விஜயா டீச்சர்





விஜயாவின் வீடு கல்யாணக் களை கட்டியிருந்தது. கோயிலில் வைத்துத் திருமணம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு இருந்ததால், விருந்து மற்றும் இதர சம்பிரதாயங்கள் செய்வதற்காக மண்டபத்தை அமர்த்தும் வேலையைக் கச்சிதமாகச் செய்திருந்தார் ரத்னவேலு.

‘‘மாமா... கல்யாணத்தைத்தான் கோயில்ல நடத்தலாம்னு சொல்லிட்டீங்க! ஆனா, மத்த விஷயங்கள் மண்டபத்தில் தூள் பறக்கும். அதுக்கு நீங்க தடை போட்டுறக் கூடாது. சூப்பரான கச்சேரி கொண்டு வரலாம்னு இருக்கேன்... என்ன சொல்றீங்க..?’’ என்றான் வடிவேலு.

கையில் ஒரு கட்டு பத்திரிகைகளுடன் வந்திருந்தவனுக்கு சீதாவே காபி கொண்டு வந்து கொடுத்தாள். பிறகு மெதுவான குரலில், ‘‘என்னத்துக்கு கச்சேரி, அது இதுன்னு ஆர்ப்பாட்டமெல்லாம்? பேசாம நல்லதா ஒரு நாதஸ்வர பார்ட்டியைப் பிடிங்க... போதும்! பாட்டுக் கச்சேரியில் போடுற காசை பைனான்ஸில் போட்டாலாவது பிரயோஜனமா இருக்கும்...’’ என்று கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டு கிடுகிடுவென்று நடந்த சீதாவை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.


‘‘தம்பி... அடுத்த வருஷம் நீ அம்பானிக்கே பைனான்ஸ் கொடுக்கலாம் போல இருக்கேப்பா! இப்பவே அதிகாரம் கொடி கட்டிப் பறக்குதே...’’ என்றார் ரத்னவேலு. ‘‘இனிமே எல்லா காசும் சீதா காசுதானே! அது சொன்னாத்தான் இனிமே பைனான்ஸ்... அப்படியே செய்து போடுவோம். ஆனா, ஹனிமூனுக்கு ஊட்டி காட்டேஜ் புக் பண்ணியிருக்கேன்... சகலைக்கும் சேர்த்துதான்! அதுமட்டும் என் ஆசைப்படி...’’ என்றான் சீதாவிடம் கண்ணைச் சிமிட்டியபடி. சிரித்துக் கொண்டே தலையாட்டினாள் சீதா.

சீதாவை இப்படி மாற்றிப் போட்டிருந்த சூழல், ராதாவை அப்படியே திருப்பிப் போட்டிருந்தது. ‘‘என்னடி... முடியை வெட்டிக்கப் போகலையா? எல்லாம் இப்பவே பண்ணினாத்தானே பொண்ணு அலங்காரத்துல பளிச்னு தெரிவே... முதல் நாள் போய் பண்ணினா உரிச்ச கோழி மாதிரி இருக்கப் போறே’’ என்ற மங்கை அக்காவிடம், ‘‘அதெல்லாம் இருக்கற அழகு போதும்...’’ என்று நொடித்துக் கொண்டு போனாள் ராதா.


இந்த கலகலப்புக்கு நடுவே ஒட்டவும் முடியாமல், வெட்டிக்கொண்டு ஒதுங்கவும் முடியாமல் நடமாடிக் கொண்டிருந்தாள் விஜயா. பொழுது விடிந்து வெகு நேரமாகியும், குளிக்கக்கூட போகாமல் உட்கார்ந்திருந்தாள் விஜயா.

‘‘என்னம்மா விஜயா... இன்னிக்கு பள்ளிக்கூடம் லீவா..?’’ என்று பரிவோடு தோளைத் தொட்ட அம்மாவிடம், ‘‘இல்லம்மா... நான்தான் கல்யாணம் வரைக்கும் லீவு போட்டுடலாம்னு பார்க்கறேன்... இந்தப் பிள்ளைங்க இன்னும் ஒரு வாரம்தான் நம்ம வீட்டுப் பிள்ளைங்க. அதுக்குப் பிறகு ‘வாங்கடி’ன்னு கூப்பிட்டாக்கூட, ‘என் வீட்டுக்காரருக்கு ஓட்டல் சாப்பாடு சரியா வராது... எங்க மாமியாருக்கு நான் வச்சுக் குடுக்கற வெந்நீர்தான் ருசியா இருக்கும்’னு ஏதாவது காரணம் சொல்வாங்களே தவிர, நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்க. அதான் அவங்களோட பொழுது போக்கலாம்னு பார்க்கறேன்...’’ என்றாள் விஜயா.

அந்தப் பக்கம் திரும்பிக் கொண்ட அம்மாவின் கண்களில் நீர் கசிவதை விஜயாவால் உணர முடிந்தது. ‘‘லீவு போட்டுட்டியா? கடலே இல்லாத காரைக்குடிக்கு சுனாமி வரப் போகுது... சரி, இன்னிக்கு எனக்கு எண்ணெய் தேச்சு விடுறியா..?’’ என்றாள் ராதா.

‘‘நீ முதல்ல பல் விளக்கி சாப்பிடு... அப்புறம் எண்ணெய்த் தலையோட பசிக்குது பசிக்குதுன்னு அலைவே...’’ என்று அவளை அனுப்ப, ‘‘என் தலையைக் கொஞ்சம் பார்க்கறீயா..?’’ என்றபடி சீதா வந்தாள். விஜயாவால் மறுக்க முடியவில்லை. ‘‘அத்தே... எனக்கு தலை பின்னி விடுங்க. நாளைக்கு பரீட்சைக்கு இன்னிக்கு டியூஷன் போகணும்!’’ என்றபடி வந்த கவிதாவை, ‘‘நீ போய் உங்கம்மாகிட்ட பின்னிக்கோ...’’ என்று துரத்திவிட்டாள் சீதா.


அவளைப் பிடித்து நிறுத்தி மளமளவென்று தலையைப் பின்னிவிட்ட விஜயா, ‘‘நாளைக்கு என்ன சமூக அறிவியலா..?’’ என்றாள். ‘‘ஆமா... அதோட எக்ஸாம் ஓவர். ஜாலி...’’ என்றபடி கவிதா ஓட, அறைக்குள் படுத்திருந்த ஆனந்த் விலுக்கென்று எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குள் நளினி சொன்ன வார்த்தைகள் ஓடி மறைந்தன. மெதுவாக எழுந்து வெளியில் வந்தான்.

‘‘டேய்... எப்ப பாரு உள்ளேயே கிடக்கறே? நீ அப்படி சுத்தியிருக்க வும் வேண்டாம்... இப்படி அடை காக்கவும் வேண்டாம்! ஜாலியா சைக்கிளை எடுத்துக்கிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வா...’’ என்றாள் சீதா.

சீதாவை இழுத்துப் பிடித்து படியில் உட்கார வைத்த விஜயா, தலையைக் கோதிவிட்டபடி ‘‘உனக்கு என்கிட்டே என்ன கேட்கணும்?’’ என்றாள்.
‘‘என்ன சொல்றே நீ..?’’ என்றாள் சீதா.


‘‘ஆமா... என்கிட்டே வரவிடாம எல்லாரையும் துரத்தி அடிக்கிறியே... அதான் கேட்டேன், என்ன கேட்கணும்?’’ என்று விஜயா கேட்க, சீதாவின் முகம் சீரியஸானது.

‘‘ஏன் எங்க கல்யாண விஷயத்தில் பொய் கேம் ஆடினே..?’’ என்றாள் விஜயாவின் முகத்தை நேராகப் பார்த்து. விஜயா சீதாவின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பினாள்.

‘‘இங்கே பாரு... நான் எந்த கேமும் ஆடலை! மூணு நிச்சயதார்த்தம் நடக்கும்னு நம்பித்தான் உன்கிட்டே சேலை எடுக்கச் சொன்னேன். ஆனா, கடைசி நிமிஷத்துல எல்லாமே மாறிப் போச்சு. என்ன ஏதுன்னு எல்லாம் கேட்காதே... ஆனா, நான் உங்க யாரையும் ஏமாத்தலை...’’ என்று சொல்லும்போதே விஜயாவின் கண்களில் நீர் கரைகட்டியது. சீதாவை நிமிர விடாமல் தலையை அழுத்திக் கொண்டாள்.

