வாடகை வீட்டில் வசிப்பவர்கள் குற்றவாளிகளா?



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

                         எந்தப் புண்ணியவானின் யோசனையோ... வங்கிக் கொள்ளைச் சம்பவங்களை அடுத்து வட மாநிலத்தவர்களைக் கணக்கெடுக்க ஆரம்பித்த போலீஸார் கூடவே, சென்னையில் வாடகைக்கு குடியிருக்கும் மொத்தப் பேரையும் கணக்கெடுப்புக்குள் கொண்டு வர, கொதித்துப் போயிருக்கிறார்கள் வாடகை குடித்தனவாசிகள். ‘‘எங்கள் எல்லோரையும் குற்றவாளிகளாகப் பார்க்கிறதா போலீஸ்?’’ என்று கேட்கிற அவர்களின் குரலில் அத்தனை சீற்றம்!

‘‘ஒரு அறிவிப்பு வெளியிடறதுக்கு முன்னால, ‘என்ன நோக்கத்துக்காக வெளியிடப்படுது’, ‘எப்படி செய்யணும்’னு எல்லாத்தையும் யோசிக்கணும். சென்னையில இருக்கறவங்கள்ல முக்கால்வாசிப் பேர் வாடகைக்குக் குடியிருக்கறவங்கதான். தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள்ல இருந்து வேலை காரணமா சென்னை வந்தவங்கதான் எல்லாரும். வடமாநிலத்தவரைக் கணக்கெடுத்துட்டுப் போகட்டும்; அதுக்காக மொத்த வாடகைதாரர்களையும் சந்தேகப்படறது எந்த வகையில நியாயம்? ‘வாடகைக்கு இருக்கறவங்களால வெளியில ஏதாச்சும் பிரச்னை வந்தா வீட்டு உரிமையாளரும் பொறுப்பு’ன்னு வேணும்னா சொல்லலாம்.

 அப்படிச் சொன்னா, வாடகைக்கு விடறப்பவே விசாரிச்சு நல்ல ஆளுங்களாப் பார்த்து விடுவாங்க. அதை விட்டுட்டு எங்க போட்டோ, முகவரி யெல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல பதிவு பண்ணணும்னு சொல்றது எங்களோட தனிப்பட்ட உரிமைகளைப் பாதிக்குது. வாடகைக்குக் குடியிருக்கற வங்களைக் குற்றவாளிகளாகவும், உரிமையாளர்களை நியாயவாதிகளாகவும் பார்க்கற மாதிரி இருக்கு இந்த அறிவிப்பு! இப்ப பதிவு பண்ணுங்கிறவங்க, பிறகு அதை வருஷா வருஷம் புதுப்பிக்கணும்னு சொல்வாங்க. எங்களுக்கு இதுதான் வேலையா? சிலர் வீடு சரியாக அமையலைன்னோ, ஓனர்கூட ஒத்துப் போகலைன்னோ அடிக்கடி வீட்டை மாத்திட்டிருப்பாங்க.

 இவங்கல்லாம் ஒவ்வொரு முறையும் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டிருக்க முடியுமா? அறிவிப்பைக் கேட்டதுமே ஏதோ வெளிநாட்டுல இருக்கிற ஃபீலிங் வருது. காவல்துறை உடனே இந்தக் கணக்கெடுப்பை நிறுத்தறதுதான் நல்லது. இல்லாட்டி அதுக்காக நாங்க போராட்டம் நடத்தக்கூட தயங்கமாட்டோம்’’ என்கிறார் வளசரவாக்கம் சுந்தர். இவர் அந்தப் பகுதியில் ‘வாடகைக்குக் குடியிருப்போர்’ நலச்சங்கத்தின் நிர்வாகியாக இருக்கிறார்.

பாடியைச் சேர்ந்த ராகவனோ, ‘‘பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போடறதே அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு தீர விசாரிக்காம வீட்டை வாடகைக்கு விடற சில உரிமையாளர்கள்தான். அவங்களுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர்றதை விட்டுட்டு எங்க மேல பாய்ஞ்சிருக்காங்க. வாடகைக்கு குடியிருந்த சிலர் கொள்ளையில ஈடுபட்டாங்கன்னு மொத்த வாடகைதாரர்களையும் ஸ்டேஷனுக்குக் கூப்பிடுற போலீஸ்,Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine நாளைக்கு ஏதோ ஒரு குற்றத்துல சொந்த வீட்டுக்காரர் ஒருத்தர் சம்பந்தப்பட்டிருந்தா எல்லா உரிமையாளர்களையும் கூப்பிடுவாங்களா? விசாரணைன்னா பல கோணம் இருக்கும்னு கேள்வி ப்பட்டிருக்கோம்தான். ஆனா இந்த மாதிரி அலங்கோலத்தை யெல்லாம் இப்பதான் பார்க்குறோம்’’ என்கிறார்.

சென்னையில் பல பகுதிகளில் வாடகைக்கு வீடு கிடைப்பதே சிரமம். நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு சுலபத்தில் கிடைக்கிறது. அவ்வளவாக தெரியாத நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் நிலைமை சிரமம். வாடகைக்கு வருபவர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையே முன்பின் தெரியாத உறவுதான் இருக்கும். இப்போது இதையே காரணம் காட்டி வாடகையை உயர்த்துவார்கள் என்கிற அச்சமும் பலரிடம் தெரிகிறது. மேலும் வாடகைதாரர்கள் மட்டுமின்றி சில உரிமையாளர்களே இந்த அறிவிப்பால் கதிகலங்கி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் வெறுமனே பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்கிற போலீஸ், போகிற போக்கில் ‘வாடகை விபரங்களைக் கேட்கலாம்’ என்பது அவர்களது பயமாம்.

‘இப்படி பதிவு செய்யச் சொல்வது சட்டரீதியாக சரியானதுதானா’ என தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வத்திடம் கேட்டோம்.

‘‘சட்டபூர்வமா அணுகுனோம்னா, இதுல நிறைய சிக்கல்கள் இருக்கு. ஏன்னா, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இந்தியாவுல எந்த இடத்துலயும் வாழ உரிமை இருக்கு. ஒவ்வொரு மாநிலமும் வெளிமாநிலத்துல இருந்து வந்து தங்கியிருக்கறவங்களைப் பத்தின புள்ளிவிபரம் வச்சிருக்கிறது தப்பில்லை. அதனால, வடமாநிலத்தவரை கணக்கெடுக்கறதை ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையா எடுத்துக்கலாம். ஆனா வாடகைதாரர்கள்னு தனியா பிரிச்சு உள்மாநில மக்களைக் கணக்கெடுக்கறது தேவையில்லாததுதான். உரிமை பாதிக்கப்படுதுன்னா அவங்க எதிர்க்கத்தான் செய்வாங்க. இப்படித் தகவல் தரணும்னு சொல்றது எந்த சட்டப்படியும் சரியானதில்லை’’ என்கிறார் செல்வம்.
  அய்யனார் ராஜன்
படங்கள்: மாதவன்