வரலாறு காணாத விலையேற்றமும் பற்றாக்குறையும் கண்ணாமூச்சி காட்டி ஓய்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலையுயர்வு, நஷ்டம் என எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதற்கு காரணங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் கச்சா எண்ணெய்க்காக மட்டும் இந்தியா 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணியை இழக்கிறது. இதனால் இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைகிறது. ரூபாய் மதிப்பு இழக்கிறது. உள்நாட்டிலேயே மாற்று எரிபொருளை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தேசம் இருக்கிறது. விலையேற்றம், பற்றாக்குறை, பொருளாதார நலிவு... மூன்றுக்கும் தீர்வாக விஞ்ஞானிகள் முன்வைப்பது எத்தனால். கரும்பு, மக்காச்சோளம் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள். பிரேசிலும், அமெரிக்காவும் மெல்ல மெல்ல எத்தனாலுக்கு மாறிவிட்டன. பிறநாடுகளும் மாறி வருகின்றன. எத்தனால் பயன்படுத்தினால் பெட்ரோல் விலை பாதிக்கும் கீழாகக் குறைந்து விடும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் கரும்பு உற்பத்தியில் உலகில் 2ம் இடம் வகிக்கும் இந்தியாவில் அதற்கான ஏற்பாடுகள் ஏதுமில்லை.
‘‘எத்தனால் என்பது எத்தில் ஆல்கஹால். ஒருவகை எரி சாராயம். கரும்பில் சர்க்கரை எடுத்தபிறகு ‘மொலாசஸ்’ என்ற கழிவு மிஞ்சும். அதிலிருந்து எத்தனால் தயாரிக்கலாம். இதை தனியாகவோ, பெட்ரோலில் கலந்தோ வாகனங்களுக்குப் பயன்படுத்தலாம். அமெரிக்காவில் 85 சதவீதம் எத்தனாலும், 15 சதவீதம் பெட்ரோலும் கலந்து பயன்படுத்துகிறார்கள். பிரேசிலில் 25 சதவீதம் எத்தனால்; 75 சதவீதம் பெட்ரோல். கரும்பு உற்பத்தியில் முன்னணியில் இருப்பதால் நாமும் தாராளமாக எத்தனால் தயாரித்து பெட்ரோலுடன் கலந்து பயன் படுத்தலாம்’’ என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மைய பேராசிரியர் ஏ.ஜி.முருகேசன். கரும்பு மட்டுமின்றி ஆகாயத்தாமரை, சோளத்தட்டை, சோளக்கொம்பை போன்ற வீணாகும் விவசாயக் கழிவுகளிலிருந்தும் எத்தனால் தயாரிப்பது பற்றி இவர் ஆய்வுசெய்து வருகிறார்.
எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்திய முன்னோடி நாடு பிரேசில். உலகில் அதிகம் கரும்பு உற்பத்தி செய்யும் நாடு. கச்சா எண்ணெய் இறக்குமதியில் முன்னணி வகித்ததும் இந்நாடுதான். 25 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது விழித்துக்கொண்டார்கள். இன்று வருடத்துக்கு சுமார் 3 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்கிறார்கள். வெறும் 35 சதவீதமே கச்¢சா எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள். சந்தையில் ஏற்படும் எந்த ஏற்ற இறக்கமும் இவர்களைப் பாதிப்பதில்லை.
உலக எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவில் எத்தனால் தயாரிப்புக்காக பல ஆயிரம் ஏக்கர்களில் முப்போகம் மக்காச்சோளம் விளைகிறது. 1 லிட்டர் எத்தனாலுக்கு 6 ரூபாய் மானியம் வேறு தருகிறார்கள். பிரேசிலுக்கும் அமெரிக்காவுக்கும் சாத்தியப்பட்டது இந்தியாவுக்கு சாத்தியப்படுமா?

