வயசு!





''ஏங்க, நம்ம பையன் வினித் போக்கே சரியில்லைங்க. எப்பவும் செல்போனும் கையுமாவே இருக்கான். நைட் ஒரு மணி வரைக்கும் அவன் ரூம்ல லைட் எரியுது... எனக்கு என்னமோ அவன் செய்யறதெல்லாம் சரின்னு படலை!’’

‘‘விடு சந்திரா! இதெல்லாம் வயசுக் கோளாறுதான். போகப் போக அவனே புரிஞ்சுப்பான்...’’

‘‘நீங்க வேற... அவன் புரிஞ்சுக்கிறதுக்குள்ளே விபரீதமா ஏதாவது நடந்துடுமோன்னு பயமா இருக்குங்க!’’

‘‘அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது... கவலைப்படாதே! அவன் நம்ம பையன். நம்ம மனசு நோகற மாதிரி எதுவும் செய்ய மாட்டான். இந்த வயசுல அப்படித்தான் இருப்பான். விடு... நாமளும் இந்த வயசைத் தாண்டி வந்தவங்கதானே!’’

‘‘நம்ம காலத்துல நமக்கு பயமும் அதிகம், கட்டுப்பாடும் ஜாஸ்தி. இது ரெண்டுமே இந்தக் காலத்துப்பசங்ககிட்ட இல்ல. அதாங்க கவலையா இருக்கு...’’’

‘‘எனக்கு நம்பிக்கை இருக்கு... நீ கவலைப்படாதே! அவனோட லிமிட்ஸ் அவனுக்குத் தெரியும்’’
இவர்கள் பேசுவதை கதவுக்கு வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த வினித், ஓசைப் படாமல் நடந்து மாடியிலிருக்கும் தனது அறைக்குச் சென்றான்.

‘‘அவன் போயிட்டானா சந்திரா?’’
‘‘ஆமாங்க!’’

‘‘ஹும்! இனிமே அவன் நடவடிக்கைல மாற்றம் இருக்கும்னு நம்புவோம்; அவன் கிட்டே நேராச் சொன்னா, அதை ஏத்துக்கிற பக்குவம் அவனுக்கு இருக்காது. அதான் இப்படிப் பேசலாம்னு சொன்னேன்!’’