
கலைச்செல்வன் சொன்ன வார்த்தைகள் விஜயாவுக்குள் இறங்கியபோது எந்த சிலிர்ப்பும் ஏற்படவில்லை. இப்போது அவள் கனவுகளற்ற மனநிலையில் இருந்தாள். அவளால் எந்த விஷயத்தையும் தன்னுடைய வாழ்க்கை சார்ந்து யோசிக்க முடியவில்லை. எல்லாமே தன் கைகளை விட்டுப் போய்விட்டதைப் போன்ற உணர்வில் அவள் இருந்தாள். காற்றில்லாத வெயில் நேரத்தில், சலனமில்லாமல் அமைதியாக இருக்கும் குளம் போல இருந்தது அவள் மனம். விஜயாவின் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்த கலைச்செல்வன் தொடர்ந்து பேசினார்... ‘‘ரவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியிருக்காரு. ஈஸ்வரி மறுகல்யாணம் செய்துகிட்டாதான், தன்னோட கல்யாணம் பத்தி யோசிக்க முடியும்னுகூட ஒரு கட்டத்துல ரவி சொல்லிப் பார்த்திருக்காரு. ஆனா, இப்போ இருக்கற மனநிலையில் கல்யாணப் பேச்சே வேண்டாம்னு தீர்மானமா சொல்லிட்டாங்களாம் ஈஸ்வரி...’’ என்ற கலைச்செல்வன், பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.
‘‘டீச்சர்... உங்ககிட்ட கேக்கறதுக்கே சங்கடமா இருக்கு. ஆனாலும் எனக்கு வேற வழியில்லை. எனக்காக நீங்க ஓர் உதவி செய்யமுடியுமா? ஏன்னா, இதுலே என் தங்கையோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு... நீங்க கொஞ்சம் ஈஸ்வரிகிட்டே எடுத்துச் சொல்ல முடியுமா..?’’ - நாலு வரி பேசுவதற்குள் மூன்று முறை முகத்தைத் துடைத்துக் கொண்டார் கலைச்செல்வன். ‘‘என்ன சார்... இவ்ளோ தயங்கறீங்க? உங்களுக்காக இல்லைன்னாலும் ஈஸ்வரிக்காக நான் இதை நிச்சயம் செய்வேன்! நீங்க தைரியமாக இருங்க... நான் பேசறேன்’’ என்று சொல்லிவிட்டு ஆசிரியர் ஓய்வறையை நோக்கி நடந்தாள்.

நளினி வீடு ஏக களேபரத்தில் இருந்தது. ஊரிலிருந்து அத்தை வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். நளினியின் அப்பா ஆடு, கோழி என்று எல்லா வெரைட்டியிலும் அள்ளிக் கொண்டு வந்து போட்டிருந்தார். ‘‘மத்த வீடுகளா இருந்தா சம்பந்தம் முடியாம கை நனைக்க மாட்டோம்! ஆனா, இது எனக்கு அண்ணன் வீடு... மருமக உறவு எல்லாம் பின்னால வந்ததுதானே? என்ன சொல்றீங்க... அந்தக் கறியைக் கொஞ்சம் இங்கிட்டு குடுங்க! நான் கழுவித் தர்றேன்...’’ என்று உரிமையாக வாங்கிக் கொண்டாள் அத்தை. அந்தப் பக்கமாக வந்த நளினியிடம், ‘‘அம்மா மருமகளே! எங்க அண்ணன் படிப்பை நிப்பாட்டிட்டு கட்டிக் குடுக்க மாட்டேன்னு இவ்ளோ நாள் பிடிவாதமா சொல்லிக்கிட்டிருந்தாரு. ஆனா, இப்போ திடுதிப்புன்னு புறப்பட்டு வாங்கன்னு கூப்பிட்டு விட்டிருக்காரு... அண்ணன் வார்த்தை எங்களுக்கு சாமி வாக்கு மாதிரி! அதனால மறுவார்த்தை சொல்லாம கிளம்பி வந்துட்டோம். நீ வேணும்னா நம்ம வீட்டுக்கு வந்த பிறகு தபால்ல படிச்சுக்கோ... அதுக்காக மூஞ்சியை இப்படி தூக்கி வெச்சுக்கிட்டு அலையாத! பாக்கறவங்க, என்னமோ பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு நினைச்சுக்கப் போறாங்க’’ என்று இடைவெளி விடாமல் பேசிக் கொண்டே போனாள். வீட்டுக்குள் போன நளினி, அன்றைய பரீட்சைக்குத் தேவையான நோட்டு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்ப... பைக் சாவியுடன் வெளியே வந்தான் அவள் அண்ணன்.
‘‘சைக்கிள் வேணாம். வா... உன்னைக் கொண்டுபோய் நான் விட்டுடறேன்’’ என்றான். நளினிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஈரக் கைகளைத் துடைத்தபடி வந்த அத்தை, ‘‘மகராசியா போயிட்டு வா தாயி... நீ வரும்போது முகூர்த்த தேதியை நான் சொல்றேன்! கண்ணு... பரீட்சையிலே கவனமா எழுது! மாமன் மேல உள்ள ஆசையில பரீட்சையைக் கோட்டை விட்டுறாத!’’ என்றாள். நளினி வேண்டாவெறுப்பாக அண்ணன் பின்னால் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.

‘‘ஈஸ்வரி! இன்னிக்கு முதல் பீரியட் உனக்கு ஃப்ரீயா..?’’ என்றாள் விஜயா. ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருந்த ஈஸ்வரி, ‘‘இல்லை விஜயா! எக்ஸாம் வருதுன்னு சொல்லி ரத்னா டீச்சர் என் கிளாஸைக் கேட்டாங்க... கொடுத்துட்டேன்! உனக்கும் இன்னிக்கு ஃப்ரீயா?’’ என்றாள். ‘ஆமாம்’ என்பது போல தலையசைத்த விஜயா, ஈஸ்வரிக்கு பக்கத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். ‘‘நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சுதா விஜயா? அம்மா, தம்பி எல்லாம் வீட்டுக்கு வந்திருந்தாங்க... அதான் என்னால் வரமுடியலை! பையனை அவங்ககிட்டே விட்டுட்டு வரலாம்னுதான் நினைச்சேன். ஆனா, வீட்டுல கொஞ்சம் பிரச்னை ஆகிடுச்சு...’’ என்றாள். ஈஸ்வரியே டாபிக்கை ஆரம்பித்ததால் விஜயா சட்டென்று பிடித்துக் கொண்டாள். ‘‘என்ன பிரச்னை..?’’ என்றாள்.
‘‘நம்ம கலைச்செல்வன் சாரோட தங்கையை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என் தம்பி சொல்லியிருக்கான். அம்மாவுக்கும் எனக்கும் அதுல முழு சம்மதம். ஆனா, அதேபோல கலைச்செல்வன் சார் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாராம்! கேட்டதும் எனக்கே அதிர்ச்சியா இருந்தது. அதைச் சொல்லி என் தம்பி, ‘வாழ்க்கையில நீ செட்டில் ஆக இதுதான் சரியான முடிவு... சம்மதம் சொல்லு’ன்னு ஆரம்பிச்சுட்டான். நான் இருக்கற நிலைமையில் இது சரி வருமா? யோசிச்சுப் பாரு...’’ என்றாள் ஈஸ்வரி. சொல்லும்போதே கண்களில் நீர் பெருகிவிட்டது. ‘‘ஒரு கணவனா வேண்டாம்... ஒரு மனுஷனா உன் வீட்டுக்காரர் பற்றி ஒரே ஒரு பாசிட்டிவான விஷயத்தை உன்னால சொல்லமுடியுமா? அவரோட வாழ்ந்த காலத்தில் நீயே எத்தனை நாள் மூச்சு முட்டி தண்ணிக்குள்ள இருக்கற மாதிரி தவிச்சிருக்கே... அவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தப்போகூட உனக்கு அழுகை வரலையே... ஒருவிதமான நிம்மதியோடுதானே இருந்தே? அந்த வாழ்க்கை முடிஞ்சு போனதுக்கா வருத்தப்படுறே... அந்த நினைவுகளை அழிச்சுடக் கூடாதுன்னா யோசிக்கறே..?’’ என்றாள் விஜயா. ஈஸ்வரி தலை கவிழ்ந்து அமைதியாக உட்கார்ந்திருக்க, விஜயா தொடர்ந்தாள்...
