சங்கிலியில் தொங்கும் தண்ணீர்க்குவளைகள்





கானல் நீரின் வெக்கையில்
தள்ளுவண்டியுடன் நின்றபடி
நறுக்கி வைத்த கீற்றுகளால்
தாகம் தணிக்கிறான்
தர்ப்பூசணி விற்பவன்

வாழ்க்கை தன்னைப் பிழிவது போல்
எந்திரத்தின் இடைவெளியில்
கரும்பைப் பிழிந்து
சாறெடுத்து நீட்டுகிறான்
கரும்புச்சாறு வியாபாரி

ஆயுதமும் அகிம்சைக்கே என
போதிப்பது போல்
பளபளக்கும் அரிவாளோடு
காத்திருக்கிறான்
ஓலையில் குடிசைகட்டி
இளநீர் விற்பவன்
கறிவேப்பிலையும்,
பச்சை மிளகாயும் மணக்க
நீர் மோர் தருகிறார்கள்
சாலையோரங்களில்
வாழ விதிக்கப்பட்ட
மூதாட்டிகள்

பேருந்துக்குள் ஏறி
தண்ணீர் பாக்கெட்டுகள்
விற்கிறான் ஒரு சிறுவன்
வியர்வையில் நனைந்தபடி

பனைநுங்கை வெட்டியாவது
தாகம் தீர்த்துக் கொள்கிறார்கள்
பலரும்...

பெரியாறு, பாம்பாறு
பாலாறு, காவிரியென
தமிழனின் நதிகள் மட்டும்
கிடக்கின்றன தாகத்துடன்...
- ஆதலையூர் சூரியகுமார்