம் எதுவுமே இருப்பதில்லை. ஆனால் எங்கோ இருக்கும் முகம் தெரியாத யாரோ ஒருவரிடம் எனது அந்தரங்க உணர்ச்சிகளை மானசீகமாகப் பகிர்ந்துகொள்ளும் மிகப் பெரிய சுதந்திரத்தை இந்த சமூக வலைத்தளங்கள் தருகின்றன.

என் வாழ்க்கையில் என்றோ காணாமல் போனவர்களை நான் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் தேடுகிறேன். அவர்களை எப்படியாவது ஒருநாள் அதன் வழியே கண்டு பிடித்து விடுவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி தங்கள் வாழ்க்கையிலிருந்து காணாமல் போனவர்களை எனது பல நண்பர்கள் கண்டு பிடித்து பேருவகை கொண்டிருக்கிறார்கள். சிலரை ‘ஏண்டா கண்டுபிடித்தோம்’ என்று வருந்தவும் செய்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஒரு மிகப்பெரிய வினோதம், ஒரு சராசரி மனிதனுக்கு அவனது சமூக வாழ்க்கையில் ஒருபோதும் சாத்தியப்படாத அளவு அதிக எண்ணிக்கையிலான மனிதர்களுடன் பல்வேறு வகையிலான பரிச்சயத்தையும் உறவுகளையும் இதன் வழியே ஏற்படுத்திக்கொள்ள முடிவது! அது இன்றைய இயந்திர மயமான, நெருக்கடியான வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசுவாசம்.

சமூக வலைத்தளங்களைப் பற்றிய போலியான பீதிகளை நாம் பரப்ப வேண்டியதில்லை. அது தரும் சுதந்திரம் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. தீயவர்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல, நமது இதயத்தின் வெகு அருகாமையில்கூட இருந்துகொண்டுதான் இருப்பார்கள். எச்சரிக்கையும் புத்திக் கூர்மையும் கொஞ்சம் நல்லதிர்ஷ்டமும் இருந்தால் எல்லா இடங்களிலிருந்தும் நாம் மீண்டு வந்துவிடுவோம்.

பவர் ஸ்டார்  என்ன பாவம் செய்தார்?
‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை ஏன் எல்லா தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் கேலி செய்கிறார்கள், எல்லா பத்திரிகைகளும் கிண்டல் செய்கின்றன என்று எனக்குப் புரியவே இல்லை. கொஞ்ச நாளைக்கு முன்னால் ‘தமிழ்ப் படம்’ என்று ஒரு சினிமா வந்தது. நமது தமிழ் சினிமா இயக்குனர்கள் அத்தனை பேரின் டிரவுசரையும் கழற்றினார்கள். கிட்டத்தட்ட அதே வேலையைத்தான் சீனிவாசனும் செய்கிறார்.

நமது பெரிய ஹீரோக்கள் செய்யாத அபத்தங்கள் எதையும் சீனிவாசன் செய்துவிடவில்லை. அவர்கள் இவ்வளவு காலமாக உளறியதைவிட அதிகமாக ஒன்றும் அவர் உளறிவிடவில்லை. ஆனால் ஒருவரை நாம் ஹீரோவாகவும், அதே வேலையைச் செய்யும் இன்னொருவரை காமெடியனாகவும் பார்க்கிறோம். இது அநீதி.

இன்றைக்குத் தமிழ்நாட்டை ஆள விரும்பும் ஒவ்வொரு நடிகரும் தங்களைப் பற்றி என்னென்ன மூட நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்களோ, அதையேதான் பவர் ஸ்டாரும் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர்மேல் பண மோசடி குற்றச்சாட்டுகூட வந்துவிட்டது. நீங்க கரெக்டாதான் போயிட்டிருக்கீங்க பாஸ்...

சாதியின் சாபக் குரல்கள் : சமீபத்தில் ஒரு சாதிச் சங்கத்தின் ஒரு பிரிவு, கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு எதிராக மாநாடு ஒன்றை நடத்தியது. ஒரு சாதிய அரசியல் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் ‘‘எங்க சாதிப் பெண்களுக்கு கலப்புத் திருமணம் செய்தால் அவர்கள் கையை வெட்டுவேன்’’ என்று பேசினார். இதுபற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த நான், ‘‘இந்தக் கருத்திற்காக அவரைக் கைது செய்ய வேண்டும்’’ என்று கூறினேன். இதுகுறித்து என்னிடம் மிகவும் கோபமாகப் பேசிய இளைஞர் ஒருவர், ‘‘எங்க பொண்ணுங்களை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்தி சீரழிச்சுட்டு போயிடறானுங்க... இதை நாங்க பார்த்துக்கிட்டு இருக்கணுமா?’’ என்று கேட்டார். நான் அவரை சமாதானப் படுத்தினேன். அவருக்கு இதை விளக்க முயற்சித்தேன். அவர் உண்மையில் கடும் கோபத்துடன் தகித்துக்கொண்டிருந்தார்.

இந்தியாவிலேயே சாதியக் கொடுமைகளுக்கு எதிராக கலப்புத் திருமணங்களை ஒரு சமூக இயக்கமாக நடத்திய மாநிலம் தமிழ்நாடு. சமூக இழிவுகளுக்கு மாற்றாக கலப்புத் திருமணங்களை பெரியார் உரத்த குரலில் முன்மொழிந் தார். ஆனால் சாதிய வெறியின் மூர்க்கம் நமது சமூகத்தில் கொஞ்சம்கூட அடங்கவில்லை என்பதைத்தான், இதுபோன்ற கலப்புத் திருமணத்திற்கு எதிரான வெளிப்படையான கருத்துகள் காட்டுகின்றன. சமூக விடுதலைக்காக சாதிய அரசியலை நாம் ஏற்றபோதும், அவை இன்று பிற்போக்கான பண்பாட்டு மதிப்பீடுகளைத் தூக்கிப் பிடிக்கும் அபாயத்தை நோக்கிச் செல்கின்றன.

சாதிய வெறியினால் ஏராளமான இளைஞர்களின், பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் சூறையாடப்பட்டு வருகிறது. கலப்புத் திருமணத்திற்கு எதிரான குரல்கள் வெளிப்படையாக வைக்கப்படுவது, இன்னும் கொடூரமான குற்றங்களை அவர்கள்மேல் இழைக்கவே வழிகோலும். சரி, அந்த இளைஞர் என்னிடம் கேட்ட கேள்வியில் எந்த நியாயமும் இல்லையா? பொதுவாக நமது சமூகத்தில் பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணங்களில் நிகழ்வதுபோலவே, காதல் திரு மணங்கள், கலப்புத் திருமணங்களிலும் சில மோசடிகளும் குற்றங்களும் நடக்கின்றன. அப்படி நடக்கும்போது, ‘‘எங்க சமூகத்துப் பெண்களைத் திட்டம் போட்டுக் கெடுக்கிறார்கள்’’ என்று அதைப் பொதுமைப்படுத்துவது சாதிய வெறிக்கு நியாயம் தேடுகிற முயற்சி. சாதிக்கு வெளியே இருந்து வந்து பெண்களைக் கெடுத்தவர்களைவிட, சொந்த சாதிக்குள்ளேயே கெடுப்பவர்களின் எண்ணிக்கையே எல்லா சாதி மதங்களுக்குள்ளும் மிக மிக அதிகம்.
(இன்னும் நடக்கலாம்...)