புரிந்து படிங்க... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஜெயிங்க!





பத்தாயிரம் சொச்சம் அரசு வேலைக்காக பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் களத்தில் நிற்கும் குரூப் 4 தேர்வு... அதன் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்... பாடத்திட்டம்... இதையெல்லாம் கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் குரூப் 4 தேர்வுக்கு மேலும் வழிகாட்டுகிறார் சென்னையில் இயங்கும் ‘மாதவன் ஐஏஎஸ் அகாடமி’யின் பயிற்சியாளர் மாதவ ஜனார்த்தனன்.

‘‘குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் கிட்டத்தட்ட நமது பத்தாம் வகுப்பு பாடத்திட்டம் என்பது சரிதான். ஆனால், பத்தாம் வகுப்பு பாடத்தை மட்டும் படித்தால் போதுமா என்றால், ‘நிச்சயம் போதாது’. காரணம், இந்தத் தேர்வில் பாடங்களை நாம் புரிந்து படித்தாக வேண்டும் என்ற கட்டாயம்.

உதாரணத்துக்கு, சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 490 எடுத்த மாணவர்கள், அதே பாடம்தானே என்று இந்தத் தேர்வுக்குத் தனியாக எதுவும் படிக்காமல் எழுதினால், ஏமாற்றம்தான் மிஞ்சும். இங்கே கேட்கப்படும் கேள்விகள் வேறு மாதிரியானவை. பாடத்தைப் புரிந்து, அதன் அடிப்படை தெரிந்து படித்தவர்கள் மட்டுமே இவற்றுக்கு விடையளிக்க முடியும். எனவே, ஆறாம் வகுப்பு முதல் உள்ள புத்தகங்களை நன்றாகப் புரட்டிப் பார்த்துவிட்டு பத்தாம் வகுப்புப் பாடத்துக்கு வருவது நல்லது. அப்போதுதான் பத்தாம் வகுப்புப் பாடத்தில் உள்ள விஷயங்களின் அடிப்படை நமக்குப் புரியவரும்.

‘பத்தாம் வகுப்புப் பாடம் என்கிறீர்களே... அப்படியென்றால் நாங்கள் படிக்க வேண்டியது சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களையா அல்லது பழைய பாடப் புத்தகங்களையா?’ என்று சிலர் கேட்கிறார்கள். அறிவியல் உண்மைகளும் கணிதக் கோட்பாடுகளும் என்றும் மாறாதவை. அவை எல்லா பாடத்திட்டத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இடம்பெறும். ஆகவே, எந்த வகையான பாடப் புத்தகங்களைப் படிப்பது என்ற கேள்வி தேவையில்லாதது. எதைப் படித்தாலும் புரிந்து ஆழமாகப் படிப்பதே துணைசெய்யும்.

இந்த தேர்வில் எல்லா கேள்விகளுமே இரண்டு வகைகளில்தான் கேட்கப்படும். ஒன்று ஃபேக்ட்ஸ் அண்ட் ஃபிகர் என்பார்கள். அதாவது, வரலாற்றில் பதிவான உண்மைகள், தேதிகள், எண்ணிக்கைகள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இவை உங்கள் நினைவுத் திறனை சோதிக்கும். உதாரணமாக பொது அறிவுத் தேர்வில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று எழுதி முடிக்கப்பட்டது’ எனக் கேட்கலாம். ‘1949 நவம்பர் 26’ என்பதே சரியானது. அதே போல், ‘இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது’ என்றும் கேட்கப்படலாம். ‘1950 ஜனவரி 26’ என்பதே சரியானதாகும். இப்படி நிரூபணமான உண்மைகள் தொடர்பான கேள்விகளே வெவ்வேறு வகையில் கேட்கப்படும்.

இந்தக் கேள்விகளையெல்லாம் தரம் பிரித்துப் படித்தால் நினைவில் நிற்கும். உதாரணமாக, நாட்கள் தொடர்பான கேள்விகளை ஒரு பக்கமாகவும், நபர்கள் தொடர்பான கேள்விகளை ஒரு பக்கமாகவும், வருடங்கள் தொடர்பான கேள்விகளை ஒரு பக்கமாகவும் பிரித்துப் படிக்கலாம். அதே போல், ஒரு பக்கத்தை எவ்வளவு நேரத்தில் படிக்கிறோம் என்பதையும் ஒரு பேப்பரில் குறித்து வைத்துக்கொண்டு படிப்பது நல்லது. அதிக நேரமாகும் பாடங்களில் பின்னர் மீண்டும் ரிவைஸ் செய்வதற்கு இந்த நேரக் குறிப்பு உதவும்.

