மோனலிசா கமல்





‘‘ஆங்கிலம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு மாதிரி ஓவியமும் ஒரு மொழிதான்!’’ என்கிற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரை ‘கமல் ஓவியர்’ என்றால் எளிமையாகப் புரியும். ஓவியத்தையே நேசித்து, சுவாசித்து, அதிலேயே 24 மணி நேரமும் வாழும் கலைஞர்களில் ஒருவரான ஸ்ரீதருக்கு, நடிகர் கமல் ஹாசனை ஓவியத்தில் விதம்விதமாகக் கொண்டு வருவது அடிஷனல் ஹாபி. சமீபத்தில் சென்னையில் இவர் துவங்கியிருக்கும் ஆர்ட் கேலரியை கமல் திறந்து வைத்தார்.


‘‘எங்க அப்பா வழக்கறிஞர். சின்ன வயசுல இருந்தே படிப்பு எனக்கு இரண்டாம் பட்சமாதான் இருந்தது. பிளஸ் 2 முடிச்சிட்டு ஓவியக் கல்லூரியில சேர டிரை பண்ணினேன். இடம் கிடைக்கல. ராஜாபரணி, அதிவீரபாண்டியன்னு ரெண்டு பேர்கிட்டயும் முறையா கத்துக்கிட்டேன். நிறைய சிரமங்களையும், தடைகளையும் தாண்டித்தான் எனக்கான அடையாளத்தைப் பெற முடிஞ்சது. ஒரு தடவை ஊர்ல இருந்து வந்த என் தாத்தா, ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்க?’ன்னு கேட்டார். ‘பெயின்டிங் பண்றேன்’னு சொன்னேன். அவ்வளவுதான்... ஊருக்குப் போனவர், எல்லோர்கிட்டயும் ‘மெட்ராஸ்ல ஸ்ரீதரு சுண்ணாம்பு அடிச்சிக்கிட்டு இருக்கானாம்’னு சொல்லிட்டார்.


நம்மூர்ல பலருக்கும் ஓவியத்தின் மீதான பார்வை இப்படித்தான் இருக்கு. உலகின் பல நாடுகளின் பத்திரிகை டிசைன்கள், சென்னையிலதான் நடந்துக்கிட்டிருக்கு. இது எத்தனை பேருக்குத் தெரியும்? வெளிநாடுகள்ல ஓவியர்களுக்கு கிடைக்கிற மரியாதையும் புகழும் நம்மூர்ல கிடைக்கிறதில்ல. இந்தப் போக்கை மாத்துற முயற்சியாதான் ‘ஆர்ட் ஹவுஸ்’ங்கற பெயரில் இந்த கேலரியை உருவாக்கியிருக்கிறேன்’’ என்கிற ஸ்ரீதருக்கு கமலை வரைவதில் மட்டும் ஏன் அதிக ஆர்வம்..?

‘‘உலகத்திலேயே நொடிக்கொரு மாற்றத்தை கமல் சார்கிட்ட மட்டும்தான் பார்க்க முடியும்ங்கறது என் அழுத்தமான நம்பிக்கை. சமீபத்துல கமல்ஹாசனை 50 விதமான ஓவியங்களா வரைஞ்சு வச்சிருந்தேன். ஹாலந்துல இருந்து வந்திருந்த மிகப்பெரிய ஓவியர் ஒருத்தர், ‘இந்த ஓவியங்கள்ல என்ன சிறப்பு’ன்னு கேட்டார். ‘இந்த 50 உருவங்களாவும் இருக்கறது ஒருத்தர்தான்’னு சொன்னதும், ‘என்னால நம்பவே முடியல’ன்னு ஆச்சரியப்பட்டார்.


கமல் சாரோட எக்ஸ்பிரஷன், மேக்கப், முகம், முடி எல்லாமே ஒரே மாதிரியா இருக்காது. இன்னைக்கு அவரைப் பார்க்கறதுக்கும் நாளைக்கு பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஒவ்வொரு முறை அவரை சந்திக்கப் போகும்போதும் ஒரு புது விஷயத்தைக் கத்துக்கிட்டு வர்றேன். அவர் எனக்கு ஹெட் மாஸ்டர் மாதிரி’’ என்கிறார் ஸ்ரீதர்.


இதுவரை 67 கமல் ஓவியங்களை வரைந்திருக்கிறார் ஸ்ரீதர். இவரது ஓவியங்களைப் பார்த்து கமல் சொன்ன கமென்ட்?
‘‘என் மேல் நீ காட்டும் அன்பிற்கு அதனையே நான் திருப்பிச் செலுத்துகிறேன்’னு சொல்லியிருக்கிறார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வரும் அப்பு கேரக்டர் சிரிக்கிற மாதிரி ஒரு ஓவியம் வரைஞ்சிருக்கேன். அதுல ‘இந்த சிரிப்பு தம்பி ஸ்ரீதருடையது’ன்னு எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கார். இதைவிட பெரிய பரிசு என்ன இருக்க முடியும்’’ எனும் ஸ்ரீதரின் தூரிகையில் மோனலிசாவாகவும் அழகாக புன்னகைக்கிறார் கமல்.
- அமலன்