சந்தோஷம்





நம்ம பையனுக்கு இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா உலக விவரம் புரியுது. நம்மளோட வெளியில போகணும்னு ஆசைப்படறான். ஆபீஸ் டென்ஷனை மறந்துட்டு ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் குழந்தையோட என்னால வெளியே போக முடியும். அதனால இனிமே நம்ம கார் டிரைவர் கிருஷ்ணனை ஞாயிற்றுக்கிழமையும் காலையிலயே வரச்சொல்லிடறேன். அதுக்கு தனியா நானூறோ, ஐநூறோ கொடுத்துட்டா போவுது!’’ - மனைவி கீதாவிடம் தன் ஐடியாவைப் பகிர்ந்து கொண்டார் அர்ஜுன்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே காரில் கிளம்பி, பல இடங்களில் சுற்றிவிட்டு அவர்கள் வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகிவிட்டது. ‘‘இப்படி லீவு நாளன்னைக்கு குடும்பத்தோட நேரம் செலவிடுற மாதிரி ஒரு சந்தோஷம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வருமா?’’ என்று சிலாகித்தார் அர்ஜுன். ‘‘உண்மைதாங்க. ஆனா, அதே நியதிதான் எல்லாருக்கும். நமக்கு ஒரு பையன் இருக்கறமாதிரி, நம்ம டிரைவா¢ கிருஷ்ணனுக்கும் ஆறு வயசுல ஒரு பையன் இருக்கான். அவனுக்கும் ஒரு அப்பாவா தன் பையனோட வாரத்துல ஒருநாள் சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பு இருக்காதா? கிடைக்கிற ஒருநாள் லீவையும் இன்னைக்கு நாம பறிச்சுக்கிட்டோம். அந்த இழப்புக்கு முன்னாடி, நாம கொடுக்குற 500 ரூபாய் எந்த மூலைக்கு? அடுத்த ஞாயிற்றுக்கிழமையில இருந்து கிருஷ்ணனைக் கூப்பிட்டாதீங்க. நாம வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்’’ - கீதாவின் உபதேசம் அர்ஜுனுக்கு கீதோபதேசமாக ஒலித்தது.