கலக்கல் லாபம் தரும் காபி பெயின்டிங்





பெயரைக் கேட்டால் எப்படி வித்தியாசமாக உணர்கிறீர்களோ, பெயின்டிங்கை பார்த்தாலும் அப்படித்தான் நினைப்பீர்கள். யெஸ்... காபி பெயின்டிங் பார்வைக்கும், உணர்வுக்கும் அத்தனை அழகு!

‘‘பொதுவா ஓவியம் வரையத் தெரிஞ்சவங்க தான் பெயின்டிங்ல சாதிக்க முடியும். முறையான பயிற்சி, ஓவியத் திறமை, கலரிங், ஷேடிங் சூட்சுமம் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். ஆனா காபி பெயின்டிங்ல அப்படி எதுவுமே தேவையில்லை. சின்னக் குழந்தைகளாலகூட சிறப்பா வரைய முடியும்’’ என்கிறார் சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்த வித்யாலட்சுமி. காபி பெயின்டிங்கில் ஆர்வமுள் ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார் அவர்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘இன்ஸ்டன்ட் காபித் தூள் அல்லது ஃபில்டர் காபித் தூள், பிரஷ், கேன்வாஸ் போர்டு அல்லது துணி, கோன் லைனர், மஞ்சள் கார்பன், வார்னீஷ்... வெறும் நூறு ரூபாய் முதலீடே போதுமானது.’’

என்ன சிறப்பு?
என்னென்ன வரையலாம்?
‘‘ஃபில்டர் காபி தூள் வச்சு டிகாக்ஷன் போடத் தெரிஞ்சவங்க, அதையே பெயின்ட் பண்ணவும் உபயோகிக்கலாம். அது தெரியாதவங்க, 2 ரூபாய்க்கு கிடைக்கிற இன்ஸ்டன்ட் காபித் தூள் பாக்கெட்டை, வாங்கி, தண்ணீர் விட்டுக் கலந்தும் உபயோகிக்கலாம். இதுல பிரவுன் ஷேடுதான் பிரதானம். வேறு கலர்கள் கிடையாது. அதனால பிரவுன் ஷேடையே லைட் டிகாக்ஷன், டார்க் டிகாக்ஷன் மூலமா வேறுபடுத்திக் காட்ட வேண்டியதுதான்.

ஏற்கனவே சொன்ன மாதிரி... வரையத் தெரியாதவங்களும் இதை சுலபமா பண்ணலாம். கோன் லைனர் மூலமா, அவுட் லைன் போட்டு, பிறகு ஷேடிங் பண்ணலாம். வெயில் காலத்துல பண்ணினா, சீக்கிரம் காயும். பெயின்டிங் முடிச்சு, ஃபிரேம் பண்ணி மாட்டின பிறகும்கூட காபி வாசனை வீசிக்கிட்டே இருக்கும்.

இயற்கைக் காட்சிகள், சாமி படங்கள், கார்ட்டூன், பூக்கள்னு எந்த உருவத்தையும் வரையலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘அன்பளிப்புப் பொருள்கள் விற்பனையாகிற எல்லா இடங்கள்லயும் கொடுக்கலாம். கண்காட்சிகள், ஆர்ட் கேலரிகள்ல விற்பனைக்கு வைக்கலாம். ஏ4 அளவுள்ள ஒரு படத்தை ஃபிரேம் செலவு சேர்த்து 500 ரூபாய்க்கு விற்கலாம். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் அடிப்படைப் பயிற்சிக்கு, தேவையான பொருள்களுடன் சேர்த்துக் கட்டணம் ரூ.500. அட்வான்ஸ்டு பயிற்சிக்கு 1,000 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி