தத்துவம் மச்சி தத்துவம்





‘‘ஆனாலும் இப்பல்லாம் டிரான்ஸ்பர் கொஞ்சம் ஓவர்தான்... ஆறு மாசத்திலே எனக்கு ரெண்டு தடவை டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருச்சு...’’
‘‘இதுல என்ன அதிசயம்?’’
‘‘யோவ்... எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலய்யா!’’
ஆர்.ஆர்.பூபதி, கன்னிவாடி.

‘‘விளங்கோ அடிகளும் பொன்னம்பல அடிகளும் வந்துள்ளார்களா... ஏன் அமைச்சரே?’’
‘‘போரில் தாங்கள் வாங்கிய தர்ம அடி களைக் கண்டுகளிக்கத்தான் மன்னா..!’’
தாமு, தஞ்சாவூர்.

பிறந்த குழந்தைக்கு ‘குழந்தைவேலு’ன்னு பெயர் வச்சாலும், வயசான பிறகு அவரை ‘கிழ(வன்)வேலு’ன்னு கூப்பிட முடியாது. எப்பவும் அவர் குழந்தைவேலுதான்!
- நேமாலஜியைத்

துருவித் துருவி ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
ஏ.எஸ்.யோகானந்தம்,
ஔவையார்பாளையம்.

‘‘மக்கள் குறைகேட்பு விழாவுல எம்.எல்.ஏ. ஏன் கோபப்படுறார்..?’’
‘‘நம்ம தொகுதிக்கு எப்படியாவது இடைத்தேர்தல் வர வைங்கன்னு கேட்டே எல்லாரும் மனு கொடுத்தாங்களாம்...’’
அம்பை தேவா, சென்னை-116.

‘‘சுவாமிஜி இப்பல்லாம் ஏன் ‘ஓம் ரேகா’ன்னு சொல்றார்..?’’
‘‘சாந்தி ஆசிரமத்துலேர்ந்து கோச்சுக்கிட்டுப் போயிட்டா... அதான்!’’
அ.ரியாஸ், சேலம்.

‘தீயா வேலை செய்யுங்க’ன்னு ஃபயர் சர்வீஸ்காரங்களைப் பார்த்து சொல்லலாம்; பட்டாசு தொழிற்சாலையில வேலை பாக்கறவங்ககிட்ட சொல்ல முடியுமா?
- தத்துவ நெருப்பில்
குளிர் காய்வோர் சங்கம்
பர்வீன் யூனுஸ், சென்னை-44.

ஊட்டியில ஒருத்தர் நம்மளைத் திட்டினாலும் அதை ‘சுடுசொல்’னுதான் சொல்லுவோம். ‘ஜில் சொல்’னு சொல்ல முடியாது!
- கொளுத்தும் வெயிலில் திட்டு வாங்கியே சூடாவோர் சங்கம்
இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.