‘‘சரியானபடி எத்தனால் உற்பத்தி செய்தால் ஒரு சொட்டு பெட்ரோலைக்கூட இறக்குமதி செய்யத் தேவையிருக்காது’’ என்கிறார் தமிழக கள் இயக்கத் தலைவர் நல்லசாமி. ‘‘நாம் 80 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். விலையேற்றம், வரி எல்லாமே மக்கள் தலையில் தான் விழுகிறது. கரும்பை முழுக்க சர்க்கரைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். அதில் கிடைக்கும் ‘மொலாசஸ்’ கழிவுகள் அப்படியே மதுபானக் கம்பெனிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவில் 560 கரும்பு ஆலைகள் உள்ளன. பிரேசிலில் மாற்றியது போல இதில் பாதியை எத்தனால் ஆலைகளாக மாற்றவேண்டும். அதனால் சர்க்கரைத் தட்டுப்பாடு ஒன்றும் வராது. கரும்பு சாகுபடியை ஊக்குவித்தால் பிரச்னை தீர்ந்து விடும்’’ என்கிறார் நல்லசாமி.
இது சாத்தியமா..? 
மாற்று எரிபொருள் பற்றி நெடுங்காலமாக ஆய்வு செய்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஜெனடிக் துறை பேராசிரியர் குணசேகரனிடம் கேட்டோம். ‘‘நிச்சயம் சாத்தியம்தான். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவுக்கு எத்தனால்தான் மிகச் சிறந்த தீர்வு. இதில் இன்னொரு பெரிய லாபம் உண்டு. விலையைத் தீர்மானிப்பதில் அந்நிய நாடுகளின் தலையீடு இருக்காது. பெட்ரோலோடு ஒப்பிடும்போது இதன்விலை பாதிதான். விவசாயத்தையும் ஊக்கப்படுத்தும் என்பதால் இந்தியாவுக்கு எத்தனால் மிகச்சிறந்த தீர்வு’’ என்கிறார் குணசேகரன். தற்போது 1 லிட்டர் எத்தனாலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை 27 ரூபாய். 75 சதவீதம் எத்தனால் கலந்தால், 1 லிட்டர் பெட்ரோல் 40 முதல் 49 ரூபாய்க்கு விற்கலாம். அரசு மானியம், வரிக்குறைப்பு செய்தால் 25 ரூபாய்க்குக்கூட விற்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
அப்புறம் என்ன தயக்கம்? ‘‘அரசியல்தான் காரணம்’’ என்கிறார் நல்லசாமி. ‘‘மூன்றுவிதமான லாபிகள். ஒன்று பெட்ரோலியம் லாபி. எத்தனால் வந்துவிட்டால், இங்குள்ள பெரிய பெட்ரோலிய நிறுவனங்களுக்கு லாபம் போய்விடும். அடுத்து ‘லிக்கர் லாபி.’ இந்திய கரும்பு ஆலைகளை நம்பித்தான் மதுபான ஆலைகள் இயங்குகின்றன. கரும்பின் கழிவை எத்தனாலுக்குப் பயன்படுத்தினால் இவர்கள் பிழைப்பு பாதிக்கும். மூன்றாவது ‘இண்டஸ்ட்ரியல் லாபி.’ உணவு, டெக்ஸ்டைல், மருந்து என எல்லாத் துறைகளிலுமே ஆல்ஹகால் பயன்பாடு இருக்கிறது. எனவே இவர்கள் அனைவருமே எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதை எதிர்க்கிறார்கள். இந்த மூன்று துறைகளும்தான் இந்திய அரசியலைக் கட்டுப்படுத்துகின்றன. மக்கள்மேல் அக்கறை உள்ள அரசாங்கம், இதையெல்லாம் கடந்து உடனடியாக எத்தனால் தயாரிப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்’’ என்கிறார் நல்லசாமி. இந்த வருட இறுதிக்கும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயாகவும், டீசல் விலை 70 ரூபாயாகவும் உயர்த்தப்படலாம் என்கிறார்கள். மக்களை வதைக்காமல், எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெ.நீலகண்டன்