‘‘காலேஜ் படிப்பெல்லாம் படிச்சுட்டு பழைய பேப்பர் வாங்குற கடையில வந்து உக்கார்றியே... பைத்தியமாடா நீ? போயி ஏதாவது அரசாங்க வேலை வாங்கி ஒழுங்கா பிழைக்கப் பாரு...’’ன்னு உறவுக்காரங்களே திட்டுனாங்க. அப்பாவும் கொஞ்சம் யோசிக்கத்தான் செஞ்சாரு. ஆனா நான் உறுதியா இருந்தேன். இன்னொருத்தர்கிட்ட, அவரோட எண்ணத்துக்குத் தகுந்த மாதிரி வேலை செய்யக்கூடாது. நாமளே பத்து பேருக்கு வேலை கொடுக்கணும். பழைய பேப்பர் வாங்குற தொழிலை நிச்சயம் பெரிய அளவுக்குக் கொண்டு போக முடியும்ங்கிற நம்பிக்கை இருந்துச்சு. தைரியமா இறங்கிட்டேன்...’’ என்கிற சந்தானகிருஷ்ணன், வெறும் 200 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய பழையபேப்பர் வியாபாரத்தை நவீன இயந்திரங்களின் துணையோடு கார்ப்பரேட்மயம் ஆக்கியவர். இந்தியா முழுதுமுள்ள பேப்பர் மில்களுக்கு சப்ளை செய்யும் அவரைச் சார்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று வாழ்கிறார்கள்.
‘‘முதல்ல எந்தத் தொழிலையும் கேவலமாப் பாக்குற மனோபாவம் மாறணும். நெளிவு சுளிவுகளைக் கத்துக்கிட்டு ஆர்வத்தோட செஞ்சா, எல்லாத் தொழிலுமே லாபம் தரும். எல்லாரும் இதை ‘வேஸ்ட் பேப்பர் தொழில்’னு சொல்வாங்க. எனக்கு அந்த வார்த்தை பிடிக்காது. ‘வேஸ்ட்டான பொருள்’னு இங்கே எதுவும் இல்லை. ஒருத்தருக்கு உதவாதது இன்னொருத்தருக்கு உதவும்...’’ என்கிற சந்தானகிருஷ்ணனின் சொந்த ஊர் தூத்துக்குடியை அடுத்த சுண்டான்கோட்டை. போலீஸ் குடும்பம். தாத்தா ஏ.சி.ஆதித்தன் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். அப்பா ராமசாமி கியூ பிராஞ்ச்சில் டி.எஸ்.பியாக இருந்தவர். தாய் மாமா சரவணப்பெருமாள் ஐ.ஐ¤.
‘‘அம்மா பேரு சொர்ணலட்சுமி. சாத்தான்குளம் யூனியன் சேர்மனா இருந்தவங்க. மொத்தம் ஏழு பிள்ளைங்க. நான்தான் மூத்தவன். எல்லாரையும் நல்லாப் படிக்க வச்சாங்க. என் தம்பி ஆனந்தகிருஷ்ணன் மட்டும் படிப்பை இடையில விட்டுட்டாரு. அவருக்கு ஒரு தொழில் அமைச்சுக் கொடுக்கணுமேன்னு அப்பாவுக்குக் கவலை. அப்போ இருந்த நிலையில பெரிசா எதுவும் செய்ய முடியல. மந்தைவெளியில பழைய பேப்பர் வாங்குற கடையைத் தொடங்குனோம்.

அப்போ நான் கல்லூரியில படிச்சுக்கிட்டிருந்தேன். கல்லூரி விட்டதும் கடைக்குப் போயிடுவேன். கோணில குப்பை, பேப்பர் சேகரிக்கிறவங்கதான் கஸ்டமர்கள். அவங்ககிட்ட வாங்கி, வண்ணாரப்பேட்டையில இருந்த வியாபாரிகளுக்கு மாட்டு வண்டியில அனுப்பி வைப்போம். ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
குடும்பத்துல பலரும் போலீஸ்ல இருந்ததால எனக்கும் போலீசாகணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, ‘வர்றதா இருந்தா கான்ஸ்டபிளா வராதே... ஐபிஎஸ் பாஸ் பண்ணிட்டு வா. இல்லைன்னா வேற ஏதாவது தொழிலைப் பாரு’ன்னு மாமா உறுதியா சொல்லிட்டார். ஆனா நமக்கு ஐ.பி.எஸ். போகிற அளவுக்கு படிப்பு ஏறல. தட்டுத் தடுமாறி டிகிரி முடிச்சுட்டேன். அரசாங்க வேலைக்கான வாய்ப்பும் வந்துச்சு. ஆனா, சவாலே இல்லாத ஒரு வேலையில ஒட்டிக்கிட்டு வாழ்க்கையை ஓட்டுறதுல எனக்கு விருப்பமில்லை. பழைய பேப்பர் தொழிலையே பெரிசா செய்யலாமேன்னு யோசிச்சேன்.
செங்கல்பட்டுல பேப்பர் ஷீட் ரெடி பண்ற ஒரு பேக்டரி திறந்தாங்க. அவங்ககிட்ட போய் பேசினேன். வழக்கமாக விக்கிறதை விட ஒரு ரூபா கூடுதலா கிடைச்சுச்சு. தேவை நிறைய இருந்ததால, தம்பியை சென்னையில விட்டுட்டு நான் திருப்பதி, சித்தூர்னு கடைகளைத் திறந்தேன்.