‘‘உன் கசப்புகள் நியாயமானதுதான். ஆனா இந்த சின்ன வயசிலே துணையை இழந்துட்டு, கடைசிவரைக்கும் எப்படி காலம் தள்ள முடியும். தனிமரமா இருக்கற ஒரு இளம்பெண்ணை நிம்மதியா வாழவிடற அளவுக்கு நம்ம சமூகம் இன்னும் மாறலை. நம்ம வேதனையைக் கொட்டறதுக்காவது நமக்கு ஒரு துணை வேணும்! உன் மகனுக்கு ஒரு நல்ல நண்பனா இருக்கற ஆண் துணை உனக்கு அவசியமாப் படலையா? எல்லா விஷயங்களையும் நாமே சொல்லிக் கொடுத்து வளர்க்க முடியாது.

உன் கணவன் உனக்குக் கொடுத்த அனுபவங்கள் உன்னை ரொம்ப பாதிச்சிருக்கு. தெனாலிராமன் வளர்த்த பூனைக்கு வெள்ளையா எதைக் கண்டாலும் பயமாம்... பாலைக் குடிச்சு சூடுபட்ட அந்தப் பூனை மாதிரி நீ எந்த ஆம்பளையைப் பார்த்தாலும் மிரளுறே! வெறுமனே உன் தம்பி உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கணும்னு சொல்லியிருந்தா நானே வேண்டாம்னு சொல்லுவேன். ஆனா, அந்த இடத்தில் கலைச்செல்வன் சார் நிற்கும்போது உனக்கு என்ன தயக்கம்?’’ என்று விஜயா சொன்னபோது ஈஸ்வரி நிமிர்ந்து பார்த்தாள்.
விஜயா நாற்காலியை நகர்த்துவது போல தலையைத் திருப்பிக் கொண்டாள். ‘‘எல்லாம் சரிதான் விஜயா... ஆனால், உடனடியாக இன்னொரு பந்தத்துக்குள் போறதுக்கு எனக்கு மனசு இடங்கொடுக்கலை. இன்னமும் வீட்டுக்குள் நுழைஞ்சா அந்த மனுஷன் பற்றிய நினைவுகள்தான் வருது! அதெல்லாம் சரியான பிறகுதானே இன்னொரு கல்யாணம் பற்றி யோசிக்க முடியும்... நானும் என் வாழ்க்கையை இப்படியே கழிச்சுடப் போறேன்னு வசனம் எல்லாம் பேசமாட்டேன்! ஆனா, ஒரு பெரிய புயலடிச்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கற என் வாழ்க்கையில் என் இயல்புப்படி இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்கலாமேன்னுதான் தோணுது. அதுக்காக கலைச்செல்வன் சாரை காத்திருக்கச் சொல்றது நியாயமில்லை. அவரு ஏதோ நன்றிப் பெருக்கில் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லியிருக்கார். அவர் அன்பை நான் சந்தேகப்படலை. ஆனா கல்யாணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் விஷயம்... என்னைப் போல சில விதிவிலக்கு களை விட்டுடு! அந்த அபூர்வமான நிகழ்வை அவர் இவ்வளவு அவசரமாகவும் உணர்ச்சி வேகத்தோடும் தீர்மானிக்கணுமா என்ன?’’ என்றாள் ஈஸ்வரி.
