திருப்புமுனை





‘‘வாழ்வில் வெற்றி பெற்ற மனிதன் ஐன்ஸ்டீன் என்று உலகம் என்னைக் கருதாமல், ‘மிகவும் பயனுள்ள மனிதனாக ஐன்ஸ்டீன் வாழ்ந்தார்’ என்று நினைவில் வைத்துக் கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். நோபல் பரிசு வாங்கும்போது, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தெரிவித்த கருத்து இது. வெற்றி பெற்ற மனிதனுக்கும் பயனுள்ள மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? ‘சாதித்த பிறகும், சமூகத்தில் இருந்து எடுத்துக் கொண்டதைவிட, குறைவாகவே திரும்பக் கொடுக்கிறவன் வெற்றியாளன். சமூகத்தில் இருந்து எடுத்துக் கொண்டதைவிட, அதிகமாக திரும்பக் கொடுப்பவன் பயனுள்ள மனிதன்’ என்று விளக்கினார் அந்த மேதை. அறிவியல் துறையில் தனிப்பட்ட வெற்றிகளைவிட, ‘அந்த வெற்றியால் சமூகத்திற்கு என்ன பயன் கிடைத்தது’ என்ற கேள்விக்கான பதில்தான் மிகவும் முக்கியம். ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடங்கி, இந்திய மக்களின் வாழ்வை மேம்படுத்தச் செய்கிற கூட்டு முயற்சியில் என்னுடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி’’ என்கிற மயில்சாமி அண்ணாதுரை, தன் கையருகே நிலா வந்த கதையைச் சொல்லும்போது, முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சாட்சியாகிறார்.

‘‘கல்லூரி விரிவுரையாளராகும் கனவோடு படிப்பை முடித்தேன். கோவையைச் சுற்றியுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன். அத்தனை இடங்களிலும் சொல்லி வைத்ததுபோல தோல்வியே பரிசு. எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் இருந்தும் வேலை கிடைக்கவில்லை. எதற்காக நிராகரிக்கப்படுகிறேன்? குழப்பமாக இருந்தது. ‘நல்லா படிச்சு நல்ல மார்க் எடுத்தால் போதும். எல்லாம் நடந்துவிடும்’ என்கிற மாயை உடைந்தது. மதிப்பெண் அடிப்படையில் இன்டர்வியூ செய்ய அழைக்கிறார்கள். நேர்முகத் தேர்வுக்குப் போய்விட்டு வந்த பிறகு, ‘வேலை இல்லை’ என்கிறார்கள். இன்டர்வியூவில்தான் ஏதோ தவறு செய்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். பத்து வார்த்தையில் கேள்வி கேட்டால், நான் ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அமைதியாகி விடுவேன். ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிற விரிவுரையாளர் வேலைக்குப் போக ஆசைப்படுபவன், ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசினால் யார் வேலை தருவார்கள்?

‘இன்டர்வியூவில் எப்படி நடந்து கொள்வது’ என்பதைக் கண்டுபிடித்தேன். நல்ல உடை உடுத்துவது, எனக்குத் தெரிந்தவற்றை தெளிவான பார்வையோடு விளக்குவது, கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பதில் சொல்வது போன்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். பெரிய மனிதர்களின் பரிந்துரையாலோ, பெரிய தொகை கொடுத்தோ என்னால் வேலைக்குப் போக முடியாது. எந்தக் குறைவும் இல்லாமல் நல்ல கல்வி கிடைத்துவிட்டது; இனி தகுதியைக் கொண்டு வேலை தேடிக்கொள்வது என் பொறுப்பு என்பதை உணர்ந்து நடந்தேன். படித்துவிட்டு பையன் வேலை இல்லாமல் இருப்பது அப்பாவுக்கு கவலையாக மாறி இருக்கலாம். என் படிப்பிற்கு எங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கிறது என்பதை நாளிதழ்களில் வருகிற வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தேடிக் கொண்டிருந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மகுடமாக இருக்கும் இஸ்ரோ நிறுவனத்திற்கு இளம் விஞ்ஞானிகள் வேண்டும் என்று விளம்பரம் வந்திருந்தது. என் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனை தருணத்தை அப்பாவே கண்டுபிடித்தார். என் படிப்பிற்கு விஞ்ஞானி ஆகலாம் என்பது அப்போதுதான் தெரிந்தது.