நம்மூர் மாதிரி அங்கே யாரும் காகிதம் சேகரிக்கிறதில்லை. இரும்பு, பிளாஸ்டிக் மட்டும்தான். சைக்கிள்ல பத்து, இருபது கோணியை எடுத்துக்கிட்டு கிளம்புவேன். குப்பை சேகரிக்கிறவங்களைத் தேடிப் பிடிச்சு ஆளுக்கொரு கோணியைக் குடுத்து பேப்பர் சேகரிக்கச் சொல்லுவேன். பல பேர் முன்வந்தாங்க. வழக்கமா கொள்முதல் பண்ற பேப்பரை பேக் பண்ணி பேப்பர் ஷீட் கம்பெனிக்கு அனுப்பிடுவோம். கொள்முதல் அதிகமானதால, பேப்பரை தரம் பிரிச்சு அனுப்பலாமேன்னு தோணுச்சு. தனியா ஆள் போட்டு தரம், நிறமெல்லாம் பிரிச்சு அனுப்புனோம். ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு விலை கிடைச்சுச்சு. வழக்கத்தை விட லாபம் கூடுதலாச்சு.
முப்பது வருஷத்துக்கு முன்னாடி அட்டைப் பெட்டி பேக்கிங் அறிமுகமாச்சு. அதே தருணத்தில பேப்பர் மில்களும் நிறைய வந்துச்சு. பேப்பர்களை விட அட்டைப் பெட்டிகளுக்கு நல்ல விலை கிடைச்சுச்சு. அதனால நாங்களும் அட்டைப் பெட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். எங்களைக் கேள்விப்பட்டு வெளி மாநிலங்கள்ல இருந்தெல்லாம் வந்து ஆர்டர் கொடுத்தாங்க. தொழில் மளமளன்னு அடுத்த கட்டத்துக்குப் போயிடுச்சு...’’ - பூரிப்பாகப் பேசுகிறார் சந்தானகிருஷ்ணன்.

குப்பை கிடங்குகளில் சேகரிப்பவர்கள் தவிர, 200க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சந்தானகிருஷ்ணனிடம் விற்பனை செய்தார்கள். ‘‘தொழில்ல எப்பவும் அகலக்கால் வைக்கக்கூடாது. எந்த அளவுக்கு செலவைக் குறைக்கிறோமோ, அந்த அளவுக்கு லாபம். சாதாரணமா காலால மிதிச்சுக் கட்டி லோடு ஏத்தினா ஒரு வண்டியில 4 டன் ஏத்தலாம்; அதுவே ஒரு மெஷினை வச்சு இன்னும் டைட்டா கட்டினா 8 டன்னுக்கும் மேல ஏத்தலாம். வாகனச்செலவு பாதிக்குப் பாதி மிச்சமாகும். அதனால, ஒண்ணேகால் லட்ச ரூபாய் முதலீடு செஞ்சு ஒரு ஹைட்ராலிக் பேக்கிங் மெஷின் வாங்கினேன். கொஞ்சம் சில்லறை வியாபாரத்தைக் குறைச்சுக்கிட்டு அடையாறுலயும், திருமுடிவாக்கத்திலயும் ஹைட்ராலிக் மெஷின்களைப் போட்டு தொழிலை விரிவுபடுத்தினேன்...’’ - தன் வெற்றிக்கதையை வார்த்தைச் சித்திரமாக காட்சிப்படுத்துகிறார் சந்தானகிருஷ்ணன்.
சந்தானகிருஷ்ணனின் மனைவி மகிளா. மகள் ஆனந்தி மருத்துவர். மகன் ஆனந்தகணேஷ் லண்டனில் எம்.பி.ஏ இண்டர் நேஷனல் பிசினஸ் முடித்தவர். தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்கி விட்டார். ‘‘மகன் தொழில்நுட்பரீதியா நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தான். சீனாவில இருந்து 200 டன் கெபாசிட்டி உள்ள ஆட்டோமேடிக் ஹைட்ராலிக் பிரஸ்ஸிங் மெஷினை வரவழைச்சோம். பி.எம்.டபிள்யூ, ஹூண்டாய் மாதிரி பல சர்வதேச நிறுவனங்களோட ஒப்பந்தம் போட்டு, அங்கே வர்ற அட்டைப்பெட்டிகள், கழிவுப்பொருட்களை வாங்குறோம். 2 பேரோட தொடங்கின இந்த நிறுவனத்தில இன்னைக்கு 200 பேர் வேலை செய்யறாங்க. ஏகப்பட்ட நிறுவனங்கள், வியாபாரிகள் எங்களுக்கு கஸ்டமரா இருக்காங்க. 20க்கும் மேற்பட்ட பேப்பர் மில்களுக்கு சப்ளை செய்யறோம். இப்ப வெளிநாடுகள்ல கொள்முதல் யூனிட்டை தொடங்குற முயற்சியில இறங்கியிருக்கோம்’’ என்று வியக்க வைக்கிறார் சந்தானகிருஷ்ணன். ‘பழைய பேப்பர்தானே...’ என்று இளக்காரமாகக் கடந்து போகிற ஒரு தொழிலை நேர்த்தியான திட்டமிடலால் பெரு வணிகமாக்கி சாதித்திருக்கிறார் சந்தானகிருஷ்ணன். இளைய தலைமுறைக்கு இவரது வெற்றி, ஒரு பாடம்.
படங்கள்: ஏ.டி. தமிழ்வாணன்