விஜயா அமைதியாக ஈஸ்வரியையே பார்த்துக் கொண்டிருந்தாள். காலம் ஒரு பெண்ணை எவ்வளவு பக்குவப்படுத்துகிறது! தன் வயதை ஒட்டிய பெண்... வாழ்க்கையை ஒரு சுற்று வாழ்ந்துவிட்டவளாக இருக்கிறாள். அவளுடைய அனுபவங்கள் அவள்மீது மேலும் முதுமையை சுமத்தியிருக்கின்றன. ‘‘இல்லை ஈஸ்வரி... நீ சொல்ற விஷயங்கள் எல்லாமே சரிதான்! ஆனால், கலைச்செல்வன் சார் உணர்ச்சிவசப்பட்டோ அவசரப்பட்டோ முடிவு எடுக்கலை. அப்படி அவசரப்படுவதாக இருந்தா, உன் கணவர் இறந்த கையோடு சொல்லியிருப்பார். உணர்ச்சிவசப்படுவதாக இருந்தால், சொன்ன பிறகு நீ மறுத்ததும் என்னை தூது அனுப்பியிருக்க மாட்டார். அவர் உறுதியாக இருக்கிறார். உன் வாழ்க்கைக்கு அது சரியாக இருக்கும். உங்கள் திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், அதுதான் சரியான முடிவு என்பது உன் மனதில் விழுந்தால், இந்த விரக்தி மனநிலையில் இருந்து சீக்கிரமே வெளியே வருவாய்...’’ என்று சொன்னபோது, முதல் பீரியட் முடிந்ததற்கான மணி அடித்தது. மௌனமாக நோட்டுகளை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் விஜயா.

‘‘இந்த மாசத்தில் ரெண்டே முகூர்த்தம்தான் பிரமாதமா இருக்குன்னு புரோகிதர் சொல்றார். அதுபடி பார்த்தா இந்த வெள்ளிக்கிழமை ஒரு முகூர்த்தம்... அடுத்த புதன்கிழமை ஒரு முகூர்த்தம்! இரண்டாவது முகூர்த்தம்னா நமக்கு வசதியா இருக்கும்னு படுது. சம்பந்திங்க வீட்டுல கேட்டுட்டா, மற்ற ஏற்பாடுகளை பார்த்திடலாம்! என்ன சொல்றீங்க மாமா..?’’ என்றார் ரத்னவேலு. ‘‘அடுத்த புதன்கிழமைன்னா நடுவிலே பத்து, பனிரெண்டு நாள்தான் இருக்கு... வேலைகளை முடிச்சுட முடியுமா?’’ என்றார் அப்பா. ‘‘எல்லாத்துக்கும் ஆள் இருக்கு... எதுக்கு கவலைப்படுறீங்க? அதெல்லாம் பார்த்துக்கலாம். ஆளும் பேருமா வீட்டுல இருக்கறவங்க நின்னா முடிச்சுடலாம். நான் போய் சம்பந்திங்க வீட்டில் கலந்துக்கிட்டு வந்துடறேன்’’ என்று சொல்லிவிட்டு ரத்னவேலு எழுந்து வெளியே போக, ‘‘நானும் போய் சீட்டுப் பணத்துக்கு சொல்லி வச்சுட்டு வந்துடறேன்...’’ என்று கிளம்பினார் அப்பா. உள் அறையில் படுத்துக் கிடந்த ஆனந்தின் செல்போன் ஒலித்தது. எடுத்தால், நளினி!
‘‘ஆனந்த்! கடைசி பரீட்சை முடிஞ்சதும் எனக்கும் என் அத்தை மகனுக்கும் இந்த வெள்ளிக்கிழமை கல்யாணம்னு வீட்ல முடிவு பண்ணியிருக்காங்க. அன்னிக்கு நீ என் கழுத்திலே தாலி கட்டணும்... இல்லைன்னா அடுத்த நாள் வந்து என் பொணத்துக்கு மாலை போடு!’’ என்று சொல்லிவிட்டு, பட்டென்று போனை வைத்துவிட்டாள் நளினி. ஆனந்த் யோசனையோடு எழுந்தான்.
(தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்