முன்னேற வேண்டும் என்கிற தாகம் இல்லாதவன் அறியாமையில் உழல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும், சராசரி மனிதனாக வாழ்ந்து தீர்த்துவிடாமல் இருக்க இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்ரோ வேலைவாய்ப்பு விளம்பரம் மூலமாகத்தான் கற்றுக் கொண்டேன். பேராசிரியர் வேலைக்கு தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்ட பிறகு காரணங்களைத் தேடினேன். இப்போது எச்சரிக்கையாக என் தேடல் முதலிலேயே தொடங்கியது. இஸ்ரோ பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்ததும் ஆச்சரியத்தில் புருவங்கள் உயர்ந்தன. அறிவியல் மீது எனக்கு இருந்த ஆர்வமும் காதலும் இந்த வேலைக்கு அடிப்படைத் தகுதிகள் என்பதை அறிந்தேன். என் தேடலுக்கு உரிய களம் இஸ்ரோ என்பது நன்றாகப் புரிந்தது. இன்டர்வியூவில் சிறப்பாக நடந்து கொள்ள எடுத்துக்கொண்ட பயிற்சிகள், பெரிய அளவில் பலன் தந்தன. நான் எதிர்பார்க்காத, என் விருப்பத்திற்குப் பொருத்தமான வேலை கிடைத்தது. அதை வேலையாகக் கருதாமல் தவம் மாதிரி செய்ய வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

சாதனைகள் செய்வதற்கு ‘வானமே எல்லை’ என்கிற இடத்தில் வேலை கிடைத்ததும் கற்பனைச் சிறகுகள் முளைத்தன. ஆனால் யதார்த்தம் ஏமாற்றம் தந்தது. ஏற்கனவே விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்கிற பொறுப்பு முதலில் வழங்கப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதென்றால் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் வேலை. பிரச்னை வரும்போது, அதைக் கவனித்து சொன்னால் போதும். அந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளே பிரச்னையை சரி செய்துவிடுவார்கள். மீண்டும் கண்காணிப்புப் பணி தொடரும். துடிப்போடு இருந்த எனக்கு இது ஏமாற்றம் தந்தது. கார் டிரைவர் வேலையில்கூட உலக அனுபவம் கிடைக்கும். இந்த வேலையில் எந்த அனுபவமும் இல்லாமல் இருந்ததால் என்னால் பொருந்தி இருக்க முடியவில்லை. விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டு, எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதை கண்காணிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன கிடைத்ததோ அதில் திருப்தி அடையாமல், எனக்குத் தேவையானதை தொடர்ந்து தேடுகிற பண்பு இயல்பாக எனக்குள் வந்துவிட்டது.  


பேராசிரியர் ராவ் என்பவர் எங்கள் குழுவின் தலைவராக இருந்தார். எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்திருப்பதால், செயற்கைக்கோள்களை கண்காணிக்க ஒரு சாஃப்ட்வேர் எழுதி நடைமுறைப்படுத்தினால், இன்னும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்று 15 பக்க திட்ட அறிக்கையை எழுதி அவரிடம் கொடுத்தேன். ராவ் என்னை முதல்முதலாக நிமிர்ந்து பார்த்த தருணம் அது. ஏழு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, சாஃப்ட்வேர் எழுத ஒரு குழுவையும் கொடுத்து, என்னை வழிநடத்தச் சொன்னார். புது முயற்சிகளை ஆர்வத்தோடு செய்வேன் என்பதை குழுவின் தலைவருக்குப் புரியவைத்த பிறகு எல்லாமே ஏறுமுகம். அடுத்தடுத்து பல சவாலான வேலைகள் அமைந்தன. இரவு பகல் பாராத உழைப்பு, வெற்றியின் வாசலுக்கு அழைத்துப் போனது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் விண்வெளி சாதனைகள், அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமையும். இந்திய விண்வெளித்துறை பெரும்பாலும் மக்கள் நலன் சார்ந்த முயற்சிகளையே மேற்கொள்கிறது. ஆயுதம் தயாரிப்பதும், ஏவுகணை செய்வதும் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சி என்ற தவறான பார்வை சிலருக்கு இருக்கிறது. பருவநிலையைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு உதவுவது, மீன்வளம் அறிந்து மீனவர்க்கு நலன் தருவது, கனிம வளங்களைக் கண்டறிதல், தொலைதூரக் கல்வி, தொலைதூர மருத்துவம் போன்ற மக்கள்நலன் சார்ந்த முயற்சிகளே இந்திய விண்வெளித் துறையின் கௌரவம். அத்தகைய பல செயற்கைக்கோள்கள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுகிற வாய்ப்பு கிடைத்ததை வாழ்நாள் பாக்கியமாக நினைக்கிறேன்.

