நியூஸ் வே





மீண்டும் பரபரப்பு வளையத்துக்குள் வந்திருக்கிறார் பூனம் பாண்டே. ‘‘கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண போஸ் கொடுப்பேன்’’ என்று பேட்டி கொடுத்து சர்ச்சைக்கு ஆளானவர் பூனம். இந்தியா வென்றதும், ‘‘வீரர்கள் முன்னால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன்’’ என்றவர், அதன்பின் தலைமறைவானார். இப்போது கொல்கத்தா அணி ஐ.பி.எல். கோப்பையை வென்றதும், தனது நிர்வாண போட்டோவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். ‘‘இது கிராபிக்ஸ் இல்லை. ஒரிஜினல் போட்டோதான்’’ என்பவர் சொல்லும் இன்னொரு விஷயம் சுவாரசியமானது. ‘‘நான் யாரை ஆதரிக்கிறேனோ, அந்த அணி ஜெயிக்கிறது!’’

பிரதமர் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது அன்னா ஹசாரே டீம். இந்த விவகாரத்தால் அந்த டீமுக்குள்ளேயே வெட்டு குத்து கலாட்டா நடப்பது ஒருபக்கம் இருக்க, அன்னாவை ஆதரித்த திரையுலகமும் இப்போது வேறு மூடில் இருக்கிறது. மனீஷ் குப்தா இயக்கும் ‘மெயின் நஹின் அன்னா’ படத்தில், அவரை கடுமையாகக் கிண்டல் செய்யும் காட்சிகள் இருக்கிறதாம். இப்போதே படம் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அன்னா ஆதரவாளர்கள்.

சிலருடன் நட்பு வைத்திருப்பதே சமயங்களில் பாதகமாகி விடுகிறது. நம்ம ஊர் நிலா, சொந்தப் பெயரான மீரா சோப்ரா என்ற அடையாளத்துடன் பாலிவுட்டில் வாய்ப்பு தேடி வருகிறார். விவேக் ஓபராய் ஹீரோவாக நடிக்கும் ‘ஷெர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். சும்மா இருக்காமல், ‘‘சல்மான் கான் எனக்கு நெருங்கிய நண்பர்’’ என நிலா பேட்டி கொடுத்தார். சல்மானுக்கும் விவேக்குக்கும் ஏற்கனவே வாய்க்கால் தகராறு. இந்த ஒரு பேட்டியால் படத்திலிருந்தே தூக்கப்பட்டுவிட்டார் நிலா.

தான் கதாநாயகியாக நடித்த படங்களில்கூட பாடல் காட்சிகளில் ஆடிப் பழக்கமில்லாத பத்மப்ரியா, ‘பேச்சுலர் பார்ட்டி’ என்ற மலையாளப் படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு அயிட்டம் நம்பர் ஆடியிருக்கிறார். ‘‘ஒரு பாட்டு முழுக்க டான்ஸ் ஆடறதும் புது அனுபவமா இருக்கு’’ என்று அதை ரசிக்கவும் செய்கிறார் பத்து.

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு போக முடியாத வருத்தத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அவர் இசையமைத்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ இந்திப் படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது. விசா குழப்பத்தால் பிரகாஷ் போக முடியவில்லை. இருந்தாலும் அவரது இசை அங்கு ஒலித்ததில் ரொம்பவே சந்தோஷமாம்!