உற்சாகமா நடக்குது உயிரணு விற்பனை!





பஞ்சாபி பையன் விக்கி, பாக்கெட் மணிக்காக உயிரணு தானம் செய்கிறான். ஒரு கட்டத்தில் அதுவே தொழிலாகி, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. விக்கிக்கு திருமணம் ஆகிறது. அவன் உயிரணு விற்பவன் என்கிற உண்மை தெரியவர... விலகிப் போகிறாள் மனைவி. இவர்களை இணைத்து வைக்க முயற்சிக்கும் டாக்டர், விக்கியின் உயிரணு மூலம் பிறந்த அத்தனை குழந்தைகளையும் ஓரிடத்திற்கு வரவழைக்கிறார். தன் கணவனின் சாயலில் இருக்கும் குழந்தைகளையும், அந்தக் குழந்தைகளின் பெற்றோரது மகிழ்ச்சியையும் பார்த்து பிரமிக்கிறாள் விக்கியின் மனைவி. உயிரணு தானத்தின் மகிமை புரிந்து, கணவனை கட்டிக்கொள்கிறாள். - பாலிவுட்டில் சக்கை போடு போடும் ‘விக்கி டோனர்’ படத்தின் கதை இதுதான். விரைவில் தமிழுக்கும் வரப்போகிறது இந்தப்படம். அதுவல்ல செய்தி. புனிதமான கொடையாகக் கருதப்படும் உயிரணு தானம், வியாபாரமாக தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். ஐ.ஐ.டியில் படிப்பவர்கள், பொறியியல், மருத்துவம் போன்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் உயிரணுக்களுக்கு பெரும் கிராக்கியாம். ‘உயிரணு தானம் செய்யத் தயார்’ என்று பயோடேட்டா, புகைப்படத்தோடு ஏராளமான தமிழக இளைஞர்கள் இணையதளங்களில் விளம்பரமும் செய்கிறார்கள்.

உலகில் சராசரியாக 10 சதவீத தம்பதிகள் குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கிறார்கள். உடல்ரீதியான பிரச்னைகள், உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை என இதற்குப் பல காரணங்கள். மருத்துவரீதியாக, குழந்தைப்பேறில் சிக்கல் எழுவதற்கு 2 காரணங்கள் பிரதானம். பெண்ணின் சினைப்பையில் ஏற்படும் கோளாறால் கருமுட்டை உருவாகாதது; ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது. இது சார்ந்து பல கிளைக்காரணங்களும் உண்டு. மனைவிக்கு பிரச்னை என்றால், மற்றொரு பெண்ணிடம் கருமுட்டை தானம்பெற்று, அதில் கணவனின் உயிரணுவைப் பொருத்தி மனைவியின் கருப்பையில் வைத்து குழந்தை பிறக்கச் செய்யலாம். கணவனிடம் பிரச்னை என்றால், மற்றொரு ஆணிடம் உயிரணு தானம் பெற்று மனைவியின் கருமுட்டையில் பொருத்துவார்கள். திருமணமாகாத பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கூட உயிரணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அங்கு முன்னேற்றம் வந்துவிட்டது.  ஆணாதிக்கம் மிகுந்த இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உயிரணு தானம் முதலில் அங்கீகரிக்கப்படவில்லை. காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது. இன்று பல நூறு தம்பதிகள் உயிரணு தானம் மூலம் குழந்தை பெறுகிறார்கள். சென்னையில் பல மருத்துவமனைகளில் உயிரணு, கருமுட்டை வங்கிகள் செயல்படுகின்றன. கிராமப்புறத் தம்பதிகள் கூட உயிரணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். ‘உயர்கல்வி பயிலும் புத்திசாலி மாணவர்களின் உயிரணுக்கள் மூலம் குழந்தைபெற்றால் அவர்களைப் போலவே அறிவார்ந்த குழந்தை பிறக்கும்’ என்று நம்பப்படுகிறது. ‘‘இதனால் பல மாணவ, மாணவிகள் இதை பகுதி நேரத் தொழிலாகச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்’’ என்று பகீர் கிளப்புகிறார்கள் மருத்துவர்கள்.


‘‘மகப்பேறு மருத்துவத் துறையில் இந்தியாதான் நம்பர் 1. இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வந்து குழந்தை பெற்றுச் செல்லும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம். தேவை அதிகமாக இருப்பதால். புனிதமான தானமாகக் கருதப்பட்ட உயிரணு தானம் இப்போது தொழிலாக மாறிவிட்டது. கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் சில மருத்துவமனைகளின் ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கிறார்கள். ஒரு கருமுட்டைக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது. ஒருமுறை உயிரணு தானம் செய்தால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கொடுக்கிறார்கள். அறிவு, அழகு, ஆரோக்கியம், உடல் மற்றும் விழிகளின் நிறம் ஆகியவற்றுக்குத் தகுந்தவாறு விலை கிடைக்கும். இதற்கென பல இணையதளங்கள் இருக்கின்றன. சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, தஞ்சாவூர் போன்ற நகரங்களில் உள்ளவர்கள் கூட தங்கள் புகைப்படம், பயோடேட்டாவை பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்பு கொள்ளவே கணிசமாகக் கட்டணம் செலுத்த வேண்டும்...’’ என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர்.