‘ஜிசாட்-1’ செயற்கைக்கோளில் கோளாறு ஏற்பட்டபோது, அதை சரி செய்யும் பொறுப்பை ஏற்றேன். ராத்திரி பகல் பாராத கூட்டு உழைப்பில் சாதிக்க முடிந்தது. இதுபோன்ற சவாலான பணிகளில் அதிகமான உழைப்பு இருந்த அளவு, மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றேன். 2004ல் நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புகிற சந்திரயான் திட்டத்தின் இயக்குனராக என்னை நியமித்தார். அதுவரை நிலவு பற்றிய ஆராய்ச்சி எதிலும் நான் ஈடுபட்டதில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் பல மைல்கல் சாதனைகள் செய்த அமெரிக்காவோ, ரஷ்யாவோகூட நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பிய முதல் முயற்சியில் வெற்றி பெற்றதில்லை. இந்தியாவை மற்ற நாடுகள் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்கிற கனவோடு உழைத்தோம். நிலவு பற்றிய ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ள நாசா விஞ்ஞானிகள் கார்லோ பீட்டர், பால் ஸ்புடிஸ் ஆகியோர் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்தனர். இப்படி 26 நாட்டு விஞ்ஞானிகள் சந்திரயான் செயற்கைக்கோள் தயாரிப்பில் விருப்பத்தோடு பங்குபெற்றனர். இந்திய விஞ்ஞானிகள் பிறநாட்டு செயற்கைக்கோள் திட்டங்களில் பங்கெடுத்த காலம் போய், வளர்ந்த நாடுகளும் நம்மோடு பணியாற்றுகிற நிலையில் நமது அர்ப்பணிப்பும், ஆராய்ச்சியும், அயராத உழைப்பும் இருந்தது.

அதனால் முதல்முறையிலேயே வெற்றிகரமாக நிலவுக்கு சந்திரயான்-1 செயற்கைக்கோளை செலுத்தினோம். அதற்குப் பிறகு நானும் வெளிச்சத்திற்கு வந்தேன். 1982ல் இஸ்ரோ பணியில் சேர்ந்தேன். மயில்சாமி அண்ணாதுரை என்கிற பெயரோ, நபரோ குறிப்பிட்ட வட்டத்தைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. 2007ல் நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பிய பிறகு என் பெயர் பலரது கவனத்திற்கு வந்தது. 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்த பலன் என்னை பல உயரங்களுக்குக் கொண்டு சேர்த்தது. பல நாடுகளிலிருந்து வாழ்த்துகள் வந்தன. ‘நான் இந்தியன் என்பதற்காக பெருமைப்பட வைத்துள்ளீர்கள்’ என்று பிரதமர் வாழ்த்துத் தந்தி அனுப்பினார். கர்நாடகாவில், கன்னட மக்களுக்கான பாரம்பரிய விழா ஒரு ஸ்டேடியத்தில் நடந்தது. அந்த விழாவுக்கு கர்நாடக முதல்வரிட மிருந்து அழைப்பு வந்து, ஆயிரக்கணக்கான கன்னட மக்கள் என்னை கைதட்டி கௌரவித்தார்கள். தமிழர் என்பதைக் கடந்து இந்தியர் என்கிற உணர்வின் பெருமிதத்தை உணர்ந்த தருணம் அது.
மீடியாவின் வெளிச்சம் முழுவதுமாக என்மேல் விழுந்தது. நான் படித்த கல்லூரியில் விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்கள். முதலில் நான் படித்த அரசுப் பள்ளிக்குப் போய்விட்டு, பிறகுதான் படித்த கல்லூரிக்குப் போனேன். காலில் செருப்பு அணியவும் வசதி இல்லாத ஏழை மாணவர்களிடம், ‘உங்களில் ஒருத்தனாய் இருந்தவன்தான் நான். என்னால் உயரம் தொட முடிந்தது. உங்களாலும் முடியும்’ என்று பேசிய நிகழ்வுதான் நான் சமூகத்திற்குப் பயனுள்ள மனிதனாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது.’’ கனிவும் பணிவும் மயில்சாமி அண்ணாதுரையை இன்னும் உயர்த்தி காட்டுகின்றன.
(திருப்பங்கள் தொடரும்...)