ஜோசியம்





‘‘அம்பத்தோரு வயசான இந்த மரகதம் அம்மாளுக்கு, என் கிளியம்மா எடுத்துக் கொடுத்த சீட்டு என்ன சொல்லுதுன்னா...’’ - ஒரு பாடலை உரக்கச் சொல்லிவிட்டு பலன் சொல்லத் துவங்கினான் கிளி ஜோசியக்காரன். கிளி எடுத்துக் கொடுத்திருந்த சீட்டில், தாண்டவம் ஆடும் மயான காளியின் படம் இருந்தது.

‘‘அம்மாவுக்கு இப்ப நேரம் சரியில்ல. எந்தக் காரியத்தை தொட்டாலும் அதிலே இடி வந்து விழும். தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டிய பிழைப்புத்தான். இன்னும் மூணு மண்டலத்துக்கு உங்களை சனியன் ஆட்டி வைப்பான்...’’

‘‘நிறுத்துப்பா... நிறுத்து! என்ன பலன் சொல்றே... முதல்ல இடத்தைக் காலி பண்ணு!’’ - அவனை விரட்டினாள் மரகதம்.

‘‘நான் என்னம்மா பண்றது... உண்மை அப்படித்தான் இருக்கு! ஜோசியத்துக்கு பத்து ரூபா கொடுங்க’’ என்றான் அவன் பரிதாபமாக. ‘‘அதெல்லாம் இல்ல.. போ... போ!’’ - அவள் கத்தலில் மிரண்டு நடையைக் கட்டினான் கிளி ஜோசியன். பத்தடி தூரம் போயிருப்பான்... பின்னாலிருந்து ஒரு இளம்பெண் அவனை அழைத்தாள். ‘‘இந்தாங்க... ஜோசியம் பார்த்ததுக்கு இருபது ரூபா. வச்சிக்கங்க!’’
‘‘அவங்களுக்கு பலன் சொன்னதுக்கு நீங்க பணம் தர்றீங்களே... யாரும்மா நீங்க?’’ என்றான் அவன். ‘‘நான் அவங்க மருமக. நீங்க சொன்ன ஜோசியம் பலிச்சா இன்னும் நிறைய தர்றேன்... கிளம்புங்க!’’