வரலாறு விற்பனைக்கு...





சிந்து சமவெளி நாகரிகத்தை இந்தியாவின் பெருமைக்குரிய தொன்மை அடையாளமாகப் பேசி வருகிறோம். பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிறோம். மொகஞ்சதாரோ, ஹரப்பா என அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக நகரங்கள் இரண்டுமே இப்போது பாகிஸ்தானில் இருக்கின்றன. இந்த இரண்டையும் விட பிரமாண்டமான சிந்து சமவெளி நாகரிக நகரமாகக் கருதப் படுவது ராக்கிகாரி. இது இந்தியாவில்தான் இருக்கிறது. இரண்டு தொன்மை தலங்களை பிரிவினையால் பாகிஸ்தானுக்கு இழந்துவிட்டபிறகும், ராக்கிகாரியை நம் அரசு வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் யாருக்கும் ரத்தக் கண்ணீர் வந்துவிடும்.

டெல்லியிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில், ஹரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டத்தில் இருக்கிறது ராக்கிகாரி. வேத காலத்து நதியாகக் கருதப்படும் சரஸ்வதி நதியின் வறண்ட கரையில் இருக்கும் ஒரு குக்கிராமம். இந்த கிராமத்தை ஒட்டிய மண்மேடுகளுக்கு அடியில் சரித்திரம் புதைந்து கிடப்பது கடந்த 97ம் ஆண்டு தெரிந்தது. இந்திய தொல்லியல் துறை இயக்குனர் அமரேந்திரநாத் தலைமையில் 3 ஆண்டுகள் இங்கே அகழ்வாராய்ச்சி நடந்தது. இந்த ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் வரலாற்றையே புரட்டிப் போட்டன.

கிட்டத்தட்ட 130 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருந்த சிந்து சமவெளி நாகரிக நகரமான இதுதான், இதுவரை கண்டறியப்பட்ட சிந்து சமவெளி நாகரிக நகரங்களில் பெரியது. இது அந்த மக்களின் நாகரிக வரலாற்றையே சற்று பின்னுக்குத் தள்ளியது. அதாவது, ‘இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அவர்கள் திட்டமிட்ட நகரங்களை உருவாக்கி வாழ்ந்தார்கள்’ என கருதி வந்தோம். ஆனால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் மிகுந்த திட்டமிடலோடு உருவாக்கிய நகரம் இங்கு புதைந்திருந்தது. அதற்குமுன்னும் 500 ஆண்டுகள் இங்கே நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் கிடைத்தன.

நேரான வீதிகளோடு, அழகான வீடுகளை அவர்கள் கட்டினார்கள். சுட்ட செங்கல்லைப் பயன்படுத்தினார்கள். ஒரு முனை அகலமாகவும், ஒரு முனை குறுகலாகவும் ‘ஆப்பு’ போல செங்கற்களை உருவாக்கிப் பயன்படுத்தவும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தானியக் களஞ்சியங்களைக் கட்டி, அதில் உணவுக்கும் விவசாயத்துக்கும் தானியங்கள் சேமித்தார்கள். மண்ணை வனைந்து, சுட்டு பானைகள் செய்தார்கள். சித்திரம் வரைந்தார்கள். அவர்களுக்கு தங்கள் மொழியை எழுதவும் தெரிந்திருந்தது. மணிகளைக் கோர்த்து மாலை அணிந்தார்கள். வளையலும் செய்து கைகளில் மாட்டிக் கொண்டார்கள். தங்கத்தின் அருமை தெரிந்திருந்தது. மரத்தில் தச்சு வேலை செய்யவும் தெரிந்திருந்தது.


குழந்தைகளுக்கு சுடுமண் பொம்மைகள் செய்து கொடுத்தார்கள். அந்த பொம்மைகளில் பம்பரம், கிலுகிலுப்பை, விசில் ஆகியவையும் உண்டு. குழந்தைகள் சில்லு போட்டு பாண்டி விளையாடி இருக்கிறார்கள். தூண்டில் போட்டு மீன் பிடித்திருக்கிறார்கள். கண்ணாடியில் முகம் பார்த்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்குமான ஆதாரங்கள் இந்த மண்மேடுகளுக்கு அடியில் கிடைத்தன. இறந்தவர்களை புதைத்த இடங்களும் இங்கு இருந்தன. மூன்று ஆண்டுகள் இங்கே அகழ்வாராய்ச்சி செய்த இந்திய தொல்லியல் துறை, இங்கிருந்து சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டது. கைவளையல்களோடு அடக்கம் செய்யப்பட்ட அந்தக்காலத்து நடுத்தர வயதுப்பெண்ணின் எலும்புக்கூடு டெல்லி மியூசியத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சுடுமண் ஓடுகள் ஆராய்ச்சிக்காக புனே போனது.

இங்கு 130 ஹெக்டேர் பரப்பில் சிறிதளவு இடத்தில் மட்டுமே ஆராய்ச்சி நடந்தது. ‘‘முழுதுமாக அகழ்வாராய்ச்சி செய்தால் பெரும் வரலாற்றுப் பொக்கிஷங்கள் இங்கே கிடைக்கும்’’ என பெருமிதத்தோடு சொன்ன அதிகாரிகள், தோண்டிய மண்மேடுகளையும் அப்படியே மூடி வைத்துவிட்டுப் போனார்கள். சுற்றிலும் ஒரு இரும்பு வேலி, வயசான ஒரு வாட்ச்மேன்... இவ்வளவுதான் பாதுகாப்பு! 13 ஆண்டுகளாக இப்படி இருக்கும் ராக்கிகாரி சமீபத்தில் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறது. காரணம், ‘ஆசியாவில் மிகவும் அபாயத்தில் இருக்கும் 10 பாரம்பரிய தலங்கள்’ என்று ‘குளோபல் ஹெரிடேஜ் ஃபண்ட்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் பட்டியலில் இதுவும் இடம் பிடித்திருக்கிறது.

ராக்கிகாரி கிராம மக்களுக்கு இதன் அருமை தெரியவில்லை. தங்கள் வயல்களுக்குப் போகும் வழியை அரசு அடைத்து வேலி போட்டுவிட்டதாகக் கோபப்படும் அவர்கள், அந்த வேலையை ஆங்காங்கே உடைத்து பாதை அமைத்திருக்கிறார்கள். வறட்டி தட்டி காயப் போடுகிறார்கள். சிலர் வீடுகளும் கட்டியிருக்கிறார்கள். பஞ்சாயத்து சார்பில் சுடுகாட்டு மண்டபமும் கட்டப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சிறுவர்களும் ஆண்களுமாக இந்த வளாகத்தில் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கையில் கிடைக்கும் மணிகள், பொம்மைகள், சுடுமண் ஓடுகள் என எல்லாம் சேகரிக்கிறார்கள். மழை நாட்களில் சிலர் பள்ளம் தோண்டியே எடுக்கிறார்களாம். இந்த இடத்தின் அருமை கேள்விப்பட்டு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இவற்றை விற்கிறார்கள். வெறும் பானை ஓடு என்றால் 50 ரூபாய்; கொஞ்சம் உருவங்கள் செதுக்கியிருந்தால் 100 ரூபாய், சுடுமண் பொம்மைகள் என்றால் 200 ரூபாய் என அறிவிக்கப்படாத விலைப் பட்டியலே இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தபோது நம் வரலாற்று அடையாளங்கள் ஏராளத்தை இழந்தோம். இதனால் இன்று இந்திய வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு லண்டன் போகவேண்டிய அவலம் இருக்கிறது. மிச்ச சொச்சங்கள் இப்போதும் விற்பனையாகின்றன!
- அகஸ்டஸ்