பயங்கர மியூசிக் பின்னணியில் பாய்ந்து பாய்ந்து சினிமா ஹீரோக்கள் சண்டை போடக் காரணமாக இருப்பவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள். ஒல்லிப்பிச்சான் ஹீரோ ஓங்கி அடித்தால்கூட, படு குண்டு ஜிம் பாய் பக்கத்து தெருவில் போய்விழும் லேட்டஸ்ட் டெக்னாலஜி இவர்களின் கண்டுபிடிப்பே! இப்படிப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்கள் நிஜத்தில் சண்டை போட்டிருக்கிறார்களா?
தளபதி தினேஷ்எனக்கு 20 வயசு இருக்கும்போது ஓட்டேரி ஏரியாவில் குடியிருந்தோம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சண்டை பார்க்காத நாளும் இல்லை; போடாத நாளும் இல்லை. எங்க ஓட்டேரி பசங்களுக்கும், பக்கத்து ஏரியா பசங்களுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். சண்டைன்னு ஆரம்பிச்சா... அந்தப் பக்கம் ஐம்பது பேரு, இந்தப் பக்கம் ஐம்பது பேருன்னு ஏதோ போர் நடக்கிற மாதிரி இருக்கும். அந்த சமயம் ஊரே கூடிடும். சண்டைக்கு முன்னாடி போற முக்கியமான பத்து பேரில் நானும் ஒருத்தனா இருப்பேன். கராத்தேவில் பிளாக் பெல்ட், மாநில அளவிலான பாடி பில்டிங் போட்டியில் இரண்டாவதாக வந்தவன் என்பதால் ஐயாவுக்கு கொஞ்சம் மதிப்பு.
கையில கத்தி, கம்புன்னு ஒரு பக்கம் ஆயுதங்களோட கூட்டம் வந்தா... இன்னொரு பக்கம் கம்பு, கற்களை வீசித் தாக்கும் ஒரு கூட்டம். இதில என்ன காமெடின்னா, எந்த கோஷ்டிக்கு வெற்றி, யாருக்குத் தோல்வின்னு க்ளைமாக்ஸ் தெரியும் முன்பே போலீஸ் வந்து எல்லாரையும் வண்டில அள்ளிப் போட்டு போயிடும். அப்புறம் என்ன... கட்சிக்காரங்க சிபாரிசுல வெளில வந்து, அடுத்த சில நாட்கள்லயே மறுபடியும் சேட்டையை ஆரம்பிச்சிடுவோம்!
ஜாகுவார் தங்கம்திருச்சியில் தட்சிணாமூர்த்தி என்கிற மாஸ்டரிடம் சண்டைக் கலை கற்றுக்கொண்டேன். பாலக்கரை அருகே காடு மாதிரி ஒரு ஏரியா இருக்கும். தினமும் பயிற்சி முடித்து அந்த வழியாகத்தான் வருவேன். ஒருநாள் முரடர்கள் மாதிரி இருந்த நாலு பேர் என்னை வழிமறித்துத் தாக்கினார்கள். நான் திருப்பி அடிக்காமல் தப்பித்து வந்தேன். என்னைத் தாக்கிய ஆட்களை என் குருநாதர்தான் அனுப்பி வைத்தார் என்பது மறுநாள்தான் தெரிந்தது. என்னை சோதித்துப் பார்ப்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்.
இது நடந்து கொஞ்ச நாள் கழித்து, பொன்மலைப்பட்டி ஏரியாவில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். அப்போதும் என்னை ஐந்து பேர் சூழ்ந்து கொண்டு சைக்கிளை பறிக்க முயன்றனர். 'ஆஹா... குருநாதர் நம்ம திறமையைப் பரிசோதிக்க ஆள் அனுப்பி வச்சிருக்கார் போல. இந்த முறை விடக்கூடாது’ன்னு நினைச்சு அவர்களைப் பின்னிப் பெடலெடுத்தேன். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த போலீஸ் அவர்களைப் பிடித்து விசாரித்தபோதுதான் தெரிந்தது... அவர்கள் இரும்புத் திருடர்கள் என்பது! ‘ரொம்ப நாளா டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தவர்களை பிடித்துக் கொடுத்ததற்கு நன்றி தம்பி’ என போலீஸ்காரர்கள் பாராட்டியதை மறக்கவே முடியாது.