‘‘எங்களை ஏமாத்தலைன்னா, நீ ஏமாந்துட்டியா? நீ ஒருத்தரை விரும்பி அவர்கிட்டே சொன்னா, நிச்சயமா உன்னை வேணாம்னு சொல்ல மாட்டாங்க. உன்னைப் பொண்ணு பார்க்க வந்தவங்களுக்கு உன் உருவம்தான் தெரியும்... அதான் எவனுக்கும் உன் அருமை தெரியலை. ஆனா, நீ தேடிப் போய் சொன்ன ஆள் அப்படி உன்னை நிராகரிக்க வாய்ப்பில்லையே?’’ என்றாள் சீதா.

‘‘என்னை யாரும் நிராகரிக்கலைடி... நல்லபடியா நடந்துடும்னு நினைச்சேன். மிஸ் ஆகிடுச்சு! அதைவிடு... நீ வடிவேலுவை மிரட்டுறதைப் பார்த்தா அவரு உன்கிட்டே வசமா மாட்டிக்கிட்ட மாதிரிதான் தெரியுது. உனக்குள்ளே இப்படி ஒரு டெர்ரரிஸ்ட்டா..?’’ என்றாள் தலையை அளைந்தபடி.
அந்தப் பக்கமாக வந்த அம்மா, ‘‘ஏய்... கல்யாண வீட்டுக்கு ஆளுக வந்துக்கிட்டும் போய்க்கிட்டும் இருப்பாங்க... இப்படியா தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு இருக்கறது? பின்கட்டுக்குப் போங்க...’’ என்று சொல்லிவிட்டுப் போனாள்.
இருவரும் எழுந்து உள்ளே போனார்கள்.

‘‘ஏண்ணே... தாலிச் செயின் பத்து பவுன்ல செஞ்சா போதுமா? நான் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போகையிலே அவ்வளவுதான் போட்டாங்க. அண்ணே... நீ என்ன சீரு செய்வியோ, இல்லையோ... எனக்குக் குடுத்த மாதிரி நல்ல காராம் பசு ஒண்ணு குடு! என் குடும்பமே இன்னிக்கு தழைச்சு நிக்குதுன்னா நீ குடுத்த சீதனம்தான்’’ என்று அண்ணனை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தாள் நளினியின் அத்தை. நளினி இந்தப் பேச்சுகளைக் கேட்கப் பிடிக்காமல் எழுந்து உள்ளே போய்விட்டாள்.

‘‘என்ன தாயி... இப்படி எதிலேயும் ஒட்டாம உள்ள உள்ள வந்து உட்கார்ந்துடுத? நான் வந்து நாலைஞ்சு நாளாச்சு... ஒரு நாளாச்சும், ‘கட்டிக்கப் போற மாமன் எப்படி இருக்கு... போட்டா கீட்டா வெச்சிருக்கீங்களா’ன்னு கேட்டிருக்கியா? என்ன பொண்ணும்மா...’’ என்றபடி உள்ளே வந்த அத்தையிடம், ‘‘இல்லத்தே... நாளைக்கு எனக்குப் பரீட்சை... படிக்கணும்’’ என்றாள்.
‘‘நல்லா படி தாயி...’’ என்றபடி எழுந்து போய் விட்டாள் அத்தை.

நளினி அப்படியே எழுந்து பால்கனி பக்கமாக வந்தாள். தெருவில் நின்று கொண்டிருந்த ஆனந்த், ‘பரீட்சை முடிந்தவுடன் சந்திக்கலாம்...’ என்கிற மாதிரி சைகை செய்ய, நளினியும் ‘ஓகே’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். வெள்ளிக்கிழமை பொழுது விடிந்தது. விஜயா பள்ளிக்கூடத் துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். ‘‘என்னம்மா... லீவுன்னு சொன்னே! கிளம்பிட்டிருக்கே..?’’ என்றாள் அம்மா.

