பெங்களூரு பெண் என்றாலும் ப்ரணீதாவின் வனப்பு, அவரை எங்களூர் பெண் என்றே அழைக்க வைக்கிறது. கன்னடம், தெலுங்கு வழியாக தமிழ்நாட்டு ரசிகர்களை கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கும் ப்ரணீதாவை ஃப்ளாஷ் இல்லாத கேமராவில் எடுத்தாலும் பழுதில்லாமல் ஜொலிப்பார். அவங்க அம்மா, அப்பாவுக்கு திருஷ்டி சுற்றிப் போடணும்.
அவர்கள் இருவரும் மருத்துவர்களாக இருக்க, ப்ரணீதாவுக்கு ஆர்வம் இருந்தது எஞ்சினியர் ஆக! ‘‘நான் பயாலஜியில கொஞ்சம் வீக். ஆனா அதை எழுதிடாதீங்க...’’ என்று ப்ரணீத் கெஞ்சலாக கேட்டதால் நீங்களும் அதை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். அந்த ஆசைக்கு அவசர கால தடையுத்தரவு போட்டு அப்படியே சினிமாவுக்கு அள்ளிக்கொண்டு வந்த பெருமை கன்னட இயக்குநர் எம்.டி.ஸ்ரீதரைச் சேரும். ‘போக்கிரி’யின் கன்னட ரீமேக்கான ‘பொர்க்கி’க்காக ப்ரணீதாவை நடிகையாக்கினார். பின்னாளில் ப்ரணீதாவுக்குக் கோயில் கட்டும் அன்பர்கள், தவறாமல் எம்.டி.ஸ்ரீதருக்கும் அங்கே ஒரு பிராகாரம் வைக்கத்தான் இந்தக் குறிப்பு.

‘உதயனி’ல் தமிழுக்குள் வந்த இந்த கன்னடத்து கஸாட்டா, இப்போது கார்த்தி நடிக்கும் ‘சகுனி’யின் நாயகி. ‘‘டைரக்டர் சங்கர்தயாள் சொன்ன கதை பிடிச்சிருந்ததால ஓகே சொன்னேன். ஒருவேளை ‘உதயன்’ல என் நடிப்பு அவருக்குப் பிடிச்சிருக்கலாம். என்னோட கன்னட, தெலுங்குப் படங்களை அவர் பார்த்திருக்கலாம். ப்ராஜக்ட்ல நம் பங்கு என்னவோ அதை சரியா செய்யணும். நான் செய்திருக்கேன்னு நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்கள்ல நடிக்கணும். தெலுங்கு ‘பாவா’வில எனக்கு சம்பந்தமில்லாத கிராமத்துப் பெண் கேரக்டர் கிடைச்சது. ‘சகுனி’யில ஸ்வீட்டான காலேஜ் கேர்ள். அப்பாவியான கேரக்டர். என்னை மாதிரியேன்னு வச்சுக்கங்களேன். இன்னும் நிறைய கேரக்டர்கள் நடிக்கணும்னு லிஸ்ட் இருக்கு...’’ என்கிற ப்ரணீத் பேசும் அரைகுறைத் தமிழுக்கு எஃப்.எம்மில் அவரை ஆர்.ஜேயாகவே ஆக்கலாம்.

கார்த்தி பற்றிப் பேச்செடுத்தால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாட்ஸில் பிரகாசிக்கின்றன அவர் கண்கள். ‘‘கார்த்தி ஒரு அற்புதமான மனிதர். பெரிய ஸ்டாரா இருந்தாலும் நட்போட, அடக்கமா கோஆபரேட் பண்ணி நடிக்கிறார். பெரிய வீட்டுப் பிள்ளையா இருந்தாலும் பெருந்தன்மையா பழகறதுல அவரை அடிச்சுக்க ஆளில்லை. எப்பவும் செட்ல கலகலப்பா இருக்கிற அவரோட நடிக்க நேர்ந்தது என்னோட அதிர்ஷ்டம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த டைரக்டருக்கும், ‘ஸ்டுடியோ கிரீன்’ புரட்யூசர் ஞானவேல்ராஜாவுக்கும் நான் நன்றி சொல்லியே ஆகணும்...’’ என்கிற ப்ரணீதாவின் ஓய்வுகள் இசையில் கழிகின்றன. ‘சகுனி’ பாடல்களின் மூலம் ஜி.வி.பிரகாஷின் ரசிகையாகியிருப்பவர், தமிழ் தெரியாதிருந்தபோதும் காதில் கேட்டதை வைத்து ‘அப்படிப் போடு... போடு... போடு...’ பாடலை பாடிக்கொண்டே இருப்பாராம். ‘‘யாரோட நடிக்க ஆசை..?’‘ என்ற ஒற்றைக் கேள்விக்கான பதிலை ரொம்ப நேரம் போராடித்தான் வாங்க வேண்டியிருந்தது. ‘‘ரஜினி’’ என்றார் ஹஸ்கி வாய்ஸில், ஆலிவ் கண்களை உருட்டி. அப்படிப் போடு... போடு... போடு..!
- வேணுஜி