பீட்டர் ஹெய்ன்7 வயசிலேயே என் தந்தையிடம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டேன். அப்போ ரொம்ப முரட்டுத்தனமா இருப்பேன். ஒருமுறை போலீஸ் துரத்திக்கொண்டு வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்துக்கொடுத்தேன். அப்போ எனக்கு 10 வயசுதான். நான் பிடித்துக்கொடுத்த அந்த இருவரும் வழிப்பறிக் கொள்ளையர்கள் என்பதால் போலீஸ் என்னைப் பாராட்டியது. ஒருமுறை பெசன்ட் நகருக்கு மனைவி, குழந்தைகளுடன் சென்றிருந்தேன். அப்போது ரவுடிப் பசங்க சிலர் என் மனைவியை கிண்டல் செய்ய, செம டென்ஷன் ஆகிட்டேன். பொதுவா மார்ஷியல் கலையை சாதாரண சண்டைக்கு பயன்படுத்தக் கூடாது. ஆனால் என் மனைவியை கிண்டல் செய்த கோபத்தில் நான் அந்தக் கலையைப் பயன்படுத்தி அவர்களைத் தாக்க, அடிவாங்கியவர்கள் சீரியஸ் கண்டிஷனில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்கள்.
அதேபோல யாரென்றே தெரியாத சில பேர் என் பைக்கிலும், என் நண்பர்கள் பைக்கிலும் உட்கார்ந்துகொண்டு கீழே இறங்க மறுத்தபோது, வண்டியில் உட்கார்ந்துகொண்டே பின்புறமாக காலைத் தூக்கி உதைத்தேன். உடனே அந்த கோஷ்டி 20 பேரை அழைத்துக்கொண்டு சண்டைக்கு வந்துவிட... ஒத்தை ஆளாக நின்று அத்தனை பேரையும் அடித்தேன். டீக்கடையில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் சட்டியை தூக்கி வீசி சிலரை ஓட விட்டேன். சினிமா சண்டை போல இருந்ததால் வேடிக்கை பார்த்தவர்களில் சிலர் கை தட்டிப் பாராட்டினர். எங்காவது அநியாயம் நடந்தால் உடனே களத்தில் இறங்கி கை வைப்பதுதான் என் பழக்கம்.
விஸ்வரூபம் டி.ரமேஷ்என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் என்றாலும், உறுதியான இந்த உடம்புக்குள்ள இருக்கிற உள்ளம் சில நேரங்களில் பஞ்சு பஞ்சா பிஞ்சு போயிடும் சார். கே.எஸ்.ரவிகுமாரிடம் பாலமுருகன்னு ஒரு உதவி இயக்குநர் இருந்தார். ஒருநாள் பயங்கர காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. ஷூட்டிங் முடிச்சிட்டு அசோக் நகர் வழியா வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தேன். எனக்கு முன்னாடி டூ வீலரில் பாலமுருகன் போனார். அந்த நேரம் பார்த்து ஒரு மரம் சாய்ந்து அவர் மேல விழ, அதே இடத்தில் நசுங்கி இறந்தார். அதேபோல ‘இந்தியன்’ படத்தில் ஹெலிகாப்டர் பக்கத்தில் பைக்கில் பறப்பது மாதிரியான ஒரு காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். மதி என்கிற ஸ்டன்ட் நடிகர் அந்தக் காட்சிக்காக பைக்கில் பறந்தபோது, அவரது தலையில் ஹெலிகாப்டர் உரசி, கீழே விழுந்து இறந்தார். என் கண் முன்னாடி நடந்த இந்த சம்பவங்களை இப்ப நினைச்சுப் பார்த்தாலும் உசிரே வலிக்குது!
