சீவி சீவி உயரத்தை இழந்த குட்டியூண்டு காந்தி பென்சில் மாதிரி இருக்கிறது அந்தக் கருவி. ஆனால் அதுதான் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மகத்தான காரியத்தைச் செய்திருக்கிறது. ‘உலகின் மிகச்சிறிய இதயம்’ என்று அடையாளம் காட்டப்படும் இந்தக் கருவியை 16 மாதக் குழந்தை ஒன்றுக்கு பொருத்தி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றி இருக்கிறார்கள் இத்தாலி டாக்டர்கள்.
அந்த 16 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலேயே தசைக் குறைபாடு நோய் தாக்கியிருந்தது. இதன் காரணமாக குழந்தையின் இதயம் பலவீனமடைய, உடலுக்குள் ரத்தத்தைப் பாய்ச்ச முடியாமல் செயலிழந்தது இதயம். உறுப்பு தானம் செய்கிற யாரையாவது தேடிப் பிடித்து, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்கிற நிலை. உடனடியாக மாற்று இதயம் கிடைக்கவில்லை. அது கிடைக்கிறவரை குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது?
அந்த சமயத்தில்தான் உதவிக்கு வந்தது இது. ‘செயற்கை இதய பம்ப்’ என்கிற இந்தக் கருவியைப் பொருத்தி குழந்தையைக் காப்பாற்றினார்கள் ரோம் நகரின் பாம்பினோ கேசு மருத்துவமனை நிபுணர்கள். 13 நாட்கள் கழித்து மாற்று இதயம் கிடைத்து குழந்தைக்குப் பொருத்தும் வரை இதயத்தின் வேலையை இது செய்தது. டைட்டானியம் உலோகத்தால் செய்யப்பட்ட இந்தக் கருவியின் எடை வெறும் 11 கிராம்தான். (பெரியவர்களுக்கு 900 கிராமில் பெரிய சைஸ் கிடைக்கிறது!) ஒரு நிமிடத்துக்கு ஒன்றரை லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் கொண்டது. ராபர்ட் ஜார்விக் என்ற அமெரிக்க டாக்டர் உருவாக்கிய இந்தக் கருவியை இதுவரை விலங்குகளுக்கு மட்டுமே பொருத்தி சோதனை செய்திருந்தார்கள். அவரிடம் பேசி சம்மதம் வாங்கி, அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறையின் அனுமதி பெற்று, இத்தாலி மருத்துவ அமைச்சகத்திடம் விசேஷ அனுமதி வாங்கி இந்த ஆபரேஷன் நடந்தது.
’’இது மிகப்பெரிய ரிஸ்க் என்பது தெரியும். இருந்தாலும், குழந்தையைக் காப்பாற்ற எங்களுக்கு இருந்த ஒரே சாய்ஸ் இதுதான்! அதில் ஜெயித்தோம் என்பதில் சந்தோஷம். விரைவில் குழந்தை பூரண நலம் பெற்று வீடு திரும்பப் போகிறது’’ என்கிறார் குழுவின் தலைமை சர்ஜன் அன்டோனியோ அமோடியோ. தற்காலிக இதய பம்ப் ஆக இருக்கும் இந்தக் கருவியை இதயத்துக்கு பதிலாக நிரந்தரமாகப் பொருத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் வேகம் பிடித்திருக்கின்றன. இது சாத்தியமானால், மாற்று இதயத்துக்காகக் காத்திருந்து மரிக்கும் துயரங்கள் குறையும்!
- ரெமோ