உருமி - விமர்சனம்





இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் பற்றியே அதிகம் அறிந்து வைத்திருக்கின்ற நமக்கு, அதற்கும் முன் வந்த போர்த்துகீசியர்களைப் பற்றிச் சொல்லும் படம். பதினைந்தாம் நூற்றாண்டில் அரபிக்கடல் வழியாக கேரளத்துக்குள் நுழைந்து அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை எதிர்த்து அப்போதே எழுந்த உரிமைக்குரல்களைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன். தற்காலத்தில் ஆரம்பிக்கும் கதை, பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கிப் பயணிக்கிறது. ஃபிளாஷ்பேக் நடைபெறுவது சற்றே புரிந்து கொள்ளச் சிரமமான காலகட்டம். தமிழகத்தில் சேரநாட்டின் வசமிருந்த கேரளப் பகுதியை சோழர்கள் கைப்பற்றி, அங்கே மிகுதியாக வாழ்ந்த நம்பூதிரிகளிடமும், நாயர்களிடமும் விட்டுச் செல்ல... அவர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். கேரளப் பகுதிக்கு வந்த வாஸ்கோட காமா, அங்கு ஏராளமாகக் கிடைத்த மிளகைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்று செல்வந்தன் ஆவதோடு, வளம்கொழிக்கும் கேரளப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறான். காமாவை அப்போதே எதிர்த்த சேதிராயன் கொல்லப்பட, அவன் வாரிசான கேளுராயன் தொடர்ந்து காமாவை எதிர்த்து வருகிறான். சேதிராயனாக ஆர்யாவும், கேளுவாக பிரித்விராஜும், பிரித்வியின் நண்பனாக பிரபுதேவாவும் நடித்திருக்கிறார்கள்.


காட்சிக்குக் காட்சி பிரித்விராஜ், ஆர்யா, பிரபுதேவா, நித்யா மேனன், ஜெனிலியா, தபு, வித்யா பாலன் என்று நட்சத்திரங்கள் இறங்கிக் கொண்டேயிருப்பது சந்தோஷ் சிவனின் சாதனைதான் என்று எண்ணத் தோன்றுகிறது. வாஸ்கோட காமாவால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்தால் 'உருமி’ என்றழைக்கப்படும் சுருள் வாளை உருவாக்கி, அதன்மூலம் காமாவைப் பழி தீர்க்கும் பிரித்விராஜின் போராட்டத்தில் கருத்துக்குத் தெரியாமல் பொதிந்திருக்கும் இஸ்லாமியர்களின் வலியையும் உணரமுடிகிறது. பிரித்வி உருமியை சுழற்றும் காட்சிகள் நம்பகமாக இருக்கின்றன. சிரக்கல் இளவரசியாக வரும் நித்யா மேனனின் அழகில் கவரப்பட்டு பிரபுதேவா செய்யும் சாகசங்கள் சிரிக்க, ரசிக்க வைக்கின்றன. ‘அரக்கல் ஆயிஷா’வாக வரும் ஜெனிலியா ஆவேசப் புலியாகி இடும் சண்டைகளில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி அசத்துகிறார். தபு, வித்யா பாலனிடமெல்லாம் பெற வேண்டியதைப் பெற்று ரசிக்க வைத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். சங்கர் ராமகிருஷ்ணனின் கதைக்கு உயிராக அமைந்திருப்பது சசி குமாரின் அற்புதமான தமிழ் வசனங்கள். ‘‘காமாவின் தும்மல் கூட அரசாணையாகி விடுகிறது’’ என்று சிரக்கல் தம்புரான் பேசுவது ஒரு சோற்று உதாரணம்.


ஃபிரேமுக்கு ஃபிரேம் ஓவியமாக விரியும் சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவுக்கு தீபக் தேவின் இசை உணர்வளிக்கிறது. கருத்துக்கினிய பாடல்களில் ‘முன்னழகு மதயானை, பின்னழகு மதுப்பானை’ என்று வரும் வர்ணனை வைரமுத்துவுக்கு மட்டுமே சாத்தியம்.

சந்தைக்காக இந்தியா வந்த வெளிநாட்டினர் கோலோச்சிய கதையை வெறும் சரித்திரக் குறிப்பாக மட்டும் சொல்லாமல், இன்றைக்கும் அந்நிய முதலீடுகளால் கண்ணுக்குத் தெரியாமல் எப்படி நாம் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற செய்தியை ரசிகர்களுக்கு உறைக்கச் சொல்கிறது படம். அதை உணர்த்த வரலாற்றுப் பாத்திரங்களில் வந்த அதே பிரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் போன்றவர்களை இன்று வாழும் பாத்திரங்களாக்கி, அன்றைக்கு நாட்டை விட்டுக்கொடுக்காத நிலையையே இன்றைக்கும் மேற்கொள்கிறார்கள் என்று முடிப்பது சிறப்பு.

சின்னச்சின்ன குழப்பங்களும், கேள்விகளும் அங்கங்கே இருந்தாலும் இந்த அரிய முயற்சிக்கும் சொன்ன செய்திக்கும் சந்தோஷ் சிவன் கொண்டாடப்பட வேண்டியவர்.
- குங்குமம் விமர்சனக்குழு