சூப்பர் சுப்பராயன்பத்திரிகை, டி.விக்கு பேட்டி கொடுத்தே ரொம்ப நாளாச்சு பிரதர். யார் யாருக்கோ ‘கலைமாமணி’ கொடுக்கிறாங்க... ஸ்டன்ட் மாஸ்டர்கள் யாருக்காவது கொடுத்திருக்காங்களா? சரி... இதுக்காக ஒரு சண்டை போடலாம்னு பார்த்தா, தேவாரம், திருவாசகம், திருக்குறள்னு நான் படிச்ச விஷயங்கள் என்னைப் பக்குவப்படுத்தி நிறுத்தி வைக்குது.
தேவாரம் பற்றித் தெரியுமா? ‘தே’ என்றால் அன்பு; ஆரம் என்றால் மாலை. ஆக அன்பினால் சூழப்பட்ட மாலைதான் தேவாரம். அப்புறம் 7ஆம் அறிவு பற்றித் தெரியுமா? சூர்யா நடிச்ச படம்னு சொல்லாதீங்க. உண்மையான 7ஆம் அறிவு நம்ம திருவள்ளுவர்தான். முதல்ல நாலு சீரும் அடுத்து மூணு சீரும்னு, மொத்தம் 7 சீராக அமைந்துள்ளது குறள். மொத்த திருக்குறள்கள் 1330. கூட்டிப் பாருங்க... 7 வருதா? இப்படிப் பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது எதுக்கு சண்டை போடணும்?
தவசிராஜ்இந்திப் படம் ஒன்றிற்காக மும்பை சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது... 20 நாட்கள் ஷூட்டிங் முடிச்சிட்டு சென்னை திரும்புவதற்காக ரயில் நிலையத்திற்கு காரில் வந்துகொண்டிருந்தோம். சோர்வாக இருந்ததால் தூங்கிவிட்டேன். திடீரென கார் டிரைவரும் கூட வந்த சிலரும் அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். அவங்க முகமெல்லாம் ரத்தம். ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட தகராறில், முன்னே செல்லும் காரில் இருந்த சிலர் இவர்களை அடித்துத் துவைத்ததாகச் சொன்னார்கள்.
அவ்வளவுதான்... எனக்குக் கோபம் வந்துவிட்டது. அந்தக் காரை ஓவர்டேக் செய்து நிறுத்தினேன். அவர்களை தனி ஆளாக அடித்து நொறுக்கினேன். ஆனாலும் அவர்கள் இன்னும் சிலரை வரவழைத்து எங்களைத் துரத்தினார்கள். சந்து பொந்துகளிலெல்லாம் காரை ஓட்டிச்சென்று டிரைவர் யூனியனில் நிறுத்தினோம். அதன் பிறகு நான்கு கார்களில் யூனியன் ஆட்கள் வந்து, என்னை பாதுகாப்பாக ரயில் ஏற்றிவிட்டார்கள்.
சுப்ரீம் சுந்தர்2002ம் வருஷம் புத்தாண்டு நள்ளிரவில் பெசன்ட் நகர் பீச் போயிருந்தோம். அப்போ பைக்கில் வந்த சில ரவுடிகள், கீழே விழுகிற மாதிரி விழுந்து, உதவி செய்ய வந்தவர்களிடம் செயின் பறித்துக்கொண்டு ஓடினார்கள். அவர்களைப் பிடித்து நானும் என் நண்பரும் அடித்தபோது, ஒளிந்திருந்த கும்பல் ஒன்று எங்கள் மீது கற்களை வீசித் தாக்கியது. நாங்கள் அசரவில்லை. அவர்களையும் ரவுண்டு கட்டி அடித்து போலீஸில் பிடித்துக்கொடுத்தோம்.
99ல் தி.நகர் நாகேஷ் தியேட்டர் எதிரே நேருக்கு நேர் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் இறந்துவிட்டனர். காருக்குள் காயத்துடன் ஐந்தாறு சிறுவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினோம்.
- அமலன் படங்கள்: ஆர்.சி.எஸ்