கருவாச்சி





‘‘ஏ கருவாச்சி... இங்க வாடி!’’ - கத்தினான் முருகேஷ்.‘‘கூப்பிட்டீங்களா?’’ என்றபடி ஈரக் கையை புடவையில் துடைத்த வண்ணம் அவசரமாக சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் காஞ்சனா.

‘‘ஏண்டி... கூப்பிட்டவுடனே வரமாட்டியா? அவ்வளவு திமிரா உனக்கு... இன்னும் அழகா, வெள்ளையா பொறந்திருந்தா என்ன ஆட்டம் போடுவே? சே... உன் முகத்தைப் பார்த்தாலே எரிச்சல் வருது. தொட்டா ஒட்டிக்கிற கறுப்பு. என் மீசை கலர்ல உன் உதடு. ஏண்டி இன்னும் நிற்கிற..? ஆபீசுக்கு டைம் ஆச்சு... போய் டிபன் எடுத்து வை!’’ - கத்தினான்.

வீட்டில் பார்த்து முடிவு செய்ததால் தாலி கட்டினாலும், முருகேஷிற்கு காஞ்சனா கறுப்பு என்பதால் வெறுப்பு. அந்த எரிச்சலைத்தான் ‘கருவாச்சி’ என்ற பட்டப் பெயர் மூலம் நிமிடத்துக்கு நிமிடம் காட்டினான்.

நாட்கள் நகர்ந்தன... முருகேஷிடம் ஒரு மாறுதல். இப்போதெல்லாம் அவளிடம் எரிந்து விழுவதில்லை.
‘‘காஞ்சனா...’’ - கூப்பிட்டான் முருகேஷ்.

‘‘என்னங்க..?’’ - ‘கருவாச்சி’ எனக் கத்தாமல், பெயர் சொல்லிக் கூப்பிட்ட ஆச்சரியத்துடன் வந்தாள் காஞ்சனா.

‘‘என்னை மன்னிச்சுடு காஞ்சனா. உன்னை கறுப்புன்னு சொல்லிக் காட்டினதுக்கு கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துட்டார். ‘லூக்கோடெர்மா’ன்னு டாக்டர் சொன்னாரு...’’ என்றவனின் உதடுகளில் வெளிர் நிறப் புள்ளிகள்.