கவிதைக்காரர்கள் வீதி





ஒற்றைச்சாவி...
எப்படிக் கொண்டு சேர்க்க?
காலையில் வீதியில் கண்ட
அந்த ஒற்றைச்சாவியை
அதற்கு உரியவனிடம்.

கொஞ்சமும்...
கொஞ்சமும்
எதிர்பார்த்திருக்கவில்லை
தேநீர்க் குவளையை
வைக்கும் ஸ்டாண்டாக
ஒரு கவிதைப் புத்தகத்தை
வைத்திருப்பார்
அந்த புத்தகக் கடைக்காரர்
என்று!

சாயல்...
இரு தளங்களுக்கிடைப்பட்ட
படிக்கட்டுகளில் வைத்து
காதலைச் சொன்ன கணம்
விழிகள் உருட்டி
மருண்ட உன் முகத்தின்
சாயலேதுமின்றி
இருந்தது,
பிரிவதற்காய்
நாம்
தேர்ந்து கொண்ட
ஒரு பிற்பகல் வேளையில்
மூடிய லிப்ட்டின் கதவுகள்
உள் வாங்கிப்போன
உன் முகம்.
- செல்வராஜ் ஜெகதீசன்,
அபுதாபி.