‘‘கூட வேலை செய்யற எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்கணும். மதிய சாப்பாட்டுக்குள்ளே வந்திடுவேன்...’’ என்றபடி புறப்பட்டாள். பள்ளியில் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு ஆசிரியர் ஓய்வறைக்கு வந்தவள், ஈஸ்வரியிடமும் பத்திரிகையை நீட்டினாள். ‘‘வீட்டுக்கு வந்து தரணும்னுதான் நினைச்சேன்... ஆனா, எல்லாருக்கும் இங்கே கொடுத்ததால் உனக்கும் கொடுத்துட்டேன்... கலைச்செல்வன் சார்கிட்டே பேசினியா..?’’ என்றாள்.

‘‘இல்லை விஜயா! இதிலே நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது... என் மகனுக்கும் இதிலே பங்கு இருக்கு. அவனுக்கும் மனசிலே படணும், ‘இவர் நமக்கு அப்பா’ன்னு. அப்போதான் நான் நிம்மதியா இருக்க முடியும். அது சரியா வரலைன்னா, ‘நானே அம்மா... நானே அப்பா’ன்னு வளர்த்துடுவேன்’’ என்றாள்.

‘‘ச்சே... ஏன் இப்படி நெகட்டிவா யோசிக்கிறே? எல்லாம் சரியா வரும்!’’ என்று சொல்லி விட்டு எழுந்தாள் விஜயா. கலைச்செல்வனின் அறை பூட்டியிருந்தது. ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருப்பதால், லீவ் போட்டுவிட்டு அவர் வீட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அவர் வீட்டுக்கு நடந்தாள் விஜயா.

எங்கோ வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த கலைச்செல்வன், திடீரென விஜயா வருவதைப் பார்த்ததும் ஆச்சரியமாகி, வீட்டுக்குள் கூப்பிட்டார். வாசலிலேயே வைத்து அவரிடம் பத்திரிகையை நீட்டினாள் விஜயா. அவர் அதைப் பிரித்துப் பார்த்தபோது, ‘‘என்ன சார்... ஈஸ்வரி பேசினாளா?’’ என்றாள்.

‘‘இல்லை டீச்சர்... ஆனா, என்னைப் பார்த்தால் பழைய மாதிரி தர்மசங்கடம் இல்லாம சிரிக்கறாங்க. அதுவே பெரிய நிம்மதி தருது. அவங்க என்கிட்டே பாராமுகமா இருந்தப்போ, ‘அவங்க உணர்வை மதிக்காம காயப்படுத்திட்டோமோ... உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்துட்டோமோ’ன்னு கலங்கினேன். ஆனா, நீங்க பேசின பிறகு அவங்க முகத்தில் சின்ன தெளிவு தெரியுது. ரொம்ப தேங்க்ஸ் டீச்சர்...’’ என்றார்.

‘‘இதிலே என்ன இருக்கு? அப்புறம்... முடிஞ்சா இந்த சண்டே ஈஸ்வரி வீட்டுக்குப் போயிட்டு வாங்க. அவ பையனுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்குமில்லையா?’’ என்றாள். பிறகு சம்பிரதாயமாக, ‘‘கல்யாணத்துக்கு அவசியம் வாங்க...’’ என்றாள். அந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அவளையும் மீறி குரல் நடுங்கியது. கலைச்செல்வன் ஏதோ சொல்ல வரும்போது விஜயாவின் செல்போன் ஒலித்தது.

எதிர்முனையில் ஆனந்த்... ‘‘அக்கா! ஒரு முக்கியமான விஷயம்... நீ உடனே கோயிலுக்கு வரமுடியுமா..?’’ என்றான். ‘‘என்ன விஷயம் சொல்லுடா!’’ என்றபோது ரோட்டில் ஒரு லாரி வேகமாக ஹாரன் ஒலித்தபடி செல்ல... ஆனந்த் பேசியது காதில் விழவில்லை. ‘‘சரி... வர்றேன்!’’ என்று மட்டும் சொல்லிவிட்டு கலைச்செல்வனை நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ அவசரம் என்பதைப் புரிந்துகொண்ட அவரும், ஒரு ஆட்டோவை கைதட்டிக் கூப்பிட்டார்.விஜயா கோயில் வாசலில் போய் இறங்கியபோது, மாலையும் கழுத்துமாக நளினியுடன் நின்று கொண்டிருந்தான் ஆனந்த்!
(தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்