இரண்டாவதாக கான்செப்ட் வகைகளில் கேள்விகள் இருக்கும். இவை உங்கள் மூளைக்கு வேலை வைக்கும் கேள்விகள். அதே நேரத்தில் உங்களை பல வேளைகளில் இடற வைக்கும் கேள்விகளும் இவைதான். உதாரணமாக, ஹைட்ரோ குளோரைடு என்பது ஒரு அமிலம். சோடியம் ஹைட்ராக்சைடு என்பது ஒரு காரம். இது இரண்டையும் சேர்த்தால் வருவது நீரும், நாம் உண்ணும் உப்பும்தான். இதை அடிப்படையாகக் கொண்டு பல வழிகளில் கேள்விகள் அமையலாம். இதற்கு வேதிப் பொருட்களில் எவையெல்லாம் அமில வகையைச் சார்ந்தது, எவையெல்லாம் கார வகையைச் சார்ந்தது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


உங்கள் திறனாய்வை சோதிக்கும் இந்தக் கேள்விகள் பெரும்பாலும் கணிதம், அறிவியலைத்தான் சார்ந்திருக்கும். அறிவியலில் ஒரு பிரிவான புவியியல் தொடர்பான ஒரு கேள்வியை பார்க்கலாம். சென்னையும் பெங்களூருவும் நிலவியல் அடிப் படையில் ஒரே நேர்க்கோட்டில்தான் இருக்கின்றன. ஆனால், சென்னையைப் போன்ற வெயில் பெங்களூரில் இல்லை. இது ஏன் என்று கேட்கப்படலாம். பெங்களூரு சென்னைக்கு நேரே இருந்தாலும், சென்னையை விட கடல் மட்டத்திலிருந்து உயரமான பிரதேசத்தில் இருக்கிறது என்பதே புவியியல் உண்மை. மேலும் சென்னை கடலுக்கு அருகே உள்ளதால் வெப்பத்தால் ஆவியாகும் கடல் நீர் வெப்பக் காற்றாக இங்கு வீசும். ஆனால், கடலில் இருந்து வெகுதூரத்தில் இருக்கும் பெங்களூருவுக்கு இந்த வெப்பக் காற்றால் தாக்கம் இருக்காது. ஆகவே அறிவியலையும் பொது அறிவோடு தொடர்புபடுத்தி படிப்பது இந்தத் தேர்வுக்கு துணை செய்யும்.

இந்தத் தேர்வின் இரண்டாம் தாளுக்கான விருப்பத் தேர்வில் சிலர் பொதுத் தமிழ் எடுக்க பயப்படுகிறார்கள். தமிழில் படித்தவர்களே கூட சிலர் பொதுத் தமிழில் கேட்கப்படும் தமிழ் இலக்கணம் தொடர்பான கேள்விகளுக்கு பயந்து, சாய்ஸில் ஒன்றான பொது ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆங்கில இலக்கணத்தின் அடிப்படை தெரியாமல் கோட்டை விட வாய்ப்பிருக்கிறது. எனவே, தமிழில் படித்தவர்கள் பொதுத் தமிழை தேர்ந்தெடுத்து, கொஞ்சம் உழைத்தாலே சுலபமாகத் தேறிவிடலாம்.

படிக்கும்போது பொழுதுபோக்கில் இறங்குவது படிப்பை கெடுத்துவிடும்தான். ஆனால், பொது அறிவுத் தாளில் பாடத்திட்டத்தைத் தாண்டி இன்றைய நாட்டு நிலைமை பற்றிய கேள்விகளும் வரும். எனவே, டி.வியில் செய்திகள் பார்ப்பதும் செய்தித்தாள் படிப்பதும் இதற்கு அவசியமானது!’’ என்கிறார் மாதவ ஜனார்த்தனன். இந்த வழிகாட்டுதல்களோடு நீங்கள் குரூப் 4 தேர்வை வெல்ல வாழ்த்துக்கள்!
- டி.ரஞ்சித்