என்னதான் வீடு முழுக்க மின்சார விளக்குகள் ஒளி உமிழ்ந்தாலும், ஒரே ஒரு மெழுகுவர்த்தியோ, திரி விளக்கோ ஏற்றி வைப்பதில் கிடைக்கிற அழகுக்கு வேறு எதுவுமே ஈடாகாது. ‘கேன்டில் லைட் டின்னர்’ என்கிற பெயரில் மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவு அருந்துவது, நட்சத்திர ஓட்டல்களில் ஒரு ஃபேஷனும்கூட! மெழுகுவர்த்திக்கு அத்தனை மவுசு.
சென்னையைச் சேர்ந்த சாந்தி தயாரிக்கிற விதம்விதமான மெழுகு விளக்குகள், இருளைப் போக்க மட்டுமின்றி, இருப்பிடத்தையும் அழகாக்கக் கூடியவை. அதிலும் அவர் உருவாக்குகிற மிதக்கும் விளக்குகள், அன்பளிப்பாகவும் கொடுக்க ஏற்றவை.‘‘கைவினைப் பொருள்கள் நிறைய செய்வேன். மற்றதெல்லாம் பொழுதுபோக்கவும், ஆத்ம திருப்திக்கும் பண்ற விஷயங்கள் னா, மெழுகுவர்த்தி எனக்கு பிடிச்ச பிசினஸ். பெரிய அனுபவமோ, மெனக்கெடலோ தேவையில்லாத, எளிமையான பிசினஸ் இது’’ என்கிறவர், கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘வாக்ஸ் சிப்ஸ், வாக்ஸ் கலர், மெட்டல் மோல்டு, அலுமினிய கப், திரி... வெறும் ஆயிரம் ரூபாய் முதலீடே போதுமானது.’’
எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?‘‘ஒரு தட்டுல தண்ணீர் வச்சு, அதுல ஏத்தி வச்சு மிதக்க விடற மாதிரியான
‘ஃப்ளோட்டிங் கேன்டில்’, ஏத்தி வைக்காம, சும்மா அழகுக்காக மிதக்க விடற மெழுகுப் பூக்கள், அலங்காரமா வைக்கக் கூடிய பெரிய மெழுகுப் பூக்கள்னு நிறைய இருக்கு. அளவைப் பொறுத்து பதினைந்துக்கும் மேலான டிசைன்கள் செய்யலாம்.
கார்த்திகை தீபம், தீபாவளி, நவராத்திரி மாதிரி விசேஷ நாட்கள்ல திரி போட்டு ஏத்தியும் வைக்கலாம். நிஜப் பூக்களோட சேர்த்து, இந்த மெழுகுப் பூக்களையும் அலங்காரமா வைக்கலாம். சமீப காலமா கல்யாணங்கள்ல ஆரத்தி தட்டுகள்ல பூ வடிவ மெழுகுவர்த்திகளை வைக்கிறது ஃபேஷனாயிட்டிருக்கு. அன்பளிப்பாகவும் கொடுக்கலாம்.’’
ஒரு நாளைக்கு எத்தனை?விற்பனை வாய்ப்பு?‘‘ஒரு நாளைக்கு 2 கிலோ வரைக்கும் பண்ணலாம். ஒரு கிலோ வாக்ஸ் சிப்ஸ்ல 25 பூக்கள் பண்ண முடியும். அளவைப் பொறுத்து குறைஞ்சது 2 ரூபாயிலேருந்து, அதிகபட்சமா 20 ரூபாய் வரைக்கும் விற்கலாம். ஒரு கிலோவுக்கான அடக்க விலை நமக்கு 200 ரூபாய்னா, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். ஃபேன்சி ஸ்டோர், பூஜைப் பொருள்கள் விற்கற கடைகளுக்கு சப்ளை பண்ணலாம்.’’
பயிற்சி?‘‘ஒரே நாள் பயிற்சில, வெறும் பூ வடிவ மெழுகு உருவங்கள் மட்டும் கத்துக்க, தேவையான பொருட்களோட சேர்த்து கட்டணம் 500 ரூபாய். டெடி பியர், விநாயகர் மாதிரியான மற்ற உருவங்கள் கத்துக்க ஆயிரம் ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்