எல்லாமே மிதக்குது!





படிப்பு என்னும் பெயரில் பளு தூக்கும் போட்டி நடத்தும் நடைமுறைக்கு முப்பருவத் தேர்வு முறைதான் முற்றுப்புள்ளி. ‘புத்தகங்களே... கவனமாய் இருங்கள். குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்!’ என்ற கவலைக் கவிதைகளுக்கு இனி அவசியம் இருக்காது!
- ஈ.விஷால், புதுச்சேரி.

ஒழுங்கீனங்களின் உறைவிடமாகவும் நூறு சதவீதம் வியாபாரமாகவும் மாறிவிட்ட ஐ.பி.எல் போட்டிகள் நிச்சயம் சாபமே! தயக்கமின்றி தடை செய்ய வேண்டியது அவசரமான அவசியம்!
- எம்.சம்பத், கரூர்.

செல்போனில் நயம்பட பேசாத நான்சென்ஸ் பார்ட்டிகளை நார்நாராகக் கிழித்துவிட்டார் ஆல்தோட்ட பூபதி. அப்படியே, தொள்ளாயிரம் ரூபா செல்போனுக்கு தோல் பவுச் வச்சுக்கிட்டு திரியிறவங்களை டார்கெட் பண்ணுப்பா பூபதி!
- எம்.ஆர்.அனுஷா, பெங்களூரு.

‘மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு’... பத்து கிராமங்களின் பாசப் பயணத்தை கண்முன் காட்டி, பழமையின் இனிமையை மீண்டும் உணர வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; இராம.கண்ணன், திருநெல்வேலி-2.

நரிக்குறவர் இனத்தில் பிறந்து, அச்சமூகத்தின் முதல் பொறியியல் பட்டதாரியான ரஜினி, ஒரு நிஜ உலக சூப்பர் ஸ்டார்தான். நரிக் குறவர் குழந்தைகளுக்கான கல்வி மையம் தொடங்கும் அவரது திட்டம் நல்லபடியாக நிறைவேறட்டும்!
- வி.சி.நிவேதா, செங்கை.

‘குற்றங்கள் நடக்கும்போது தண்டிப்பதுதான் முக்கியமே ஒழிய, ஒரு விஷயத்தையே குற்றமாக்குவது வேடிக்கை’ என்ற மனுஷ்யபுத்திரனின் வைர வரிகள், எங்கள் சிந்தனைக்கு சிறகுகள் சேர்த்தன.
- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.

‘டெங்கு’ காய்ச்சல் என்றதும் மரணக்கணக்கு மட்டும் போட்டு பீதியைக் கிளப்பாமல், அதன் அறிகுறிகள், வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்... போன்ற ‘உஷார் டிப்ஸ்’களைத் தந்து உங்கள் பொறுப்புணர்ச்சியைக் காட்டிவிட்டீர்கள். நன்றி!
- கண்ணதாசன், திருவண்ணாமலை.

என்னது... தாய்லாந்து நாட்டில் கடலில் மிதக்கும் தியேட்டரா..? அங்க அப்படி ஒண்ணுதானே இருக்கு... நம்ம கிராமத்துப் பக்கமெல்லாம் எல்லா தியேட்டர்களுமே ‘தண்ணி’யிலதான் மிதக்குது!
- ஒய்.வர்ஷா, காஞ்சிபுரம்.

‘கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை, நிலவு வரை சென்று சேர்த்துள்ளது’ என்ற மயில்சாமி அண்ணாதுரையின் வாக்குமூலம், அவரைப் போல் எளிய குடும்பத்தில் பிறந்த இளைஞர்கள் எல்லோருக்கும் வைட்டமின் டானிக்!
- ஜி.கணபதி ராவ், சென்னை-49.

பேசாத கரடி பொம்மைகளும்... பெண்களின் உளவியலும்... இதை உணர்த்தி வந்த ‘வலைப்பேச்சு’ டாப் டக்கர். ஆண்கள்தான் பெண்களை எவ்வளவு நுட்பமாக கவனிக்கிறார்கள்!
- வி.சரஸ்வதி ஏழுமலை, புதுச்சேரி.