தென்னிந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபியை உருவாக்கியவரும், செயற்கை கருவூட்டல் முறையில் பல நூறு குழந்தைகளை உருவாக்கியவருமான டாக்டர் கமலா செல்வராஜிடம் பேசினோம்.

‘‘குழந்தை இல்லாத தம்பதிகள் நம் சமூகத்தில் அனுபவிக்கும் துயரத்துக்கு அளவில்லை. அவர்களின் துயரத்தைப் போக்குவது புண்ணிய காரியம். உயிரணு தானம் செய்ய தாய்மை உணர்வு வேண்டும். அதை வணிகமாக்கக்கூடாது. சில மாதங்களுக்கு முன்பு, என்னிடம் வந்த ஒரு நபர், ‘தொடர்ந்து உயிரணு தானம் தருகிறேன், 1 லட்சம் கொடுங்கள்’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது. திட்டி அனுப்பிவிட்டேன். நாங்கள் உயிரணு தானம் கொடுப்பவர்களுக்கு பணம் தருவதில்லை. பயன்படுத்துபவர்களிடமும் பணம் கேட்பதில்லை. ரத்தக்கொதிப்பு, மாலைக்கண், ஹீமோஃபீலியா போன்ற மரபு நோய்கள், ஹெச்ஐவி, சர்க்கரை, பாலியல் நோய்கள் இல்லாதவர்கள் உயிரணு தானம் செய்யலாம். ஒருவர் ஒரு ஏரியாவில் 3 அல்லது 4 முறை மட்டுமே தானம் செய்ய வேண்டும். ஒரே பகுதியில் தொடர்ந்து தானம் தருகிறபோது, அவரின் சாயலிலேயே குழந்தைகள் அங்கு நிறைய பிறக்க வாய்ப்புண்டு. அதனால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகலாம். உயிரணு எடுக்கப்பட்டு, 90 நாட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். அதன்பிறகே கருமுட்டையில் பொருத்துவோம். அதிலும் 90 நாள் கண்காணிப்பு உண்டு. ஒவ்வாத குழந்தைகள் உருவாகவும் வாய்ப்புண்டு. அப்படியிருந்தால் அதைக் கலைத்து விடுவோம். தகுதியான உயிரணுக்களை 5 ஆண்டுகள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். யாருடைய உயிரணு யாருக்குப் பொருத்தப்பட்டது என்பதைச் சொல்வது குற்றம்...’’ என்கிறார் கமலா செல்வராஜ்.

உயிரணு தானம் மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் தம் உண்மையான தந்தையைத் தேடி புறப்பட்டால்..? சுவாரசியமான இந்தக் கற்பனையை டாக்டர் நாராயண ரெட்டி முன் கேள்வியாக வைத்தோம். ‘‘குழந்தைப் பேறுக்கும், செக்ஸுக்கும் சம்பந்தம் இல்லை. செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத ஆணின் உயிரணுக்கள் கூட வீரியம் மிகுந்தவையாக இருக்கலாம். அவற்றை செயற்கையாக எடுத்து மனைவியின் கருமுட்டையில் பொருத்தி குழந்தை பெறலாம். இவ்வாறு இந்தியாவில் 5 சதவீதம் தம்பதிகள் குழந்தை பெறுகிறார்கள். 20 சதவீதம் தம்பதிகள், தங்கள் குடும்ப பரம்பரைக் குணங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக குடும்ப உறவுகளின் உயிரணுக்களையே பெறுகிறார்கள். அப்பாவின் சாயல் இல்லாமல் குழந்தை பிறப்பது ஒருவகையில் சங்கடம்தான்! யாருடைய உயிரணு யாருக்குப் பொருத்தப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சட்டப்படி உரிமை கோர முடியாது. என்றோ தானத்தின் மூலம் பிறந்த குழந்தை, பல வருடங்கள் கழித்துவந்து ‘அப்பா’ என அழைக்கும் ஆபத்து நேராது! இன்னொரு ஆணின் உயிரணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக தத்தெடுத்துக் கொள்ளலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. இன்னொருவரின் உயிரணு மூலம் பிறக்கும் குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் ஆண்களுக்கு இல்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் அது பிரச்னையை உருவாக்கும். இதையெல்லாம் யோசித்தே முடிவெடுக்க வேண்டும்’’ என்கிறார் நாராயண ரெட்டி. படைக்கும் தொழில் கடவுளின் கரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருக்கிறது.

600 பேருக்கு அப்பா?

1940 முதலே இங்கிலாந்தில் உயிரணு தானம் நடைமுறைக்கு வந்துவிட்டது. லண்டனைச் சேர்ந்த டாக்டர் பெர்டோல்டு வியஸ்னர் நடத்திய கருத்தரிப்பு மையத்தில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் இவரின் உயிரணுவின் மூலம் பிறந்தவை. தானம் செய்ய அதிக ஆண்கள் முன்வராததால், 25 ஆண்டுகள் அவரே நிறைய பேருக்குக் கொடுத்திருக்கிறார். இப்படிப் பிறந்த டேவிட் கோலான்ஸ் என்பவர் மரபணு ஆராய்ச்சி செய்து, ‘தன் சகோதரர்கள்’ பலரைத் தேடிக் கண்டு
பிடித்தார். ‘‘எங்கோ ஒரு தேசத்தில், யாருடைய வாரிசாகவோ வளரும் என் சகோதர, சகோதரிகளை சந்தித்தது பரவசமான அனுபவம்’’ என்கிறார் டேவிட்.


இந்தியாவில்...
‘அமெரிக்கன் ஃபெர்டிலிட்டி சொசைட்டி’ வகுத்திருக்கும் விதிமுறைகள்படியே இந்தியாவில் உயிரணு வங்கிகள் செயல்படுகின்றன. இங்கு உயிரணுக்களை திரவ நைட்ரஜன் டேங்கில் மைனஸ்196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும். எனவே செலவு அதிகமாகும்! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்திருக்கும் விதிமுறைகள்படி, 21 முதல் 45 வயதுள்ள ஆண்கள் தானம் செய்யலாம். பெரும்பாலும் திருமணம் ஆகாத இளைஞர்களே தானம் செய்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு தயக்கம் வந்துவிடுகிறது.  

நான்தான் அப்பா?
‘‘மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இளைய மகன் பிரின்ஸ் மைக்கேலின் உண்மையான தந்தை நான்தான்’’ என்று உரிமை கோரி வருகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மாட்பிடெஸ். 11 வருடங்களுக்கு முன் தான் அளித்த உயிரணு தானம் மூலமாகவே பிரின்ஸ் பிறந்தான் என்று கூறும் மாட், இருவரின் உருவ ஒற்றுமையை ஆதாரமாகச் சுட்டுகிறார். இது தொடர்பாக ஜாக்சனின் உறவுகள் வாய்திறக்க மறுக்க, மரபணு சோதனை நடத்துமாறு கோரி கோர்ட் உதவியை நாடியுள்ளார் மாட்.


இது பெரிய பிசினஸ்!
* உயிரணு விற்பனை அமெரிக்காவில் பெரிய பிசினஸ் ஆகியுள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரணு வங்கியான ‘கலிபோர்னியா க்ரையோபேங்க்’ உட்பட அங்கு 675 உயிரணு வங்கிகள் இருக்கின்றன.

* 60 நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து உயிரணு ஏற்றுமதி ஆகிறது. உயிரணு தான மருத்துவத்தில் 65 சதவீதத்தை அமெரிக்கா செய்கிறது. இதில் அமெரிக்கா சம்பாதிப்பது ஆண்டுக்கு 550 கோடி ரூபாய்.

* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் வசிப்பதால், அங்கு எந்த நாட்டவரின் உயிரணுவையும் தானமாகப் பெறமுடியும். ஒரு ஜப்பான் பெண், தங்கள் நாட்டவர் சாயலில் குழந்தை பெற விரும்பினால், அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவரின் உயிரணுவை அவருக்கு அனுப்பி வைப்பார்கள்.

* திருமணம் செய்யும்போது பெண் வீட்டார்கூட, மாப்பிள்ளையின் ஆரோக்கியம் பற்றி கேள்விகள் கேட்க முடிவதில்லை. அவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா, குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் வந்திருக்கிறதா என விசாரிக்க முடியாது. ஆனால் உயிரணு தானத்தில் அதுதான் முக்கியம். தானம் செய்ய வரும் ஒரு ஆணைப் பற்றியும், அவரது அப்பா, தாத்தா பற்றியும் பல கேள்விகளை எழுப்பி, திருப்தி அடைந்தபிறகே தானம் பெறுகிறார்கள்.

* ‘யாரிடமிருந்து தானம் பெறப்பட்ட உயிரணு பொருத்தப்படுகிறது என்பதை, தானம் பெறும் பெண்ணிடம் தெரிவிக்க வேண்டும்’ என பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் சட்டம் இருக்கிறது.

தானக் குழந்தைகள் சங்கம்!
‘யாருடைய உயிரணுமூலம் பிறந்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை குழந்தைகளுக்கு உள்ளது’ என்று சில அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இவை குழந்தைகளுக்கும் அவர்களின் உயிரணு அப்பாக்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தித் தருகின்றன. ‘டோனர் சிப்லிங் ரெஜிஸ்ட்ரி’ என்ற அமைப்பு இப்படி 31 நாடுகளில் 9 ஆயிரம் குழந்தைகளுக்கு அவர்களின் உயிரணு அப்பாக்களை அடையாளம் காட்டியிருக்கிறது. சொந்த அப்பாவுக்கும் உயிரணு அப்பாவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு உறவு கொண்டாடுவது இந்தக் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட மனச் சிக்கலை ஏற்படுத்துமோ தெரியவில்லை!
- வெ.நீலகண்டன்